புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படும் எனப் பொய்ப்பரப்புரை !
வெளிநாடுகளில் தொழில் செய்யும் இலங்கை தொழிலாளர்களால் பணம் அனுப்புவதற்கு வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறி செய்தித்தாள்களில் தவறான தகவல்கள் பரவி வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கணணித் தொழில்நுட்பத்தினூடாக இலங்கையில் இருந்துகொண்டு சர்வதேச நாடுகளுக்கு தங்களது சேவையை ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஏனைய தொழிலாளர்கள் போன்று 15 வீதம் வரையான வருமான வரி அறவிடப்படும் என்ற அறிவிப்பை சில ஊடகங்கள் வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கும் வரி அறிவிடப்படும் என பொய்ப்பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.
2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் அனுப்புவதற்கு 15% வரி விதிக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 2025 பட்ஜெட் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த நேரத்தில், இது பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக எனக்கும் அரசாங்கத்திற்கும் தீங்கு விளைவிக்கும் முயற்சியாகும் எனவும் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
