ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை
“லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தக்கூடாது” என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
“இந்த விடயங்கள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இரகசியமாக வைத்துக்கொள்ளாமல், எவருடனும் ‘டீல்’ போடாமல் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு விரைந்து செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ள அவர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்றுடன் 6 ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்று பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்குவதற்கு பின்னிற்க மாட்டோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
