சி.கருணாகரன்

சி.கருணாகரன்

“எந்த ஓர் கிராமத்தில்  மாணவர்கள் படிக்கிறார்கள் இல்லையோ – கல்வியில் பின்தங்கியுள்ளார்களோ அந்த பாடசாலையையே சேவைக்காக நான் தெரிவு செய்வேன்.” – சிவஜோதி ஞபாகார்த்த விருது விழாவில் திருமதி ஜெயா மாணிக்கவாசகன் !

அமரர் வ.சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கலும் “யார் எவர் –  கிளிநொச்சி 2023” நூல் வெளியீடும்.

No description available.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான அமரர் வயீத்தீஸ்வரன் சிவஜோதி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி இடம்பெறும் வருடாந்த சிவஜோதி விருது வழங்கும் நிகழ்வும்  கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் –  கிளிநொச்சி 2023” நூல் வெளியீடும் இன்றைய தினம் (18.11.2023) லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய வளாகத்தின் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்ற பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகள் பலர் சங்கமமாகி இருந்த இன்றைய நிகழ்வுகளுக்கு கிளிநொச்சி மாவட்ட எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான சி.கருணாகரன் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.
No description available.
அமரர் சிவஜோதி அவர்களின் தந்தை சி. வயித்தீஸ்வரன் அவர்கள் நினைவுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வின் ஆரம்பத்தில் வண பிதா சி.யோசுவா, முத்துக்குமார குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரநாத சர்மா ஆகியோரால் ஆசியுரை வழங்கப்பட்டது.
No description available.
ஆசியுரையை வழங்கிய வண பிதா சி.யோசுவா அவர்கள் கருத்து தெரிவித்த போது “ஜோதி நான் பழகிய மனிதர்களுள் அற்புதமான மனிதர். இந்த யார் எவர் என்ற ஆளுமைகளை வெளிக்கொண்டு வர ஜோதி எனும் சோதி தேவைப்பட்டிருக்கிறார். ஒரே ஒரு துக்கம் என் மனதில் இன்று வரை உள்ளது. சோதி உயிரோடு இருந்த போது நாம் யாரும் அவரை கொண்டாடத்தயாராக இருக்கவில்லை. இன்று நாம் கொண்டாடும் போது ஜோதி எம்முடன் இல்லை. இருந்தாலும் இன்று இந்த நிலை மாறியிருக்கிறது. கிளிநொச்சி இன்று அனைவரையும் உயிரோடு இருக்கும் போதே கொண்டாடும் ஓர் ஆரோக்கியமான நிலை உருவாகியிருக்கிறது. எத்தனை இடி இடித்தாலும், மழை அடித்தாலும் ஜோதி எனும் சோதி அணைந்து விடாது எம்முடன் கூடவே பயணிக்கும் ஒளியாகும்.“ என தெரிவித்திருத்தார்.
No description available.
ஆசியுரையை வழங்கிய முத்துக்குமார குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரநாத சர்மா அவர்கள் பேசpய போது “ஜோதி அவர்களுடன் பழக எனக்கும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் பக்தியான நபரும் கூட. ஆன்மீகம் சார்ந்த விடயங்களை தெளிவாக பேசுபவர். சமூக சார்ந்து ஆழ்ந்து சிந்திக்கும் ஓர் மனிதர் இன்று எம்முடன் இல்லை. ஆனாலும் கடவுள் ஒருவரை படைக்கும் போது அவருடைய கடமைகளையும் பிரித்தளித்து விடுகின்றார். கடமைகள் முடியும் போது அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்க வேண்டும். அந்த அடிப்படையில் இன்று இந்த நாளை காணும் போது ஜோதி தன்னடைய கடமைகளை செவ்வனே முடித்துவிட்டார் என்பதை அறிய முடிகின்றது.“ என தனது ஆசியுரையை அவர் வழங்கியிருந்தார்.
No description available.
தொடர்ந்து சி.கருணாகரன் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. தலைமையுரையில் பேசிய கருணாகரன் அவர்கள், “ சிவஜோதி நினைவுகூறும் வகையில் அவருடன் தொடர்புபட்ட எல்லோரும் இங்கு ஒன்று கூடியிருக்கின்றோம். சிவஜோதியின் பணிகளை முன்னெடுத்து செல்லவேண்டியது நம் அனைவரது பொறுப்புமாகும். ஜோதி வாழும் காலத்திலே நாம் அவரை புரிந்து கொள்ள தவறிவிட்டோம். அவரை போல வேறு எந்த ஆளுமைகளும் இறக்கும் வரை நாம் காத்திருக்காது ஆளுமைகளை வாழுங்காலத்திலேயே நாம் கொண்டாட வேண்டும். இந்த கருத்தையே சோதி என்ற ஒளி எம்மிடம் விட்டு சென்றுள்ளார் என்பதன் தொடர்ச்சியே இன்று வெளியிடப்படும் யார் எவர் என்ற நூலாகும். சிவஜோதியின் ஆளுமை பண்பு நன்கு விஸ்தீரனமானது. நமது சூழலில் உள்ள ஆளுமைகள் அனைவரையும் இனங்கண்டு அவர்களுடன் சமூக மாற்றத்துக்காக இணைந்து செயற்பட்டவர். அவர் எம்மிடையே விட்டுச்சென்ற பணிகளை நாம் முன்னோக்கி நகர்த்த வேண்டும். இளையதலைமுறையை உருவாக்குவதற்காகவும் – ஆற்றுப்படுத்தவும் செயற்பட்ட சிவஜோதியை நாம் நினைவுநாளில் மட்டுமே கொண்டாடாது எப்போதும் அவர் விட்டுச்சென்ற பணிகளை சிரத்தையுடன் செயற்படுத்த வேண்டும். இவ்வாறாக நாம் ஆழ்ந்து யோசிக்கும் ஓர் சமூகமாக உருவாதலும் அதற்காக செயற்படுதலுமே இந்த நாளை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.“ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
No description available.
தலைமையுரையை தொடர்ந்து சிவஜோதி எனும் ஆளுமை தொடர்பான நினைவுப்பேருரை கலாநிதி ந.இரவீந்திரன் அவர்களால் வழங்கப்பட்டது. நினைவுப்பேருரையில் பேசிய கலாநிதி ந.இரவீந்திரன் அவர்கள் “சமூக செயற்பாட்டாளருக்கான வகிபாகத்துடன் இயங்கும் ஊடகத்துறை ஆளுமை என்ற தலைப்பில் பேச நான் தீர்மானித்துள்ளேன். ஏனெனில் சிவஜோதி ஓர் சமூக ஆளுமை மட்டுமல்ல. ஓர் ஊடகவியலாளரும் கூட என்ற அடிப்படையில் இந்த தலைப்பு பொருத்தமானதாயிருக்கும் என எண்ணுகிறேன். சிவஜோதி எம்மை விட்டு நீங்கவில்லை எம்முள் இன்னுமொரு பிறப்பை எடுத்து நிற்கிறார் என்பதையே இந்த பிறந்தநாள் நினைவுதினம் எடுத்துக்காட்டுகின்றது. இன்று ஊடகத்துறை மிக வேகமாக வளர்ந்துள்ளது. இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் குழந்தைகளின் இறப்புக்களை கூட நம் வீடுகளில் கூட நடைபெற்றதை போல கவலைப்படுகின்றோம். இதற்கு காரணம் ஊடகங்கள் தான். இன்று ஜனநாயகத்தின் வழியாக மக்கள் யுகம் வளர்ந்துள்ளது. இந்த ஜனநாயகத்தை தாங்கும் தூண் ஊடகமாகும். இன்று ஊடகங்கள் சமூகப் பொறுப்புடன் இயங்குகின்றனவா என்றால் கேள்விக்குரியது. 50வருடங்களுக்கு முன்பு ஊடகங்கள் முடியுமானவரை சமூகப்பொறுப்புடன் இயங்கின என உறுதியாக கூற முடியும். யாழ்ப்பாண மண்ணில்  அன்றும் இன்றும் சாதிய வெறி தலைவிரித்தாடிக்கொண்டிருக்கின்றது. நான் யாழ்ப்பாணத்தான் என்ற மேலாதிக்கத்திமிர் யாழ்ப்பாணத்தில் இருந்த போது 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் 21  ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சாதிய ஒடுக்குமுறை தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும் என்ற பதாகையின் கீழே எல்லா சாதியினரும் இணைந்து சாதிய முறைமைகளுக்கு எதிராக கோசமிட்டனர் இது தொடர்பான அனைத்து பதிவுகளும் அன்று எல்லா ஊடகங்களிலும் வெளிவந்தன. அது போல தொழிலாளர் உரிமைகள் தொடர்பான விடயங்களும் ஊடகங்களிலும் வெளிவந்தன. இவ்வாறு ஊடகங்கள் சமூகப்பொறுப்புடன் செயற்பட்டன. உலக மயமாதல் என்ற எண்ணக்கரு 1990களில் உருவாகும் வரை சோவியத்யூனியன் சமவுடமைக்கருத்துக்களை விதைப்பதில் வெற்றி கண்டிருந்தது. அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக ரஸ்யா காணப்பட்டது. எனினும் ரஸ்யா சிதைந்த பிறகு அமெரிக்கா உலகமயமாதல் என்ற கருத்தியலின் கீழ் உலக நாடுகளை போட்டு நசுக்க ஆரம்பித்தது. இதன் பின்னணியில் நமது நாடுகளில் காணப்பட்ட சுயதேவைப்பூர்த்தி பொருளாதார முறை நசுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு சார்பான நான் உருவாக்குவதை நீங்கள் வாங்குங்கள் என்ற ஓர் பொருளாதார கொள்கை ஒன்று தோன்றியது. இந்த காலத்திலேயே ஊடகத்துறையை அமெரிக்கா ஆக்கிரமித்தது. இதன் பின்பு ஊடகம் தனது சுயாதீனத்தை இழந்து கொண்டது. இன்று பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சினையிலும் இதுவே நீடிக்கின்றது. ஆனால் இன்று டொலர் தான் எல்லாமும் – அமெரிக்கா ஒற்றை மையம் என்ற கருத்து தகர்க்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஜனநாயகம் என்பது மக்களுக்கானதாக மாறியுள்ளது. எனவே ஊடகவியலாளர்களே சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.” என அவர் குறிப்பிட்டார்.
No description available.
கலாநிதி ந.இரவீந்திரனின் நினைவுப்பகிர்வை தொடர்ந்து சிவஜோதியின் சகோதரர் வயித்தீஸ்வரன் சிவப்பிரகாஷின் நினைவுப்பகிர்வு இடம்பெற்றது. அதில் பேசிய சிவப்பிரகாஷ் “ ஜோதியின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். நானும் ஜோதியும் ஒரே உதிரத்தில் பிறந்திருந்தாலும் இருவரும் இருவேறு உலகத்தை சேர்ந்தவர்கள். ஜோதியின் உலகத்தை பார்க்க இது ஒரு அருமையான வாய்ப்பு என்பதற்காக நான் இங்கு வருகை தந்தேன். என்னுடைய வாழ்க்கையில் புதிய மனிதர்களோடு பழகினாலும் கூட கதைகளில் வருவது போல சுலபமாக ஜோதியை கடந்து போக முடியாது. ஜோதி ஒரு போராளி. சிறுவயது முதலே சமூகத்தின் ஈர்ப்பை பெற்றவர் ஜோதி.” என குறிப்பிட்டார்.
No description available.
தொடர்ந்து அமரர் சிவஜோதி தொடர்பிலும்  கிளிநொச்சி மாவட்டத்தின் சமகால  நிலை தொடர்பிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு சந்திரகுமார் அவர்களால்  உரையாற்றப்பபட்டது. குறித்த உரையில் பேசிய முருகேசு சந்திரகுமார் “ சிவஜோதி எனும் ஆளுமை மறைந்து 3 ஆண்டுகள் ஆனாலும் கூட அவர் ஆற்ற வேண்டிய சேவைகளை  நாம் தொடர்கின்றோம் என்பது மகிழ்வாக உள்ளது. எங்கள் மத்தியில்  இன்னம் அதிக ஆளுமைகள் உருவாக வேண்டும். ஆளுமைப்பண்பு  அனைவரிடமும் உள்ளது. அதனை வெளிக்கொண்டு வர நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று பல ஊடகங்கள் ஆளுமை இல்லாதவர்களை, மக்களுக்கு எதுவுமே செய்யாதவர்களை அரசியல் தலைவர்களாக்கியுள்ளார்கள். இடதுசாரியம் ஆரம்பகால எமது உரிமைப்போராட்டத்தில் முக்கிய இடத்தை பெற்றாலும் இன்று இடதுசாரியம் பற்றி தெரியாதவர்களை எல்லாம் ஊடகங்கள் அரசியல் தலைவர்களாக்கியுள்ளார்கள். மக்களின் உரிமைப்போராட்டங்கள் பற்றியெல்லாம் இன்றைய தொலைக்காட்சி ஊடகங்களும் பத்திரிகைகளும் பேசத்தயாரில்லை.  தமக்கு லாபம் தரக்கூடிய முதலாளிகளை மட்டுமே கொண்டாடுகின்றன. இன்று தான்  ஐ.பி.சி நிறுவனத்திலும் சிவஜோதி பணியாற்றியதாக அறிந்துகொண்டேன். ஜோதி அதில் இருந்திருந்தால் இன்று நமது பல பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்திருப்பார். ஆளுமையான இளைஞர் தலைமுறையை உருவாகவும் – இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாம் செயற்பட வேண்டும். இன்று இளைஞர்கள் திசைமாற்றப்பட்டுள்ளார்கள். முன்னேறுவதை விட்டுவிட்டு எந்த ஏஜென்சி வெளிநாட்டுக்கு அனுப்புவான் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழர் பத்து வீதம் கூட இல்லை. இந்த நிலையில் வடக்கு – கிழக்குக்கான அபிவிருத்தி எவ்வாறானதாக இருக்கும் என்பதே கேள்விக்குரியதாகிவிட்டது. மிகக்குறைவான சனத்தொகையை உடைய தமிழரிடத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவிட்டதும் ஒழுக்கமற்ற சமூககட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்துவதும், வெளிநாட்டில் இருந்து காசு குடுத்து பெட்ரோல் குண்டு வீசுவதும் தான் இன்றைய ஊடகங்களின் தலைப்புச்செய்திகளாகியுள்ளன. ஆக்கபூர்வமான சமூக முன்னேற்றத்துக்கான விடயங்கள் எவையுமே ஊடக உள்ளடக்கத்தில் இல்லை. இந்த நிலையிலேயே ஜோதி பற்றி நினைக்கிறேன். அவர்கள் போன்றவர்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு எதிராக கட்டாயம் குரல் கொடுத்திருப்பார்கள். அப்படியானவர்களை நாம் இழந்து விட்டோம் என்பதையிட்டு கவலையடைகிறேன்.“ என குறிப்பிட்டிருந்தார்.
No description available.No description available.No description available.
No description available.No description available.No description available.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் 100 ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் கிளிநொச்சி 2023” என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது. நூலின் முதற்பிரதி அமரர் சிவஜோதி அவர்களின் தந்தையால் சிரேஷ்ட சட்டத்தரணி திரு.சோ.தேவராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது.
No description available.
மேலும்  நூல் தொடர்பான வெளியீட்டுரை திருமதி பிரியன் டிலக்சனா அவர்களால் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சிவஜோதி ஞாபகார்த்த வருடாந்த விருதும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
No description available.No description available.
கிளிநொச்சி மாவட்டத்தில்   கல்விச்சேவையின் மூலம் சமூக மாற்றத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி ஜெயலட்சுமி மாணிக்கவாசனுக்கு இந்த விருது மற்றும் பணப்பரிசு ஆகியன வழங்கப்பட்டன. இந்த விருதை கலாநிதி ந.ரவீந்திரன் அறிவிக்க சிவஜோதியின் குடும்பத்தினர் வழங்கி வைத்தனர். தொடர்ந்து லிட்டில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் ஸ்தாபகரான திரு.தம்பிராஜா ஜெயபாலன் அவர்களின் வாழ்த்துச்செய்தி காணொளி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டது.
No description available.
குறித்த வாழ்த்துச்செய்தியில் “திருமதி ஜெயலட்சுமி மாணிக்கவாசகன் அவர்கள் பொறுப்பேற்க முன்னர் கல்வி நிலையில் மிக்க பின்தங்கிய நிலையில் காணப்பட்ட  அம்பாள்குள கல்வி நிலையை முன்னோக்கி நகர்த்தியதிலும் அப்பாடசாலையை மையமாக கொண்டு அக்கிராமத்தின் கல்வி நிலையை வலுப்படுத்தியதிலும் திருமதி ஜெயலட்சுமி மாணிக்கவாசகன் காத்திரமான பங்களிப்பை ஆற்றியதால் கிளிநொச்சி மற்றும் தமிழர் கல்விச்சூழலில் நன்கு அறியப்பட்டவராக மாற்றமுற்றார். இந்த நிலையிலையே ஜெயலட்சுமி மாணிக்கவாசகன் அவர்களின் கல்விப்பணியை பாராட்டி சிவஜோதி ஞாபகார்த்த விருதின் அன்பளிப்பு தொகையான இந்த ஒருலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. வழமையாக ரூபா ஒரு லட்சம் இந்த விருது அன்பளிப்பு தொகையாக வழங்கப்பட்டாலும் கூட இந்த வருடம் மட்டும் ஜெயலட்சுமி மாணிக்கவாசகன் பணிபுரியும் பாடசாலையின் இணைய வசதியை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த தொகையை நாம் வழங்குகின்றோம்.“ என தெரிவித்திருந்தார்.
சிவஜோதி ஞாபகார்த்த வருடாந்த விருது பெற்றுக்கொண்ட கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி ஜெயலட்சுமி மாணிக்கவாசன் அவர்களின் உரை இடம்பெற்றது.  குறித்த உரையில்
No description available.
“ எல்லோரும் கூறியது போல ஓர் சமூகப்போராளியாக எங்களுடைய பாடசாலையுடன் மிக நெருக்கமான தொடர்புகளை கட்டியெழுப்பியவர் சிவஜோதி. வழமையாக  லிட்டில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்பது போலவே இன்றைய நாளிலும் கலந்து கொண்டிருந்தேன். இருந்தாலும் இந்த விருது அறிவிப்பு பற்றி இப்போதே தெரியும். பெரும்பாலும் நான் என்னுடைய சேவைக்கான விளம்பரப்படுத்தலை எதிர்பார்ப்பதில்லை. 2011ஆம் ஆண்டு விவேகானந்தா வித்தியாலயம் சின்னதான ஒரு கொட்டில் போட்டு திரு.முருகேசு சந்திரகுமார் அவர்களால்  ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  எனினும் சிலர் என்னைப்பார்த்து இந்த பாடசாலையை ஆரமப்பிப்பது தேவையற்ற விடயம் பயனில்லாததது என்றார்கள். அப்போது நாம் நம்பிக்கையுடன் நகர்ந்தோம். அதன் விளைவு நாம் பெறுபேறுகள் சார்ந்தும் சமூக மாற்றம் தொடர்பிலும் பல வெற்றிகளை பெற்றுள்ளோம். தேசிய அளவில் பல சாதனைகளையும் எமது பாடசாலை பதிவு செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது. GREEN AND CLEAN SCHOOL 2017 விருதினை இலங்கையின் 5 பாடசாலைகளே பெற்றிருந்தன. குறித்த விருது  சிங்கள பாடசாலைகள் நான்கிற்கும் ஒரே ஒரு தமிழ் பாடசாலைக்கும் வழங்கப்பட்டிருந்தது. அந்த தமிழ் பாடசாலை நமது பாடசாலையேயாகும். இப்படியாக பல துறைகளில் நமது பாடசாலை நிமிர்ந்துள்ளது. அண்மையில் என்னுடைய இடமாற்றம் தொடர்பில் பலரும் வினவியிருந்தனர். ஆனால் நான் ஒரு விடயத்தில்  உறுதியாக இருக்கிறேன். எந்த ஓர் கிராமத்தில்  மாணவர்கள் படிக்கிறார்கள் இல்லையோ – கல்வியில் பின்தங்கியுள்ளார்களோ அந்த பாடசாலையையே நான் தெரிவு செய்வேன். என்னுடைய சிறிய சமூக சேவையை மதித்து ஜெயபாலன் அண்ணா மற்றும் ஏற்பாட்டுக்குழுவினர் இந்த விருதினை வழங்கியமைக்காக நான் மனமகிழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எமது பாடசாலை பழைய மாணவர்கள் பொருளாதார ரீதியில் இன்னமும் வலிமையான நிலையில் இல்லாத நிலையில் இந்த தொகை எமக்கு பெரிதும் ஊக்கமானது. சிவஜோதி அவர்களுடன் பேசும் போது இணைய நூலகம் பற்றி அதிகம் பேசியிருக்கிறேன். இந்த நிலையில் இதற்காகவும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளமையிட்டு பெருமகிழ்வடைகிறேன்.” என அவர் தெரிவித்திருந்தார்.
No description available.
சிறப்பு விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து  அண்மையில் மறைந்த லண்டன் நாடக நடிகர் ரமேஷ் வேதா அவர்களுக்கு “நகைச்சுவை தென்றல்” விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை சி.கருணாகரன் அறிவிக்க சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் வழங்கி வைத்தார்.
No description available.
நிகழ்வுகளின் இறுதியில் வேணுகானசபா இசை நாடக மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகம் மேடையேற்றப்பட்டது.
No description available.
தொடர்ந்து லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.