காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு, காணி இழந்தோருக்கு நட்டஈடு – அர்ச்சுனாவுடைய கருத்தால் ஆடிப்போன தமிழ்த்தேசியவாதிகள்
காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவித்தமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
காணாமலாக்கப்பட்டோருக்கான உதவித்திட்டங்களை தொடர்ந்து வழங்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, என்னுடைய அப்பா இலங்கை பொலிஸில் வேலைசெய்து தமிழீழ காவல்துறையில் சேவையாற்றி 2009இல் காணாமலாக்கப்பட்டார். காணாமலாக்கப்பட்டோருக்கான நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு பெருமளவான நிதி ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. காணாமலாக்கப்பட்டோர் உண்மையில் இருக்கின்றார்களா இல்லையா என்பதை சொல்லவேண்டும். காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தில் வேலைசெய்த பெண்மணி சுவிஸில் அரசியல் தஞ்சம் தஞ்சம் கோரியுள்ளார். இவ்வாறான விடயங்களுக்கு இதைப் பயன்படுத்தாமல் எங்களுடைய சகோதரங்கள், அப்பா, அம்மா இருக்கின்றார்களா இல்லையா என்பதை தெரிவித்துக்கொண்டு அவர்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றார்.
இதேவேளை தையிட்டி விகாரையை இடிப்பது முட்டாள்தனமானது அதற்குரிய நட்ட ஈட்டை வழங்கி விகாரைக்குரிய காணி பாதிக்கபட்டோருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் அர்ச்சுனா முன்வைத்திருந்தார்.
தற்போது இவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளன. காணாமலாக்கபட்டோருக்கு நீதிகோரியும், பௌத்தமயமாக்கல் காணிஅபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த்தேசியவாதிகள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்த் தேசியப்பரப்பில் இவற்றைவைத்தே பெரும்பாலானோர் அரசியல் நடத்துகின்றனர். இந்தநிலையில் அர்ச்சுனாவின் கருத்து அவர்களுடைய அரசியல் இருப்பை பாதிக்கும் என்பதால் அர்சுனாவை சமூக ஊடகங்களில் வசைபாடுகின்றனர். அதேவேளை அர்ச்சுனாவுடைய கருத்து யதார்த்தத்திற்கு ஏற்புடையது என்று அவரது கருத்தைப் பலர் ஆமோதித்து வருகின்றனர்.