தமிழ் ஆசிரியர்கள்

தமிழ் ஆசிரியர்கள்

ஆசிரியர்களைப் பேசி அனுப்பிய அதிகாரியின் நடத்தையைக் கண்டு வெட்கப்பட்ட ஆளுநர் வேதநாயகன்!

ஆசிரியர்களைப் பேசி அனுப்பிய அதிகாரியின் நடத்தையைக் கண்டு வெட்கப்பட்ட ஆளுநர் வேதநாயகன்!

தனக்குக் கீழுள்ள சில அதிகாரிகளின் செயற்பாடுகளைக் கண்டு தான் வெட்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் நா வேதநாயகன் டிசம்பர் 22இல் தெரிவித்துள்ளார். கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கலாச்சாரப் பெருவிழாவிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் வடக்கில் சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவது சவால் எனத் தெரிவித்தார். ஆளுநர் என்ன நடந்தது என்பதையும் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

ஆளுநர் வேதநாயகன், தொலைபேசியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அடுத்த நிலையில் உள்ள ஒருவரை அழைத்து, ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை அவரிடமே அனுப்பியும் உள்ளார். குறித்த அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, ஆசிரியர்களை இரவு 7 மணிக்குத் தான் சந்தித்துள்ளார். அப்போது ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசித் திருப்பி அனுப்பி இருக்கின்றார். “இவ்வாறான அலுவலர்கள் எங்களுடைய மாகாணத்தில் எனக்குக் கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இன்றைய இளையோர் மற்றவர்களை மதிக்கின்ற உதவி செய்கின்ற விழுமியங்களை வெளிப்படுத்துகின்றார்கள் இல்லை எனக் குறைப்பட்டார், தவறுகளை தட்டிக்கேட்க முடியாத நிலை இருக்கின்றது எனத் தெரிவித்தார். வீதிகளில் குப்பை போடுகின்றோம், வெள்ள வாய்க்காலை மறித்து, கட்டிடங்களைக் கட்டுகின்றோம், ஒழுக்கமில்லாத சமூகமாக மாறிவருகின்றோம் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஆளுநர் வேதநாயகன். இந்தப் பண்பாட்டு விழாவிலும் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக வந்திருப்பதையும் மக்கள் சமூகம் தராததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.