சபாநாயகர் மஹிந்த யாப்பா

சபாநாயகர் மஹிந்த யாப்பா

சபாநாயகரின் முறையற்ற செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகள் அரசியலமைப்பையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் மலினப்படுத்தும் வகையில் உள்ளன. நிறைவேற்று அதிகாரத்தின் பிரதிநிதியாகச் செயற்படும் சபாநாயகரின் செயற்பாடுகளுக்கு இடமளித்தால் அது எதிர்காலத்துக்குத் தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

 

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்கு முதல்கட்டமாக கைச்சாத்திட்டுள்ளோம். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

 

93வருடகால பாராளுமன்ற ஜனநாயகத்தின் அம்சங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சபாநாயகர் செயற்படுகிறார்.இவரது முறையற்ற செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்பதால் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர தீர்மானித்தோம்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரதிநிதியாகச் சபாநாயகர் பாராளுமன்றத்தில் செயற்படுகிறார்.இவர் தனது தனிப்பட்ட அரசியல் செயற்பாட்டை பாராளுமன்றத்துக்குள் செயற்படுத்திக் கொள்ள முயற்சிப்பதால் நாட்டு மக்களின் அரசியல் உரிமை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் அரசியலமைப்பும் மலினப்படுத்தப்படுகிறது.

 

அண்மையில் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சட்டத்தின் 57 ஏற்பாடுகளில் 34 ஏற்பாடுகளில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன அவற்றைத் திருத்தம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.

 

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. தன்னிச்சையான முறையில் அரசாங்கத்தின் அவசரத்துக்கு அமைய செயற்பட்டார்.

 

சட்டமூலத்தை சான்றுரைப்படுத்துவதை மீள்பரிசீலனை செய்யுமாறு தேசிய மட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்களும், சர்வதேச அமைப்புக்களும் வலியுறுத்தி போது அதனை கவனத்திற் கொள்ளாமல் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார். இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த யோசனைகளில் ஐந்து பிரதான திருத்தங்கள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்று மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகளுக்கு இடமளித்துக் கொண்டிருந்தால் அது எதிர்காலத்துக்கு தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதால் தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்தோம் என்றார்.

நீதிபதிகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களால் நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு அழுத்தம் – சட்டத்தரணிகள் சங்கம்

நீதிமன்றம், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு அழுத்தம் ஏற்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை சந்தித்து அறிவுறுத்தியுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் குழுவினருக்கும், சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இதுதொடர்பாக தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும்  குறிப்பாக தற்பொழுது சேவையாற்றிவரும் நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு கருத்துக்களை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், இது குறித்த எழுத்துமூல கோரிக்கையையும் சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதிபதிகள் உள்ளிட்ட நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு தான் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பில் உறுப்பினர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்ல எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார்.” – எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு !

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய ஒருதலைபட்சமாகவும்,சர்வாதிகாரியாகவும் செயற்படுகிறார். சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து ஒரு தீர்மானம் எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம் மீதான வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இரு நாள் விவாதத்தை கோரினோம். தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்து நாட்டு மக்கள் பல விடயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு தெரியாமல் மக்களின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவே இருநாள் விவாதம் கோரினோம்.

இருநாள் விவாதம் அவசியமில்லை. சனிக்கிழமை (01) முழு நாள் விவாதத்தை நடத்தலாம். தேவையாயின் விவாதத்துக்கான காலத்தை நீடித்துக் கொள்ளலாம் என கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் உரையாற்ற இருந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்காமல் தன்னிச்சையாக செயற்திட்டம் மீதான வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தினார். வாய்ப்பு கோரியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களை புறக்கணித்து ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். பாராளுமன்றம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு சபாநாயகர் சர்வாதிகாரி போல் செயற்படுகிறார்.

சபாநாயகர் ஒருவர் எவ்வாறு செயற்படக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படுகிறார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி அவரின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுப்போம் என்றார்.

தங்கம் மற்றும் கைபேசிகளை கடத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் வி.ஐ.பி வசதியை இரத்து !

தங்கம் மற்றும் கைபேசிகளை கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வி.வி.ஐ.பி வசதியை இரத்து செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,அவரின் சிறப்புரிமைகளை இரத்து செய்வது தொடர்பான சட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பெற்று சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் கருத்தை பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான பணிப்புரைகளை தாம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீண்டும் டுபாய் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தால் நடத்தப்படும் ‘புனர்வாழ்வு’ மையங்கள் – அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு !

புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1)ஆவது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இராணுவத்தால் நடத்தப்படும் ‘புனர்வாழ்வு’ மையங்களில் மக்களை தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்தளவிலான அதிகாரங்களை வழங்கும் சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.

இந்த சட்டமூலம் புனர்வாழ்வு மையங்களில் போதைக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை, தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வேறு ஏதேனும் குழுவை சேர்ந்தவர்கள் வலுக் கட்டாயமாக காவலில் வைக்க அனுமதிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMF ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது – சபாநாயகர் மஹிந்த யாப்பா

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் எனவே அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா  லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அவரின் கருத்துக்கு பதில் வழங்கும்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

“சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கை குறித்து நான் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளேன். அவர் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு எதிரானவர் அல்ல. அதில் வரி தொடர்பான முக்கிய விடயங்கள் உள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தாங்கள் விரைவில் தேசிய சபையை ஸ்தாபித்து, குறித்த ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தை முன்வைத்து கட்சித் தலைவர்களின் கருத்தைப் பெறுவோம் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து, பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் உள்ள முக்கியத் தகவல்களை விட்டுவிட்டு ஏனைய விபரங்களை அவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்மொழிந்தார்.

இலங்கை மக்கள் எதிர் நோக்கவுள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறை !

எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு ஆகியவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாகயிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் ​நேற்று (06) காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது விசேட உரையொன்றை நிகழ்த்தி பாநாயகர் இதனைத் குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கத்தை புறம்தள்ளி இந்த நெருக்கடியில் இருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட வகையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து அதனை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாப்பவர் என்ற வகையில் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.