ஜீ.எல்.பீரிஸ்

ஜீ.எல்.பீரிஸ்

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. – ஜீ.எல்.பீரிஸ்

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து கிடையாது, செல்லுப்படியற்றது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளையும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (12)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு அமைய நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது முற்றிலும் சட்டத்துக்கு விரோதமானதொரு செயற்பாடு.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் ஊடகங்களினதும்,ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம் சட்டவிரோதமானது.இந்த சட்டத்தை சாதாண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமாயின் பெரும்பாலான ஏற்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டும்,அவ்வாறு இல்லையெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் மிக தெளிவாக வியாக்கியானம் வழங்கியுள்ளது.

இந்த சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களில் ஐந்து முக்கிய திருத்தங்கள் பாராளுமன்ற குழுநிலை வேளையின் போது சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கும்,சபாநாயகருக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.

இலங்கையிக் புகழ்பெற்ற நீதியரசரான மார்க் பெர்னான்டோ, உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது ‘சபாநாயகரால் சான்றுரைக்கப்படும் சட்டமூலம் அரசியலமைப்பின் விதிவிதானங்களுக்கு அமைவானதாக அமையாவிடின்  அவ்வாறான சட்டங்களுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்காது’ என தெளிவாக வாதிட்டுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.ஆகவே இந்த சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து கிடையாது,செல்லுப்படியற்றது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல ந்டவடிக்கைகளும் சட்டவிரோதமானது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படு;த்துவேன்.

இந்த ஆண்டு தேசிய தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.நிகழ்நிலை காப்புச் சட்டத்தை செயற்படுத்தினால் இலங்கையின் மனித உரிமைகளை சவப்பெட்டியில் அடக்கம் செய்ய வேண்டும்.

ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு அனைவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கிறார். ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு மத்தியில்  சிறந்த மாற்றத்தை ஒருபோதும் உருவாக்க முடியாது என்றார்.

“39 இராஜாங்க அமைச்சர்களை நீக்க வேண்டும்.”- ஜீ.எல்.பீரிஸ்

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என்றால் முதற்கட்டமாக 39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்க வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இவர்களுக்கு 340க்கும் மேற்பட்ட வாகனங்கள், எரிபொருள், சம்பளம், ஊழியர்கள், சலுகைகள் போன்றவற்றுக்கு பாரிய தொகை செலவிடப்படுவதாக கூறினார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எனவே 39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்கிவிட்டால் செலவிடப்படும் அந்த தொகையை மிச்சப்படுத்த முடியும்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு இராஜாங்க அமைச்சர் கூட இல்லாமல் ஒரு வருட காலம் நாட்டை ஆட்சி செய்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக அரசாங்கம் நிதி இல்லை என கூறி விளையாடுவதால் எவ்வித பயனும் கிடைக்காது என்றும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

“பியூஸ்லஸ் மரணம் தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவர கடிதம்!

தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மரணம் அதன் உண்மை தன்மை தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டக்சன் பியூஸ்லஸியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது''

இவ்விடயம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமை (2) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தின் பனங்கட்டு கொட்டு கிழக்கு கிராமத்தை தனது பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர் தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ். இவர் 2018 முதல் இன்று வரை இலங்கையின் தேசிய கால்பந்து அணி வீரராக இருந்து வருகிறார்.

தனது விளையாட்டு திறமையால் பல சாதனைகளை படைத்த ஓர் சிறந்த வீரன். இந்த விளையாட்டு துறையில் தன்னை முற்றும் முழுவதுமாக ஈடுபடுத்தி தன்னை வளர்த்துக் கொண்டு தனது மாவட்டத்திற்கும், தாய் நாட்டிற்கு புகழை தேடித் தந்தவர். தன்னை முழுவதுமாக கால்பந்திற்காக அர்ப்பணித்த வீரன்.

அவருடைய விளையாட்டு திறமையின் நிமித்தம் மாலைதீவுக்கு வலன்சியா விளையாட்டு கழகத்தினரால் அழைக்கப்பட்டு அந்த கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி அங்கும் பல சாதனைகள் படைத்து பல வெற்றிக்கு வழி வகுத்தவர்.

இவ்வாறானதோர் சிறந்த விளையாட்டு வீரனின் (26.02.2022) அகால மரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

“தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியா எந்த அழுத்தமும் தரவில்லை.” – ஜீ.எல்.பீரிஸ்

“தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிடம் இருந்து எவ்வித அழுத்தமும் பிரயோகிகக்கப்படவில்லை.” என  இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சீனாவுடனான  உறவு குறித்தும் இந்திய ஊடகங்களிற்கு ஜி.எல்.பீரிஸ் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நல்லிணக்கம் மற்றும் வடக்கு, கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்கள் தொடர்பாக சிங்கள பெரும்பான்மையினரிடமிருந்து போதுமான ஒருமித்த கருத்து எட்டப்படாவிட்டால் எந்த முடிவையும் செயற்படுத்த முடியாது.

மேலும் புதிய அரசியலமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று இரண்டு மாதங்களுக்குள்  அரச தலைவரிடம் வரைவை சமர்ப்பிக்கும் என தெரிவித்த அவர்,  நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சீனாவுடனான  உறவு குறித்தும் இந்திய ஊடகத்திற்கு  கருத்து வெளியிட்டிருந்தார். குறிப்பாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கும் பணம் என்பன குறைந்தமை காரணமாக நிதி அழுத்தத்திற்கு முகம் கொடுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கிடையிலான மின்சார இணைப்பு மற்றும் கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி குறித்தும் பேசப்பட்டதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் கிடைக்குமாக இருந்தால் அது பாரியளவில் நன்மை பயக்கும் என்றும் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி இரண்டு, மூன்று மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிடம் இருந்து எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் அதில் அதிகாரப் பகிர்வு குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

“13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள்.” – ஜீ.எல்.பீரிஸ்

13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மத்தியில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் நிலவும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக கவனம் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நேற்று (சனிக்கிழமை) ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவைத் திட்டத்தின் கீழ் உரையாற்றியதோடு யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழுவையும் சந்தித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்குவதும் அவர்களுக்கு காணிகளை வழங்குவதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, 13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அத்தோடு, அதற்கேற்ப குழுவொன்று நியமிக்கப்பட்டு 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பதவி விலகுகிறாரா வெளிவிவகாரத்துறை அமைச்சர்..? – பேராசிரியர் ஜீ.எல் பீரிஸின் நிலைப்பாடு என்ன..?

வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்  பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவுடன்  இணக்கமாக செயற்பட முடியாது. ஆகவே அமைச்சு பதவியை துறக்க தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றது.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவுடன்இணக்கமாக செயற்பட முடியாது. ஆகவே வெளிவிவகாரத்துறை அமைச்சர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறார்கள் என்றும் தெரிவித்த அவர் பிரித்தானியாவுடனான தொடர்பின் தன்மைகள் பற்றி குறிப்பிட்ட போது ,

அண்மையில் பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட அரசமுறை பயணம் இலங்கைக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. பல்துறைசார் அபிவிருத்தி தொடர்பில் பிரித்தானிய இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டன.

பிரித்தானியா இலங்கையுடன் முதலீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் தொடர்பு கொள்ள அதிக கவனம் செலுத்தியுள்ளது. பிரித்தானியா ‘பிரெக்ஸிட்’ தீர்மானத்திற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து அதற்கு சிறந்த சந்தை வாய்ப்புக்கள் அவசியமாகியுள்ளன.

பொதுச்சபை தீர்மானங்களுக்கமைய பிரித்தானியா இலங்கையுடன் பல்துறைகளில் தொடர்பு கொள்ள தீர்மானித்துள்ளது. இலங்கையில் கொரோனா தாக்கத்தின் பின்னரான பொருளாதார முன்னேற்றம், தென்னாசிய வலய நாடுகளை காட்டிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தலில் முன்னேற்றம், ஏனைய பொது காரணிகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு பிரித்தானியா இலங்கையில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமாயின் சர்வதேசத்தின் நம்பிக்கையை வெல்வது அவசியமாகும். இலங்கை உலக நாடுகள் அனைத்தினதும் நம்பிக்கையை வென்றுள்ளது. பிரித்தானியாவின் தீர்மானம் அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும்.

“துமிந்த சில்வாவுக்கு அநீதி நடந்துள்ளது. ஜனாதிபதி அவருக்கு நியாயத்தை வழங்கினால், எவரும் அதனை தவறு எனக் கூற முடியாது” – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

“துமிந்த சில்வாவுக்கு அநீதி நடந்துள்ளது. ஜனாதிபதி அவருக்கு நியாயத்தை வழங்கினால், எவரும் அதனை தவறு எனக் கூற முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் கல்வி அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை தொடர்பான விடயங்கள் அண்மையில் இலங்கை அரசியலில் பெரிய பேசுபொருளாகியுள்ள நிலையில் அது தொடர்பான விடுதலை மனு ஒன்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரும் கையெழுத்திட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் முன்னர் வழக்கை விசாரித்த நீதிபதியிடம் அறிக்கை ஒன்றை கோருவார். சட்டமா அதிபரிடம் கருத்துக்களை கேட்டறிவார்.

அதன்பின்னர் குற்றப்பத்திரிகை தொடர்பில் வாதாடிய சட்டத்தரணிகளிடம் கருத்துக்களை கேட்பார். இந்த அறிக்கைகளை ஜனாதிபதி நீதியமைச்சருக்கு வழங்க வேண்டும். இந்த அறிக்கைகளை ஆராந்த பின்னர் ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைக்கப்பட வேண்டும். இதுதான் நடைமுறை. ஜனாதிபதி தனியாக தீர்மானிக்க முடியாது. இது சம்பந்தமாக தீர்மானிக்க மூன்று தரப்பினர் உள்ளனர். நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சர் அகியோரே அந்த மூன்று தரப்பினர்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் எப்படி சட்ட நடவடிக்கைகள் கையாளப்பட்டன. நீதிமன்றத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதா, நீதிபதிகள் எப்படி வழக்கை விசாரித்தனர்.அரசியல்வாதிகள் நேரடியாக தலையிட்டனரா என்பன தொடர்பான சாட்சியங்கள் இருந்தால் அனைத்தும் அறிக்கையில் வெளியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் புதியதை கற்றுக் கொள்வதற்காக பொருத்தமான கல்வியை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும் – பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ்

நாட்டில் நடைமுறையிலுள்ள கல்வி முறையில் மாற்றம் மேற்கொள்ளப்படுவது அவசியமெனவும் தற்போது நடைமுறையிலுள்ள கல்வி முறைமையில் குறைபாடுகள் காணப்படுவதால் மாணவர்கள் உரிய முறையில் தமது கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என்பதையும் புதிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று (18.08.2020) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று மேலும் தெரிவித்த அமைச்சர்,

கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போதைய கல்வி முறை நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்பதை சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

அதற்கிணங்க அடுத்த மாதம் நாடு முழுவதும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

பாடநெறிகளை நவீனமயப்படுத்துவது, பாடங்களின் எண்ணிக்கை, பாடவிதானங்களின் தன்மை, கற்பிக்கப்படும் முறைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் போதே மாணவர்கள் சுதந்திரமாக சிந்தித்து தைரியத்துடன் கற்க முடியும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எதையாவது சிந்தித்துக் கொண்டு பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்று பரிட்சையில் அமர்வது கல்வி முறையின் நோக்கமல்ல.எமது நாட்டில் அதுபோன்றதொரு கல்வி முறையே உள்ளது. சகல குறைபாடுகளும் நீக்கப்படவேண்டும்.

புதிய விடயங்கள் உள்ளீர்க்கப்படவேண்டும்.மாணவர்கள் புதியதை கற்றுக் கொள்வதற்காக பொருத்தமான கல்வியை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.க வை பாதுகாக்கும் செயலையே கடந்தகாலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்தது ! – பேராசியர் ஜீ.எல்.பீரிஸ்

நாட்டில் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இனி ஒருபோதும் தெரிவிக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதனை கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொது தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில் இம்முறை 10 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழ் மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதலான கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கை கிடைத்துள்ளதாக பீரிஸ் இதன் போது தெரிவித்தார்.

மேலும்கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் வகையில் ஐ.தே.க.வின் ஆட்சியை பாதுகாப்பதற்காக சட்டம் உள்ளிட்ட அரசியல் ஆலோசனைகளை கூட்டமைப்பே வழங்கி வந்தது என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், அந்த பெரும்பான்மைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதரவு வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனைவிட, 13ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபைக்கு 36 அதிகார கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவற்றை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் ஜீ.எல். பீரிஸ் இதன் போது கூறியுள்ளார்.