கல்வித்துறை, தொழில்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு முக்கியம் ஆளுநர் வலியுறுத்து !
வடமாகாணத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் வளர்ச்சி செய்ய கல்வித்துறை, தொழில்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தூய சக்தி மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான ‘நனோ’ (நுண்ணணு தொழில்நுட்பம்) திரவியங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு – 2025 மாநாட்டில் தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய ஆளுநர், வட மாகாணம் கடந்த காலங்களில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு மீண்டும் வளர்ச்சிக்கான பாதையில் பயணிக்கிறது. எனினும், தூய்மை ஆற்றல் மற்றும் சுகாதாரம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இன்னும் பல முன்னேற்றங்கள் தேவை. நம்பகமான மற்றும் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்காமையால் பொருளாதார வளர்ச்சிக்கு அது தடையாக உள்ளது. கிராமப்புற சமூகங்கள் பெரும்பாலும் மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. இது கைத்தொழில், விவசாயம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை பாதிக்கிறது. சூரிய சக்தி, காற்றாலை மற்றும் உயிரி ஆற்றல் உள்ளிட்ட இயற்கை எரிசக்தி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் தீர்வுகளின் முன்னேற்றம், மேற்படி சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக பயணிப்பதற்கு உதவும் என்றார்.
