சசிகலா ரவிராஜ்

சசிகலா ரவிராஜ்

தமிழ் தேசியத்தை புறக்கணிக்கும் கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் – சசிகலா ரவிராஜ்

தமிழ் தேசியத்தை புறக்கணிக்கும் கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

யாழ் . ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 

மேலும் தெரிவிக்கையில்,

தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளின் கூட்டில் தான் நான் இணைந்துள்ளேன். எனது கணவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த வேளையே படுகொலை செய்யப்பட்டார்.

 

கடந்த 2020ஆம் ஆண்டில் தமிழரசு கட்சி சார்ப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தான் போட்டியிட்டேன். அதன் அடிப்படையில் இந்த முறை தேர்தலிலும் தமிழரசு கட்சி ஆசனம் வழங்கும் என எதிர்பார்த்து இருந்தேன். எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

 

பெண்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நான் தோற்று போனவளாக இந்த தேர்தலில் இருந்து விலகி இருக்க விரும்பவில்லை. அப்போது தான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டேன்.

 

பெண்களுக்காக உங்கள் முன் நிற்கும் என்னை தெரிவு செய்ய வேண்டும். பெண்கள் மிக ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

 

இந்த தேர்தலில் பல கட்சிகள் பல சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். அதனால் மக்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது . அதில் ஐந்து கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றன.

 

எல்லா கட்சிகளையும் ஒன்றிணைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு கரங்களையும் நீட்டி தயாராகவே இருக்கிறது.

 

தமிழ் தேசியத்தை புறக்கணிக்கும் கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

 

எனவே ஒற்றுமையாக இருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் அபிலாசைகளை நிறைவேற்றுவேன் எனவும் , எனது கணவரின் விருப்பத்தினை நிறைவேற்றுவேன் எனவே சங்கு சின்னத்திற்கு வாக்களித்து அதில் எனது இலக்கமான 07ஆம் இலக்கத்திற்கு உங்கள் விருப்பு வாக்கினை அழிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்

பொதுதேர்தல் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் !

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் சசிகலா ரவிராஜ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீட்டிலிருந்து வெளியேறி சங்குகட்சியுடன் இணைந்தார் சசிகலா ரவிராஜ் !

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியில் அவருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை.

தமிழரசுக் கட்சியின் இந்த வேட்பாளர் தெரிவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடாவடித்தனமாகப் பல்வேறு குளறுபடிகளைச் செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு நியமனத்தைக் கொடுத்துள்ளார் என்று சசிகலா நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து தமிழரசுக் கட்சியில் இருந்து இன்று காலை வெளியேறிய சசிகலா, ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று பிற்பகல் கையெழுத்திட்டுள்ளார்.