செல்வராசா கஜேந்திரன்

செல்வராசா கஜேந்திரன்

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

 

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். அண்மையில் சமூக வலைத்தளங்களில், “தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் …” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன.

குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பொன்றை நடாத்தி அவை போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம், “விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன், அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர், குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது பொலிஸ் நிலையத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அதேவேளை தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி பொலிஸார் வாக்கு மூலம் வழங்க என நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் 02 மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணிலின்  உண்மை முகத்தை மறைப்பதற்காக தேச விரோதிகளான எம்.ஏ சுமந்திரனும் மற்றும் சி.வி விக்னேஸ்வரனும் பொய் பிரச்சாரத்தை செய்கின்றார்கள் – கஜேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்காக ஒரு தளத்தை போட்டுக்கொண்டிருந்த ரணிலின்  உண்மை முகத்தை மறைப்பதற்காக தேச விரோதிகளான எம்.ஏ சுமந்திரனும் மற்றும் சி.வி விக்னேஸ்வரனும் பொய் பிரச்சாரத்தை செய்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த தகவலை அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரப்புகளின் எடுபிடி முகவராக இருக்கின்ற ரணிலுக்கு வெள்ளையடித்து தமிழ் மக்களை நம்ப வைத்து மீண்டும் அவருக்கு வாக்களிக்க சுமந்திரன் சதி செய்கின்றார்.

எனவே தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களுடைய கருத்துக்களை நம்பி ஏமாற கூடாது.

சுமந்திரன் மற்றும் இந்திய மேற்கு தரப்பின் விருப்பத்தின் அடிப்படையில் ரணிலை பலப்படுத்தி பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் முள்ளிவாக்கால் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது திட்டமிடப்பட்ட சதி” என அவர் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை தாக்கி உயிராபத்தை ஏற்படுத்திய அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.” – பிரதமர் தினேஷ் குணவர்தன

திருகோணமலையில்  திலீபனின் ஊர்தி பவனியின் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது குண்டர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்குவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. கொட்டன்கள் கொண்டு தாக்கி நாடாளுமன்ற உறுப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குழுவினர் கைது செய்யப்படுவார்கள்.

இந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

நாட்டில் இன வன்முறையை மீண்டும் தூண்டச் சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது.” என்றார்.

“இன கலவரத்தை உருவாக்க எண்ணிய பெரும்பான்மை தலைவர்களின் பின்னணியில் கஜேந்திரன் தாக்கப்பட்டுள்ளார்.” – வேலுசாமி இராதாகிருஸ்னண் கண்டனம் !

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தழிழ் சிங்கள மக்களிடையே இன கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் தேர்தலில் வெற்றியைப் பெரும் நோக்கத்தை கொண்ட பெரும்பான்மை தலைவர்களின் பிண்ணனியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டால் மாத்திரமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்னண் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலையில் விகாரை அமைப்புக்கு எதிராக போராட்டம் !

திருகோணமலை நீதிவான் நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சட்ட விரோதமான முறையில் திருகோணமலை பகுதியில் அமைக்கப்படவிருக்கும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

இதேவேளை குறித்த போராட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி நேற்று தடை விதித்துள்ளார்.

இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விகாரை அமைப்பதற்கு ஆதரவாக செயற்படும் பௌத்த பிக்குகள் உள்ளிட்டோரும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீர்வுகள் ஏதுமின்றி முடிவுக்கு வந்தது தையிட்டி கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டம், நேற்று இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்தக்கட்ட செயற்பாடு தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு என போராட்டகாரர்கள், கடந்த மூன்று நாட்களாக பதாகைகளை தாங்கியவாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்த மயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும்.”- நாடாளுமன்றில் கஜேந்திரன் !

“இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.” என இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று சபையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”இன அழிப்புப் போரின்போது, மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது. இசைப்பிரியா போன்றவர்கள் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்டனர். பாலச்சந்திரன் போன்ற சிறார்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.

உணவுத் தட்டுப்பாடு மற்றும் மருந்து தட்டுப்பாடு என்பன இன அழிப்புப் போரில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

எனவே, இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும்.

திட்டமிட்ட அடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும். தமிழர்களிடமிருந்து தலைவர்களைத் தேடுங்கள், மாறாக முகவர்களைத் தேட வேண்டாம். எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி தீர்வை முன்வைக்கவும்” – என்றார்.

“எங்கள் மீதும் இலங்கை அரசாங்கம்  தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கிறது.” – செல்வராசா கஜேந்திரன்

“உள்ளக பொறிமுறையால் எங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. ஆகவே ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையினுடைய ஆணையாளருடைய அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அவ் அறிக்கை இலங்கை அரசை கண்டிப்பதாக இருக்கின்றது. அதில் மாற்று கருத்துகள் இல்லை. ஆனாலும் கடந்த காலங்களிலே சில சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் ஆணையாளர் மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசாங்கத்திடம் இந்த பொறுப்பு கூறலுக்கான ஆர்வம் இல்லை. இலங்கை அரசாங்கத்தினுடைய அரச இயந்திரங்களுடைய கட்டமைப்புகள் இனவாதத்துக்குள் மூழ்கிப் போய்விட்டன. அவை ஒரு நடுநிலையான விசாரணை நடத்த தகுதி அற்றன. ஆகவே சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களையெல்லாம் வலியுறுத்தி இருந்தார்கள்.

ஆனால் இம்முறை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான கருத்துக்கள் எதுவும் இல்லை. அவ்வாறு அதனை பார்க்கின்ற போது இதுவரைக்கும் ஆணையாளருடைய அறிக்கைகளில் வலியுறுத்தப்பட்ட விடயங்களை முற்றாக புறக்கணித்து மனித உரிமைகள் பேரவையில் நாடுகள் தீர்மானங்களை இயற்றுகின்ற போது வெறுமனே இலங்கை தொடர்பான விவகாரத்தில் ஒரு பிடியை வைத்து கொள்வதற்காக ஒரு தீர்மானத்தை, நிறைவேற்றினார்களே தவிர உள்ளக விசாரணைக்கான வாய்ப்புகளை கொடுத்து இலங்கை அரசை தங்களுடைய வழிக்கு கொண்டு வருவதற்காகவே தவிர தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய முடிவுகளும் பொறுப்புக் கூறல் தொடர்பாக இதுவரையில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அதன் காரணமாக நாங்கள் ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். மனித உரிமைகள் பேரவையுடைய ஆணையாளருடைய அறிக்கை, ஓரளவுக்கு எங்களுக்கு ஆறுதல் கொடுப்பதாக இருந்திருக்கிறது. அவர் அங்கு நடந்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்துகின்ற போது அதன் அடிப்படையில் தொடர்ந்து ஒரு கருத்துருவாக்கத்தை செய்து அதை நோக்கி செல்வதற்கு எங்களுக்கு அது ஒரு உந்து சக்தியாக இருந்தது.

ஆனால் அந்த விடயங்களை எல்லாம் நீர்த்துப்போக செய்யப்பட்டு அவர்களுடைய அறிக்கை கூட அமைந்திருப்பது என்பது படிப்படியாக இவர்கள் அந்த பொறுப்பு கூறல் விடயத்தை மூடி மறைக்க அனைவரும் சேர்ந்து முற்படுகிறார்களா? என்கின்ற ஒரு சந்தேகத்தைத்தான் எங்களுக்கு ஏற்படுத்துகின்றது.
எங்களை பொறுத்தவரையில்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  உள்ளக பொறிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளக விசாரணை மூலமாக எங்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்காது. நாற்பத்தாறு ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று ஒரு ஆண்டு கடக்கிறது.

இது வரைக்கும் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. எங்களை பொறுத்தவரையிலே ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்த விடயம் காலம் தாமதிக்காமல் நாடுகள் முடிவை உடனடியாக எடுத்து ஐசிசி க்கு கொண்டு செல்லுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இன்று சிரியா – உக்ரேனில் நடைபெறுகின்ற போரிலே தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. எங்கள் மீதும் இலங்கை அரசாங்கம்  தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கிறது. அதற்கான ஆதாரங்களையும் பாதிக்கப்பட்ட தரப்புகளால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் சர்வதேச விசாரணையை நோக்கி கொண்டு செல்வதற்கு எந்த விதமான முயற்சிகளும் இல்லை. அவர்கள் வெறுமனே எங்கள் மக்கள் மீது நடந்த இந்த இனப்படுகொலைகள், குற்றங்கள், போர் குற்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி இலங்கை மீது ஒரு நாணயத்தை வைத்துக்கொண்டு தங்களுடைய பூகோள பிராந்திய ஆதிக்க நலன்கள் விடயத்திலே சீனாவிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு அழுத்த கருவியாக மட்டும்தான் அதை பயன்படுத்துகிறார்களே தவிர தமிழ் மக்களுக்கு நீதி கொடுப்பதற்காக அவர்கள் இலங்கை விடயத்தில் நடந்து கொள்கிறார்கள் என்பது மிகப் பெரிய ஒரு ஏமாற்றம்.

எங்களை பொறுத்தவரையிலே இந்த மனித உரிமைகள் பேரவை செப்டம்பர் மாதம் வரைக்கும் காத்திருக்காமல் இலங்கை அரசு ஒரு போதும் பொறுப்பு கூறல் செய்யப் போவதில்லை. உள்ளக பொறிமுறையால் எங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. ஆகவே ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகிறோம் என மேலும் தெரிவித்தார்.

“இலங்கையில் பொலிஸாரினால் தவறாக வழிநடத்தப்படும் நீதிமன்றங்கள்.” – செல்வராசா கஜேந்திரன்

இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

சர்வதேச நாடுகளில் பொலிஸ் மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கும் கவசமாக இருக்கும் நிலையில், இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக அவை செயற்படுகின்றன என அவர் குற்றம் சுமத்தினார்.

பொலிஸ் துறையினால் நீதிமன்றங்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.அவர்கள் தவறாக நீதிமன்றங்களை வழிநடத்துகிறார்கள் எனத் தெரிந்தும் அரசாங்கத்தின் இறுக்கம் காரணமாக நீதிமன்றங்கள் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.அதற்கமைவாகவே, மாவீரர்கள் தின நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“கைதுகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடக்க முடியாது.” – எம்.கே.சிவாஜிலிங்கம்

“கைதுகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடக்க முடியாது.” என  தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று   திலீபனுடைய நினைவுத்தூபி அமைந்திருந்த இடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் மேலும் இருவரையும் கைது செய்ததுடன் சில பெண்களையும் தாக்கி மிகக் கீழ்த்தரமாக காட்டுமிராண்டித்தனமாக பொலிசார் நடந்துகொண்ட காணொளி காட்சிகளை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. உலகத்திலே நினைவேந்தல் உரிமையை மறுப்பது என்பது ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கையாகும்.

ஆட்சித் தலைவரான ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் உரையாற்றி விட்டு அங்கிருக்கின்ற நேரத்தில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் தடையுத்தரவு இன்று ஆரம்பிப்பதற்கு முந்தைய தினமே பொலிஸார் தடைபோட ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடக்க முடியாது. எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் கட்சி பேதங்களைக் கடந்து நினைவேந்தல்களை பாரியளவில் செய்வதுதான் இவர்களுக்கான சரியான பதிலடியாக இருக்கும் என்றார்.