திபாகரன்

திபாகரன்

‘றோ இன்றி ஒரு புலியும் அசையாது’ பாவம் தலைவர்: அழித்தவர்களின் முகவர்களே டென்மார்க்கில் அஞ்சலியும் செய்தனர்!

கார்திக் மனோகரன் தன்னுடைய சித்தப்பாவான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் அஞ்சலி செய்ய முற்பட்ட நிகழ்வு, தலைவரை அவமானப்படுத்துவதாகவும் அவர் உயிரோடு இருக்கும் வரை வாழ்ந்த லட்சியக் கனவை வன்புணர்வு செய்ததாகவும் அமைந்தது எனத் தெரிவிக்கின்றார் முன்னாள் பெண் போராளியான விமிலினி சிவநேசன். இறுதி யுத்தத்திற்கு முன்னரே போராட்டத்தில் தனது காலை இழந்த அவர் தம்பி கார்த்திக் மனோகரன் சித்தப்பாவிற்கும் அவர் குடும்பத்திற்கும் அஞ்சலி வைக்க வேண்டும் என்று எடுத்த முடிவை தான் வரவேற்றதாகத் தெரிவித்த விமிலினி, அதனை அவர் தங்கள் குடும்ப நிகழ்வாக எல்லோரையும் அழைத்து செய்திருக்க வேண்டும். அதனை விடுத்து தலைவரின் இலட்சியங்களுக்கு விரோதமான புல்லுருவிகளை அழைத்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது, தலைவரின் இலட்சியங்களை வன்புணர்வு செய்ததற்குச் சமன் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் 2009 இலேயே வீர வணக்க அஞ்சலியைச் செய்திருக்க வேண்டும். அது 15 ஆண்டுகள் கடந்து தற்போதாவது நிகழ்கின்றதே என்ற எண்ணம் வே பிரபாகரனின் இலட்சியக் கனவில் பயணித்த பலருக்கும் இருந்தது. அவர்களும் வெளியே இருந்து நிகழ்வின் உண்மைத் தன்மை தெரியும் வரை வரவேற்றனர். ஆனால் நிகழ்வில் இந்திய உளவுத்துறையான றோ தமிழீழம் வாங்கித் தரும் என்று சன்னதமாடும் பாரதிய ஜனதா கட்சி சங்கிகள் நிகழ்வை நடத்தினார்கள் என்ற பின்னணி வெளியே வந்ததும் இந்நிகழ்வு பிரபாகரனின் இலட்சியக் கனவை வன்புணர்வு செய்ததாகவே அமைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது அரசியலற்ற பார்வை தொடர்பிலும் அதீத இராணுவ பிரம்மை தொடர்பிலும் கடும் விமர்சனங்கள் இருந்த போதும் தன்னையும் தனது குடும்பத்தையும் தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த அந்த இலட்சியம் தொடர்பில் அவரது எதிரிகளும் கூட முரண்படவில்லை. பிரபாகரனுக்கு ஒரு விடுதலைப் போராளியான கௌரவத்துடனும் மரியாதையுடனும் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். தன்னிடம் தோற்றுப்போன எல்லாளனைக் கௌரவித்தவன் துட்டகைமுனு. இன்றும் அந்த கௌரவம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் தற்போது இந்திய உளவுப்பிரிவான றோ வுக்கும் மோடிக்கும் சங்கூதிக்கொண்டு பிரபாகரனனுக்கு அஞ்சலி செய்வது மிக வேடிக்கையானது.

இந்திய அமைதிப்படை காலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் காட்டிக்கொடுத்து, பல புலி உறுப்பினர்களையும் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குக் தலையாட்டிக் காட்டிக்கொடுத்தவர் ‘சுக்லா’ என்றழைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர். இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கு மரண தண்டனை விதித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அன்று யாழ்ப்பாணத்திலிருந்து சுக்லா வை இந்திய இராணுவம் தனது ஹெலிகொப்டரில் கொண்டு வந்து கட்டுநாயக்காவில் தரையிறக்கியது. 90களில் சுக்லா புலம்பெயர்ந்து பாரிஸில் தரையிறங்கினார். அன்று புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு ஆட்பற்றாக்குறை இருந்ததால் புலிகளைக் காட்டிக்கொடுத்தவர்களும் புலிகளால் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர்களும் புலிகளால் மரண தண்டணை விதிக்கப்பட்டவர்களும் புலம்பெயர் தேசங்களில் தீவிர புலிகளாக இயங்க ஆரம்பித்தனர். அவ்வாறு மாறியவர்களுள் சுக்லாவும் குறிப்பிடத்தக்கவர். தற்போதும் பிரான்ஸில் தான் இவர் வாழ்கின்றார். பாம்பு கூரூப் என்ற வன்முறைக் குழுவின் பின்னணியிலும் இவர் இருந்தவர். பாரிஸில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் பின்னணியிலும் இவர் இருந்துள்ளார். குறிப்பாக பாரிஸ் சபாலிங்கத்தின் படுகொலையை இவரது குழுவே மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது. தற்போது கனடாவில் வாழும் முன்னாள் சுவிஸ் பொறுப்பாளர் முரளியின் நெருங்கிய நண்பர் சுக்லா. சுவிஸில் பாம்பு கூரூப் உருவாக்கப்பட்டதே முரளிக்கு சில பல காரியங்களைச் செய்வதற்காகவே. சபாலிங்கத்தின் படுகொலையில் முரளியினதும், சுக்லாவினதும் கரங்கள் இருப்பதாகவே தற்போதும் நம்பப்படுகின்றது.

இவ்வாறானவர்கள் பிரபாகரனுக்கு இறுதி அஞ்சலி கொண்டாடும் அவல நிலை ஏனைய அமைப்புகளின் தலைவர்களுக்கு ஏற்படவில்லை. பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்ட சிறிசபாரத்தினம், பத்மநாபா, அ அமிர்தலிங்கம் போன்றவர்களும் சரி பிரபாகரனால் படுகொலை செய்யப்படாத உமா மகேஸ்வரனானாலும் சரி அவர்களுக்கான நினைவு நிகழ்வுகள் அவர்கள் இறந்த நாள் தொடக்கம் அவர்களது அமைப்பினால் ஒரு அரசியல் உரையாடல் நிகழ்வாக முன்னணி அரசியல் செயற்பாட்டாளர்களின் அரசியல் உரைகளோடு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

முப்பது வருடங்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு தலைவனுக்கு றோ தமிழீழம் பெற்றுத் தரும் இந்தியாவை எதிர்க்காமல் அணி திரண்டு வாருங்கள் என்று போராட அழைக்கின்றது இந்த றோ கும்பல். இவர்கள் 2009 மேல் ஒரு தடவை மரணித்த வே பிரபாகரனதும் அவரது குடும்பத்தின் மீதும் கோசலம் அடித்து அவமானப்படுத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நேசக்கரம் அமைப்பின் சாந்தி வவுனியன் அரசியல் ஒழுக்கமற்ற ஒருவர். இவர் 2009இற்கு பின் தமிழகத்திற்கு தப்பி வந்த பெண் போராளிகளோடு தொடர்பு கொண்டு மரியாதைக் குறைவாக அவர்களோடு உரையாடியவர். சில தகவல்களை வைத்துக்கொண்டு கதைகளைப் புனைந்து தனது விருப்பு வெறுப்புக்கமைய குழுசார்பு மனப்பான்மையுடன் செயற்படுபவர். பசையுள்ள இடத்தில் ஒட்டிக்கொள்ளும் இவர் ஐபிசி பாஸ்கரனையோ சுபாஸ்கரனையோ கூட அடுத்த தேசியத் தலைவர் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிகழ்ச்சியில் மாவீரன் பிரபாகரன் உரை நிகழ்த்திய நிலா என்ற பாலநந்தினி பாலசுப்பிரமணியம், றோ தமிழீழம் பெற்றுத்தரும் தலைவர் பிரபாகரன் இந்தியாவுடன் மோதியது தான் அவரது தவறு இல்லாவிட்டால் இந்திய றோ வே தமிழீழம் பெற்றுத் தந்திருக்கும் என்கிறார். அக்கூட்டத்தில் தலைவர் பிரபாகரன் இறந்தாலும் அவருடைய இலட்சியங்கள் இறக்கவில்லை என்று சொல்லும் நிலா, றோ வோடு சேர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுக்க அழைப்பு விடுக்கின்றார். இந்த திபாகரன் – நிலா கூட்டின் மதியுரைஞர் தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசு. மு திருநாவுக்கரசு, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பழ நெடுமாறன், வெற்றிச் செல்வன் ஆகியோர் நேரடியாகவே றோவின் பராமரிப்பில் உள்ளவர்கள். இவர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிச் செயற்படுபவர்கள்.

ஈழ அரசியலில் றோ இன்றி ஒரு புலியும் அசையாது என்ற நிலையே தற்போதுள்ளது. தற்போது அரசியலில் ஈடுபடுபவர்களில் புலித்தேசியம் பேசுகின்ற அல்லது புலிகளுக்காக வக்காலத்து வாங்குகின்றவர்கள் மிகப்பெரும்பாலானோர் இந்திய, இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகளோடு சேர்ந்து செயற்படுபவர்களாகவே உள்ளனர். இதற்கு தமிழ் நாட்டில் கலையகத்தை வைத்துச் செயற்படும் ஐபிசியும் லங்காசிறியும் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. இந்திய உளவுத்துறைக்குச் சேவகம் செய்ய இவர்கள் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றனர்.

றோ வின் ஒரு பிரிவு பழ நெடுமாறன் கவிஞர் காசி ஆனந்தன் அணி துவாரகா வந்துவிட்டார், பிரபாகரன் வந்துகொண்டிருக்கிறார், அவருக்குப் பின்னால் மதிவதனி வருகிறார் என்று கதையளக்க, முன்னாள் இந்திய இராணுவ மேஜர் மதன்குமார் அதற்கு ‘பில்ட்அப்’ கொடுக்கின்றார். மறுபக்கம் றோவின் மற்றைய பிரிவு மு திருநாவுக்கரசு வழிகாட்டலில் இயங்கும் திபாகரன் – நிலா கூட்டு துவாரகா வரவில்லை. தலைவரும் வரமாட்டார், மதிவதனியும் வரமாட்டார். அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செய்வோம் என்று கார்த்திக் மனோகரனின் நிகழ்வை தங்களுடைய நிகழ்வாக ஹைஜாக் பண்ணி ஒரு விடுதலைப் போராளியின் நிகழ்வில் கோசலம் அடித்துள்ளனர்.

இவ்வாறு மற்றவர்களுடைய நிகழ்வுகளில் புகுந்து அவற்றை ஹைஜாக் பண்ணுவதை தங்களுடைய திறமை என்று றோவின் ஈழத்தமிழ் ஊதுகுழலாகச் செயற்படும் லங்காசிறியிலும் ஐபிசியிலும் மார்தட்டி வருகின்றார் திபாகரன். தமிழரசுக் கட்சியின் பிரித்தானியக் கிளையைக் கைப்பற்ற இவர்கள் போட்ட திட்டத்தை தேசம்நெற் அம்பலப்படுத்தி இருந்தது. அரசியலில் ஏடே தொடங்கியிராத கார்த்திக் மனோகரன் சித்தப்பாவுக்கும் குடும்பத்துக்கும் நிகழ்த்திய வீரவணக்க நிகழ்வில் றோ – மோடி கூட்டம் கோசலம் அடித்தது மிகக் கேவலமானது. ஒரு காலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் வைக்கும் கூட்டங்களில் தங்களைப் புலிகளாகக் காட்டிக்கொள்ளும் இவ்வாறான விரோத சக்திகள் புகுந்து அட்டகாசம் பண்ணுவது வழமை. இப்போது அவர்கள் தங்கள் தலைவனின் வீரவணக்க நிகழ்வையே அவ்வாறு அசிங்கப்படுத்துகின்றனர்.


இந்திய புலனாய்வுத்துறையும், இந்திய இராணுவத்தால் பயிற்றப்பட்ட இலங்கைப் புலனாய்வத்துறையும் இணைந்தே இறுதி யுத்தத்தை நடத்தியதாக அதன் பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தற்போது கனடாவில் வாழும் இவர் தான் இலங்கைச் சிறையில் நான்காம் மாடியில் இருந்த போதும் தன்னைக் கைது செய்ததும் விசாரணை செய்ததும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் என்று தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவு என்றொன்று இலங்கையில் இல்லை என்றும் அங்கு இருப்பதும் இந்திய புலனாய்வுப் பிரிவால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்தியாவின் நலன்களுக்காகப் பணியாற்றும் புலனாய்வுப் பிரிவு என்றும் அவர் தெரிவித்தார்.

றோ இன்றி ஒரு புலியும் அசையாது என்பது போல் பிரபாகரனும் அவரது குடும்பத்தில் ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டது இந்திய புலனாய்வுப் பிரிவு. அதன் படி அக்குடும்பத்தையே படுகொலை செய்தவர்களின் முகவர்கள் அக்குடும்பத்திற்கு வீரவணக்கம் செலுத்த, ஆயிரம் ஆயிரம் போராளிகளும் மக்களும் அதனை வேடிக்கையாக கடந்து செல்கின்றனர். பாவம் பிரபாகன். அவருக்கு ஒரு கௌரவமான வீர வணக்கத்தை ஈழத்தமிழர்கள்: ஒடுக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம், மலையக மற்றும் சமூகங்களுடனும் ஒடுக்கப்பட்ட உலக மக்களோடும் இணைந்து சுயவிமர்சனத்தோடு செய்ய வேண்டும்.