சிவமோகன்

சிவமோகன்

சோதனை மேல் சோதனை: தமிழரசுக் கட்சி மீது மற்றுமொரு வழக்கு!

சோதனை மேல் சோதனை: தமிழரசுக் கட்சி மீது மற்றுமொரு வழக்கு!
தமிழரசுக் கட்சியின் செயலாளர் ப சத்தியலிங்கத்திற்கு ‘கட்சியின் மத்திய குழுவிலிருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை’ என்பதை உறுதிப்படுத்துவதற்காக டிசம்பர் 18இல் கட்சியின் செயலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மத்தியகுழு உறுப்பினருமான சிவமோகன் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே தமிழரசுக் கட்சி மீது இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, கட்சி இழுபறியில் உள்ளது. அக்கட்சிக்கு யார் தலைவர் என்பதிலும் இதுவரை தெளிவில்லை. மாவை உள்ளே – வெளியே விளையாட்டில் உள்ளார். சிறீதரன் தலைவரா இல்லையா என்று பல சிக்கலில் கட்சி உள்ள நிலையில், இன்னுமொரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபரில் மாவை பதவி விலகல் கடிதத்தை கொடுத்து பின் அதனை மீளப்பெற்று நடந்த சர்ச்சையால் தலைவர் யார் என்ற பிரச்சினை எழுந்தது. கடந்தவார இறுதியில் தமிழரசுக் கட்சி கூடிய போது அதற்குத் தீர்வுகாணப்படாமல் கூட்டம் டிசம்பர் 28க்கு ஒத்திவைக்கப்பட்டது. இக்கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட எம் ஏ சுமந்திரன், “இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர் மற்றும் சிலர் இடைநிறுத்தப்படுவர்” எனப் பூடகமாகத் தெரிவித்திருந்தமை டிசம்பர் 15இல் தேசம்நெற்இல் வெளியானது. “தமிழரசுக் கட்சி தான் பிரதான கட்சி, வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற கட்சி. ஆகவே நாங்கள் தான் தமிழ்மக்களின் பிரதிநிதிகள்” என்ற தொனிப்பட கருத்து தெரிவித்தார் எம் எ சுமந்திரன். “வேறு யாராலும்: சிறிதரன் – கஜேந்திரகுமார் – செல்வம் உருவாக்குகின்ற வரைபுகளுக்கு இணங்கிச் செல்ல மாட்டோம்” எனவும் வைராக்கியமாக கூறினார் அவர்.
அதற்கு எதிர்வினையாகவே டிசம்பர் 18இல் சிவமோகன் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப சத்தியலிங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை சுமந்திரன் ஏற்காததால் அதனை சுமந்திரன் ப சத்தியலிங்கத்திற்கு மடைமாற்றினார். அதனால் சுமந்திரனின் விருப்பம் ப சத்தியலிங்கத்தினூடாக நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் டிசம்பர் 28 தமிழரசுக் கட்சியின் தலைவராக ஒருவர் செயற்பட வேண்டியிருப்பதால் அதற்கு சி வி கெ சிவஞானத்தை கொண்டு வரும் முயற்சிகளில் சுமந்திரன் அணி ஈடுபட்டுள்ளது. அதனால் கூட்டத்தின் ஏற்பாட்டு ஒழுங்குகளை தலைவர் மாவையின் வழிகாட்டலின்படி செய்ய வேண்டும், சுமந்திரனின் வழிகாட்டலின் படியல்ல என்பதை உறுதிப்படுத்தவுமே சிவமோகன் இந்த வழக்கைத் தாக்கல் செய்ந்துள்ளார்.
“கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு. அதனை அவர் எதிர்வரும் நாட்களில் செய்வார். இதற்கு மத்திய குழுவும் சம்மதித்துள்ளது” என்று சென்ற வார இறுதியில் எம் ஏ சுமந்திரன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து இருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “வேறு சிலர் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயற்பட்டமை தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படுவர்” என்றும் தெரிவித்தார்.

யார் அங்கே ? மாவை எங்கே ? அவர் உள்ளேயா ? வெளியேயா ? – பாவம் தமிழரசுக் கட்சி : சுமந்திரன் பீலிங்ஸ்

யார் அங்கே ? மாவை எங்கே ? அவர் உள்ளேயா ? வெளியேயா ? – பாவம் தமிழரசுக் கட்சி : சுமந்திரன் பீலிங்ஸ்

பாராளுமன்ற தேர்தலுக்கு பின் டிசம்பர் 14 இல் வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குழாய் அடிச்சண்டை.  10 மணிக்கு வர வேண்டிய பதவி விலகிய மாவை சேனாதிராஜா வரத் தாமதித்தே இந்த வாய்க்கால் சண்டைக்கு காரணம்.  பதவி விலகியவர் கூட்டத்தை தலைமைதாங்க முடியாது.  தாமதியாமல் கூட்டத்தை தொடங்கும்படி செயலாளரை கிழக்கின் தமிழ்த்தேசியத் தலைவர் இரா சாணக்கியன் தூண்ட அதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். மாவைக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கூட்டத்திற்கு அழையுங்கள் என சிவமோகனும் இடையில் குறுக்கிட்ட சாணக்கியன் ” இது கோல் சென்ரர் அல்ல , கட்சி … ‘ உங்கள் வைத்தியசாலை இதுவல்ல என்று பதிலளித்தார் . இப்படியே உறுப்பினர்களிடையே வார்த்தைகள் தடிக்க சாணக்கியனுக்கு வக்காலத்திற்கு வந்த பீற்றர் இளஞ்செழியனும் சிரேஷ்ட உபதலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்துங்கள் அல்லது குழப்பவாதிகளை வெளியேற்ற வேண்டும் என உறுமினார் . இதற்கிடையில் விடாப்பிடியாக நின்ற சிவமோகனை நாற்காலி அருகில் சமாதானப்படுத்த முயன்ற சுமந்திரனின் இராஜதந்திரமும் தோற்றுப்போனது . வென்றது என்னவோ மாவை தான் . அடித்துப்பிடித்து ஒருவழியாக 10:45 கூட்டத்திற்கு வந்து சேர்ந்த மாவை குடுகுடு என்று ஓடிப்போய் முன்வரிசையில் தலைவர் இருக்கையில் இடத்தைப் பிடித்துக் கொண்டார் . இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக விவாதிக்க இக் கூட்டம் நடைபெற்றது . ஓக்டோபரில் மாவை பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார் . அது தொடர்பில் கட்சி செயலாளர் விளக்கத்தை கேட்ட போது மாவை உடனடியாகப் பதில் வழங்கவில்லை . அதனைத் தொடர்ந்து செயலாளர் , மாவையின் பதவி விலகல் நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார்.  இதற்கிடையில் சிறிதரன் ஊடாக மாவை கையொப்பமிட்ட பதவி விலகலை மீளப்பெறும் கடிதமொன்று செயலாளரிடம் ஒப்படைத்திருந்தார் . மறுநாள் மாவையும் நேரடியாக குறிப்பிட்ட கடிதத்தை செயலாளருக்கு அனுப்பியிருந்தார் . இந்த இழுபறிக்குள் கட்சியின் அடுத்த மாநாடு வரைக்குமான எஞ்சிய காலப்பகுதிக்கு தமிழரசுக்கட்சியின் யாப்பின் பிரகாரம் சி.வி. கே . சிவஞானம் தலைவராக முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டார் . இதற்கு போட்டியாக மாவை பதவி விலகலை மீளப்பெற்றதால் அவர் தொடர்ந்தும் தலைவராக இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது , யார் தலைவர் ? என்ற கேள்விக்கு விவாதங்களுாடாக பதில் கிடைக்கவில்லை . அதனால் மாவையின் பதவிவிலகலை ஏற்றுக்கொண்ட தரப்பு இந்த விடயத்தை வாக்கெடுப்பிற்கு விட அழைப்பு விடுத்தது . எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் டிசம்பர் 28 இல் வாக்கெடுப்பிற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .