சிவநேசதுரை சந்திரகாந்தன்

சிவநேசதுரை சந்திரகாந்தன்

மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் – பெண்ணின் கழுத்தை நெரித்த பொலிஸார் !

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்றமையால்,  பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக சென்ற பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி, முக்கியமாக இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியில் நிற்க வைத்து பிரதான கதவை பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரான பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து  அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர் பிரச்சினை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக சூரிய கலங்களை நிறுவுவதற்காக விவசாய காணிகளை கையகப்படுத்துவது சம்பந்தமான பிரச்சினை, மணல் அனுமதிப் பத்திரம் வழங்கல் தொடர்பான பிரச்சினைகள், வாகரை மீனவர்கள் பிரச்சினை, காணிகளை காப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் முறைப்பாடு வழங்கச் சென்றுள்ளனர்.

இவ்வாறு மக்கள் பிரச்சினையை ஆராய வேண்டிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது பிரச்சினைகளை தெரிவிக்க வந்த பொதுமக்களையும், பொதுமக்களுக்காக குரல் கொடுக்க வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,  ஊடகவியலாளர்கள் என அனைவரையும் மாவட்ட செயலகத்திற்கு வெளியே வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகளும் இணைந்து அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியதால் மாவட்ட செயலகத்திற்கு வெளியே பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் பெண் ஒருவரின் கழுத்தை காவல்துறையினர் நெரித்தமையால் அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மாவட்ட அரசியல்வாதிகளின், மாவட்ட முதலாளிகளின், கார்ப்பரேட் கொம்பனிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இடமாக இது போன்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும், செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஸ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதியை பொலிஸாரிடம் கோரிய நிலையில், பொலிஸார் இராஜாங்க அமைச்சரையும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்டச் செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.

இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.

மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தின் காணி தொடர்பில் தன்னால், தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட தகவல்கள்வழங்கப்படாத காரணத்தினை கோரிய நிலையில், அது தொடர்பான விளங்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரால் வழங்கப்பட்ட போதிலும்,அதனை ஏற்றுக்கொள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 30 வருடமாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்குஆபத்தான நிலையேற்பட்டுள்ளதால், இங்கு அதற்கான சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவத்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளியேறிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, இரா. சாணக்கியனும், சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, இரா.சாணக்கியனும் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தார். இதன் பின்னர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமூகமாக இடம்பெற்றது.

“என்னை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள்.” – சிவநேசதுரை சந்திரகாந்தன்

“இந்த மண்ணை நம்பி பணியாற்றிய என்னை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள். காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய சந்திரகாந்தன்,

வடகிழக்கில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகூடிய விரும்பு வாக்கு எனக்கு கிடைத்தது. அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசிய வரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.

நான் சிறையிலிருந்து வெளிவரும் போது கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை விரைவாக அமுலாக்குவதில் மிகப்பெரிய சங்கடங்களும் உள்ள சூழ்நிலையில்தான் உள்ளோம்.

இருந்த போதிலும் நாங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்து வைத்துள்ளது. அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார். ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றின் காரணமான கடுமையான நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம், பலவற்றை செய்து வருகின்றோம்.

நான் கல் வைத்தேன் என்பதற்காக கட்டப்படாமலிருந்த பொது நூலகத்திற்கான கட்டுப்மானப்பணிக்கு நான் 200 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகின்றது. இந்த கொரோனா தொற்று அதிகரிக்காத நிலையிருந்தால் மே மாதம் அல்லது அதற்கு பின்னர் நூலகம் திறந்து வைக்கப்படும்.

அதேபோன்று 62 கிலோமீற்றர் பாதைகளை புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.100 கிலோ மீற்றர் முதல் கட்ட அனுமதி எனக்கு கிடைத்திருந்தது. இரு வாரத்தில் மேலும் 40 கிலாமீற்றர் வீதி வரவுள்ளது. பல அபிவிருத்தி சார்ந்த நிதிகளை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். இந்த நன்மைகள் ஊடாக கிராமங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். கல்வியும் பொருளாதாரமும் இல்லையென்றால் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்று விடும்.

அதனை கட்டியெழுப்புவதற்கான தளம் இன்னும் எங்களுக்கு போதாததாகவேயுள்ளது. நாங்கள் எமது பிரதேசத்தின் உற்பத்தி துறையினை சர்வதேசத்தின் தரத்திற்கு கொண்டு செல்வதற்கான கல்வி துறையை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதேபோன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையான மொழியறிவுகளை வழங்குவதற்கு கிராம மட்ட கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதேநேரம், கடந்த காலத்திலிருந்த அரசியல் சாணக்கியமற்ற தமிழ் அரசியல் தலைவர்களின் வெளிப்பாடே இன்று தமிழ் மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்வதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் இதன்போது தெரிவித்தார்.