நாசா

நாசா

சிறுநீரில் இருந்து குடிப்பதற்காக நீர் – நாசாவின் முயற்சி வெற்றி!

விண்வெளி வீரர்கள் வெளியேற்றும் கழிவுகளில் இருந்து நீரை மறு சுழற்சி செய்யும் முயற்சியினை நாசா முன்னெடுத்து வந்திருந்த நிலையில் அதில் சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில் இம் முயற்சியை தீவிரப்படுத்தினால் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான நீரை உடல் கழிவைச் சுத்திகரிப்பு செய்வதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த முயற்சி முழுமையாக வெற்றி அடைந்தால் வரும் காலங்களில் விண்வெளி வீரர்களின் தேவையை இலகுவாகப் பூர்த்தி செய்யமுடியுமெனவும், மனித கழிவுகளையும் கனிசமாகக் குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இச் சோதனை முயற்சி வெற்றியடைந்தால் எதிர்காலத்தில் விண்வெளிப் பயணம் மேலும் எளிதாகும் எனவும் நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மணிக்கு 160 கி.மீ தூரம் – மின்சார விமானத்தை அறிமுகம் செய்கிறது நாசா !

அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.

இத்தாலியின் டெக்னம் பி2006டி விமானத்தை மாற்றியமைத்து பரிசோதனை முயற்சியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் லித்தியம் பேட்டரியால் இயங்ககூடியது. இந்த விமானத்துக்கு எக்ஸ்-57 என பெயரிடப்பட்டுள்ளது. இதன் இறக்கையில் 14 புரொபல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 இருக்கைகள் கொண்ட சிறிய விமானமாக எக்ஸ்-57 தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் இறக்கைகள் மிக நீளமாக உள்ளன. இவற்றை தேவையற்ற நேரத்தில் மடித்துக் கொள்ள முடியும். வழக்கமான பெட்ரோலிய எரிபொருளை பயன் படுத்தும்போது, எரிபொருள் தீர தீர, விமானத்தின் எடை குறையும்.

 

பேட்டரியில் இருந்து கிடைக்கும் சக்தி அதன் எடை மற்றும் அளவை பொருத்ததாக உள்ளது. அதிலிருந்து கிடைக்கும் சக்தியும், வழக்கமான விமான எரிபொருளில் இருந்து கிடைக்கும் சக்தியைவிட 50 மடங்கு குறைவாக உள்ளது. தற்போது குவாண்டம் தொழில்நுட்பத்தில் பேட்டரிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை வேகமாக சார்ஜ் செய்ய முடியும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பேட்டரிகளில் லித்தியம் பேட்டரி சிறப்பானதாக உள்ளது. ஆனாலும் அவற்றின் எடை அதிகமாக உள்ளது. லித்தியம் எளிதில் தீப்பிடிக்ககூடியது என்பதால், அது தீங்கு விளைவிக்கும் அபாயமும் உள்ளது.

நாசா உருவாக்கியுள்ள எக்ஸ்-57 மின்சார விமானத்தில் 160 கி.மீ தூரம் வரை பறக்கலாம். இதற்கு ஒரு மணி நேரம் ஆகும். பரிசோதனை முயற்சியாக தயா ரிக்கப்பட்டுள்ள இந்த மின்சார விமானம் இந்த ஆண்டு பறக்க விடப்படவுள்ளது.

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி – விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1 !

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்தது. முதற்கட்டமாக மனிதர்கள் இல்லாமல் ஆர்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன.

இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து ராக்கெட்டை விண்ணில் ஏவ கடந்த ஆகஸ்டு மாதம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று முன்தினம் (14ம் திகதி) ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்திருந்த நிலையில் சூறாவளி புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து 16ம் திகதி (இன்று) ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா தெரிவித்தது. அதன்படி நேற்று நள்ளிரவில் புளோரிடாவில் உள்ள கேப் கானவரல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாரான நிலையில் திடீரென்று ஹைட்ரஜன் வாயு கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ராக்கெட்டை ஏவுவதற்காக கவுன்ட்- டவுன் நடந்தபோதும் மறுபுறம் வாயு கசிவை சரி செய்யும் பணி நடந்தது. இதனால் ஆர்டெமிஸ் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. கோளாறை சரிசெய்தபின் இன்று மதியம் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வாயு கசிவு காரணமாக ராக்கெட் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர்.

நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது. விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.