தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள்

இந்துசமுத்திரத்தை பாலைவனமாக்கும் தமிழக மீனவர்கள் – கச்சதீவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

இந்துசமுத்திரத்தை பாலைவனமாக்கும் தமிழக மீனவர்கள் – கச்சதீவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களினதும் தமிழக மீனவர்களினதும் பொருளாதாரத்தை தமிழக மீனவர்கள் அழிக்கிறார்கள் என்கிறார், கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர். இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாக கச்சத்தீவில் தமிழக மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சர் சந்திரசேகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முறை கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. இம்முறை பங்கேற்றிருந்தனர். கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையென்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை. இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை. அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது.

எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிப்பதாலுமே கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல்வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலைவனம் ஆகக்கூடும். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என்றார் அமைச்சர் இராமலிங்கம்.

அத்துமீறும் இந்திய மீனவர்களை பா உ சிறிதரன் பார்வையிட்டார் ! பாதுகாக்கும் படி பாஜாக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ! பாதிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிடுகின்றது !

அத்துமீறும் இந்திய மீனவர்களை பா உ சிறிதரன் பார்வையிட்டார் ! பாதுகாக்கும் படி பாஜாக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ! பாதிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிடுகின்றது !

இலங்கையின் வடக்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிட்டுவிடு உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்குகின்றன. ஆனால் தமிழகத்தின் பாஜாக தலைவர் அண்ணாமலை அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் வரும் மீனவர்களை நடுக்கடலில் வைத்து கைது செய்வதாகக் கூறி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை உடனடியாக நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் அண்ணாமலை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அத்துமீறும் இந்திய மீனவர்கள், தங்கள் பொருளாதாரத்தை அழிக்கிறார்கள் என்று போராடிய போது அவர்களைக் கண்டுகொள்ளாத பா உ எஸ் சிறிதரன் அத்துமீறிய போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை யாழ் சிறையில் சென்று பார்வையிட்டு அவர்களது நலன்களை விசாரித்து அறிந்தார்.

அத்துமீறி வந்து வடக்கின் மீன்வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களுக்கு அங்குள்ள கட்சிகள் பெரும் ஆதரவை வழங்குகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களைப் பற்றி தமிழ் தேசியக் கட்சிகள் மௌனமாகவே இருந்து வருகின்றன. பாராளுமன்றத்திலோ, மாகாணசபையிலோ, உள்ளுராட்சி சபைகளிலோ பன்மைத்துவ அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததும் அதற்குக் காரணமாக உள்ளது என்கிறார் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த். தமிழ் தேசிய அரசியலை சைவ வெள்ளாள மேட்டுக்குடி ஆண்களே பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஏனைய சமூகங்களின் வலியை இந்த தமிழ் தேசியவாதிகளால் உணரமுடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கிடையே நேற்று எழுவைதீவு அனலைதீவு கடற்பரப்பில் 200 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் காரைநகர் மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வடக்கிற்கான கேரளா கஞ்ஞா மற்றும் போதைப்பொருட்களின் நுழைவாயிலாக வடக்கு கடற்பரப்பு உள்ளது. இந்திய மீனவர்களே அதனை இலங்கைக்கு கொண்டுவருகின்றனர் என்பதும் தற்போது உறுதியாகி உள்ளது.

வடக்கின் தமிழர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகின்ற போதும் தமிழ் தேசியத் தலைமைகள் இது விடயத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க மறுத்துவருகின்றனர். கடந்த வியாழக்கிழைமை வடக்கு மீனவர்கள் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் தமிழகத்தில் ராமேஸ்வரத்திலும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2024இலிருந்து 535 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

வடக்கு மீனவர்கள் விடயத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமே அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். கிளிநொச்சி நீதமன்றமும் தண்டனைகளை அபராதங்களை சற்று கடுமையாக்கி வருகின்றது. தமிழரசுக் கட்சியின் பா உ ரவிகரன் மீனவர்கள் விடயத்தில் தனித்துக் குரல் எழுப்பியுள்ளார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாகவே உள்ளனர்.

வடக்கு மீனவர்களின் பிரச்சினையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் இந்திய அரசுக்கு அழுத்தங்களை வழங்கி வடக்கு மீனவர்களின் பிரச்சிகைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இது விடயத்தில் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் பிரச்சினையை சரியானமுறையில் இனம் கண்டுள்ளார். அவருடைய கூற்றுப்படி தமிழகத்தில் உள்ள அப்பாவி மீனவர்களைப் பயன்படுத்தி தமிழக அரசியல் செல்வாக்குடையவர்களும் பெரும் பணமுதலைகளும் லாபமீட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்திய கடற்படை இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதற்கு முடிவுகட்ட வேண்டும். கேரளா கஞ்சா வடகடற்பரப்பிற்குள் நுழைவதற்கு முடிவு கட்ட வேண்டும்.

 

தொடரும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி ! இலங்கை – இந்திய கூட்டு ரோந்து சற்லைற்கள்…?

தொடரும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி ! இலங்கை – இந்திய கூட்டு ரோந்து சற்லைற்கள்…?

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடல்த்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடரும் இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்த இந்திய – இலங்கைக் கடற்படையினரின் கூட்டு ரோந்து பற்றி இருநாட்டு அரசுகளும் சிந்திக்க வேண்டும் என சில மீனவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். சற்லைற்களைப் பயன்படுத்தி தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர் அம்மீனவர்கள்.

இதேவேளை மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கறுப்பு கிறிஸ்துமஸ் ஆக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும் மீனவர்களின் உறவினர்கள், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் மோடியை சந்தித்திருந்த போது மீனவர் பிரச்சினை முக்கிய பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி இடம்பெற்றுக் கொண்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருந்து ரோலர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களால், இலங்கையின் வடக்கு கடல்வளம் சீரழிந்து வருவதுடன் மீன்வளமும் மீனின் இனப்பெருக்க வட்டமும் சிதைந்து வருவதாக சூழலியலாளர்களும், இலங்கை மீனவர்களும் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது !

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழக மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.