மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது !
மாணவி ஒருவரை தடியால் கையில் அடித்தமைக்காக பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வினாத்தாளை திருத்துவதற்காக மாணவர்களிடம் மாற்றிக் கொடுத்த ஆசிரியர், முறைகேடான வகையில் மதிப்பெண்களை தனக்கு அதிகமாக போடுமாறு சக மாணவியை அறிவுறுத்திய மாணவியை அழைத்து கண்டிக்கும் வகையில் அடித்துள்ளார். இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றையதினம் கைது செய்த பருத்தித்துறை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை ஒன்று கைதுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
