பா.உ அர்ச்சுனா

பா.உ அர்ச்சுனா

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

பா உ அர்ச்சுனாவுக்கு எதிராக மேலும் மேலும் வழக்குப் பதிவுகள் முறைப்பாடுகள் அதகரித்துச் செல்கின்றது. சகட்டு மேனிக்கு மற்றவர்களைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்தது, மற்றவர்களை தரக்குறைவாக பேசியது என பா உ அர்ச்சுனாவை சட்டங்கள் இறுக்குகின்றன. ரிக் ரொக் சாளினியைச் சொன்னதை சுவஸ்திகா பற்றிச் சொன்னதாக பாராளுமன்றப் பதிவுகள் சுட்டிக்காட்டுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சட்டக்குழு தேடுகின்றது.

மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் என சக பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டிய இடத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ களை கத்தரித் தோட்டத்து வெருளிகள் என அர்ச்சுனா தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது நான் அவர்களை பெயர் சொல்லிச் சொல்லவில்லை என்கிறார். அர்ச்சுனா தற்போது சட்டத்தின் ஓட்டைகளைத் தேடிப்பிடிக்க முயற்சிக்கின்றார்.

அர்ச்சுனாவுடைய போக்குகள் தொடர்பில் அர்ச்சுனா பச்சைக்கொடி காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அர்ச்சுனாவின் குறளிவித்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. “எங்களுடைய கட்சிக்கு என்று பண்புகள் இருக்கின்றது. நாங்கள் பெண்களை மதிக்கின்றோம், எங்களுடைய கட்சி சாதி, பிரதேச வேறுபாடுகள். பார்ப்பதில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றோம். ஆனால் பா உ அர்ச்சுனா இந்த விடயங்களில் திருந்த வேண்டும்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து வெளிவருகின்ற ஜப்னா கலரி காணொலி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

பா உ அர்ச்சுனா போல் மற்றவர்களைக் கொச்சைப்படுத்தி உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் பா உ இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் பீமல் ரத்நாயக்கா காட்டமான பதிலை பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். சாணக்கியனின் அரசியல் வரலாற்றைப் புரட்டிய அமைச்சர் பீமல் ரத்நாயக்கா மோசமான மோசடியாளர்களான ராஜபக்சக்களுடன் அரசியலுக்கு வந்து அவர்களை நியாயப்படுத்தியவர், பாதகமான செய்களில் ஈடுபட்ட பிள்ளையானோடு அரசியல் செய்தவர் என்றெல்லாம் சாணக்கியனை கிழித்துத் தொங்கவிட்டார் அமைச்சர் பீமல் ரத்நாயக்கா. சாணக்கியன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு தங்களுக்கு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அவரின் பண்பாடான நடத்தையை தான் மதிப்பதாகவும் பீமல் அங்கு சுட்டிக்காட்டினார்.

பா உ சிறிதரனின் பாடசாலையாக அறியப்பட்ட கனிஸ்ட்டா மகாவித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிக்கும் ஆசிரியர் அலன் நேற்று கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகப் பரபரப்புக்குள்ளான இச்செய்தி கிளிநொச்சி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வரையான சிறார்களை அங்கிருந்த மலசலகூடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆசிரியர் அலன் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக தன்மீதும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக தற்சமயம் வெளிநாட்டில் உள்ள ஒருவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ரெஜிவொல்க் என்ற காணொலி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தலைவரும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்டார் – நானும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்கின்றேன் – பா உ அர்ச்சுனா

தலைவரும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்டார் – நானும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்கின்றேன் – பா உ அர்ச்சுனா

பெண்களை கேவலப்படுத்தி அவமானப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றத்தில் சிறப்புரிமை தடை செய்யப்பட்டதற்கு எதிரான முறைப்பாட்டை பாராளுமன்ற சபாநாயகரிடம் நேற்று கையளித்தார் பா உ இராமநாதன் அர்ச்சுனா. தன்னுடைய சிறப்புரிமை மீளளிக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தன்னுடைய காணொலியில் சூளுரைத்துள்ளார் பா உ இராமநாதன் அர்ச்சுனா.

இதற்காகவும் அர்ச்சுனா மீது அவரால் பாதிக்கப்பட்ட பலரும் போட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும் வழக்குகளை நடாத்துவதற்கும், தன்னுடைய காரைத் திருத்துவதற்கும், பண உதவி செய்யுங்கள் – ‘பிச்சை போடுங்கள்’ என்று, புலம்பெயர் தமிழர்களை நோக்கி கேட்டு, ஏப்ரல் 8இல் பா உ அர்ச்சுனா ஒரு பதிவை இட்டுள்ளார்.

தான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பணம் பெறுவதை நியாயப்படுத்துவதற்கு அர்ச்சுனா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைத் துணைக்கு அழைத்துள்ளார். வே பிரபாகரனும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பிச்சை எடுத்திருந்தார். நானும் அதனையே செய்கின்றேன் என அவர் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்திருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பல கடுமையான அரசியல் விமர்சனங்கள் உள்ளது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட “விடுதலைப் புலிகளின் தலைவர் தன்னுடைய சொந்த தேவைகளுக்கு பணம் கேட்டார். மோசடி செய்தார்” என்ற குற்றச்சாட்டுக்களை வைப்பதில்லை. ஆனால் வே பிரபாகரனையும் மாவீரர்களையும் வைத்துப் பணம் பறிக்கும் கும்பல்கள் பல உலகின் பல பாகங்கிலும் உருவாகியுள்ளது.

‘பா உ அர்ச்சுனா போல் தலைவரும் பிச்சை எடுத்தார் தானும் அந்த விழயில் பிச்சை எடுக்கின்றேன்’ என வழக்குகளை நடாத்த, காரைத் திருத்த, காசை அனுப்பி வைக்கும்படி கோருகின்றார். சுவிஸில் உள்ள அப்துல்லா என அறியப்பட்ட ரகுபதி ‘தலைவர் குடும்பத்துடன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார். அவருக்கு சிகிச்சையளிக்க பணம் வேண்டும்’ என்று கோருகின்றார். 1990க்களின் முற்பகுதியில் தளபதி கிட்டு லண்டனில் இருந்த போது சொன்னது, “எங்களுக்கு எதிரி ஒரு பிரச்சினையில்லை, அவர்களை எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் எங்களோடு கூட இருப்பவர்கள் தான் மிக ஆபத்தானவர்கள்.” அது போல் புலிகளையும் மாவீரர்களையும் பயன்படுத்துபவர்கள் பற்றி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

பா உ அர்ச்சுனா தொடர்பில் அவருடைய சுயேட்சைக்குழுவில் போட்டியிட தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூவரை வழங்கிய பாதிக்கப்பட்ட பெண் அர்ச்சுனா மீது தங்கள் நவாலிப் பகுதி அண்ணன் ஒருவர் அர்ச்சுனாவுக்கு பணம் அனுப்பியதாகவும் ஆனால் இவர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவே இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனாவின் முதலமைச்சர் கனவு ! போராட்டங்களுக்குத் தடை ! ஜனாதிபதி யாழ் வருகின்றார் ! – குடி நீர் பிரச்சினை பேசப்படுமா ?

அர்ச்சுனாவின் முதலமைச்சர் கனவு ! போராட்டங்களுக்குத் தடை ! ஜனாதிபதி யாழ் வருகின்றார் ! – குடி நீர் பிரச்சினை பேசப்படுமா ?

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை வருகை தரவுள்ளார். இதன்போது யாழ் மாவட்டத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கின்ற குடி தண்ணீர் பிரச்சினை பேசப்படுமா என யாழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இது தொடர்பில் உறுதியான தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும். மேலும் இந்தக் குடி தண்ணீர் மோசடி மற்றும் யாழ் நகரின் மத்திய கழிவகற்றல் பொறிமுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மோசடிகள் பற்றியும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்த நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர், ஆர்ப்பாட்டக் குழுவின் யாழ் மாவட்ட தலைவர், தற்காலிக சுகாதார உத்தியோகத்தர் சங்க தலைவர், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆகிய ஐவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்புவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே அனுராதபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு நேற்று இரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை தனக்கு எதிரான விடயங்களை முன்நிறுத்தி முதலமைச்சராகிவிடலாம் என்ற எண்ணத்தில் சிறகடித்துப் பறக்கின்றார் பா உ அர்ச்சுனா. தான் முதலமைச்சரானால் முதலாவது வேலையாக கலாச்சார மண்டபத்தின் பெயரை ‘யாழ்ப்பாணத் தமிழர் கலாச்சார மையம்’ எனப் பெயர்மாற்றுவேன் எனச் சூளுரைத்துள்ளார். ரென்ட்டுக்கு ஏற்றமாதிரி கொள்கை விளக்கம் வைக்கின்ற பா உ அர்ச்சுனா முதலமைச்சர் என்பது யாழ் குடாநாட்டுக்குள் என்பது போலவும் யாழ்ப்பாணத் தமிழனுக்கு மட்டும்தான் கலாச்சாரம் இருப்பது போலவும் கருத்துக்களை முன்வைத்த வருகின்றார். மேலும் புலித்தோல் போர்த்திய தமிழ் தேசியவாதிகள் போல் தன்னுடைய வாக்கு வங்கியை நிரப்ப ‘தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் துணைக்கு அழைக்கின்றார். இதில் எந்தப் புலிக்குட்டி உண்மையான புலிக்குட்டி என்ற குழப்பத்தில் மக்கள் 2009 முதல் இருக்கின்றனர். இப்ப இன்னுமொரு புலிக்குட்டியும் முதலமைச்சர் கனவோடு களமிறங்கி உள்ளது. ‘அப்ப தலைவர் கனவில வந்து எலெக்சனும் மண்ணாங்கட்டியும் எல்லோரும் பகிஸ்கரியுங்கோ என்று சொன்னா கேட்பினமோ?’

ஜனாதிபதி அனுராவின் வருகையைத் தொடர்ந்து, பாதை திறப்புக்கள், காணி விடுவிப்புக்கள், யாழ் குடிநீர்ப் பிரச்சினை, மீனவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நல்ல செய்திகளை யாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.