பேராசிரியர் சம்பத் அமரதுங்க

பேராசிரியர் சம்பத் அமரதுங்க

மாணவர்களைப் பற்றி சிந்தித்து கல்விசாரா ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க

கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் மாணவர்களைப் பற்றி சிந்தித்து பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று (14) தெரிவித்துள்ளார். .

கொழும்பு 7 இல் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்தார்.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தற்போது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் நடத்தப்பட்டு வருவதாகவும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கற்கும் சுமார் 3500 மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமரதுங்க தெரிவித்தார்.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர் கையேடு தயாரிக்கும் பணி ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதும் தாமதமடைந்துள்ளதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.