போராளி துரோகியானதும், போராளி பயங்கரவாதியானதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவு ! பிள்ளையான், கருணா, சுரேஸ், சித்தார்த்தன், டக்ளஸ் கைது செய்யப்படலாம் !
மண்டையன் குழு தலைவராக செயற்பட்ட என்று குற்றம்சாட்டப்பட்ட ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஐபிகேஎப் காலத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக கைதாகலாம் என என்பிபி யாழ் எம்பிகள் மூலம் தகவல்களை கசிய விட்டுள்ளனர். அத்துடன் ஈபிடிபி தலைவர் டக்களஸ் தேவாநந்தா சட்டவிரோத கட்டிடங்களை கையகப்படுத்தியமை தொடர்பிலும், மகேஸ்வரி நிதியத்தின் மூலமான மண் ஊழல் மற்றும் ஊடகவியலாளர்கள் நிமலராஜன் மயில்வாகனம் கொலை வழக்கிலும் கைதாகலாம் எனக் கூறப்படுகிறது. கிழக்கில் துணைவேந்தர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் பிள்ளையான் கைதாகியது போன்று வடக்கிலும் கைதுகள் தொடரலாம் எனக் கூறப்படுகிறது.
யார் இந்த மண்டையன் குழு என்றால் இந்திய இராணுவத்தோடு சேர்ந்தியங்கிய ஒரு துணை இராணுவக் குழுவாகும். இந்தக் குழுவுக்கு தற்போதைய ஈபிஆர்எல்எப் தலைவராக இருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எனக் கூறப்படுகிறது. இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்த விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவானவர்கள் அல்லது அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் மண்டையன் குழுவால் கடத்தப்பட்டார்கள். அசோக்கா ஹோட்டலில் வைத்து கடுமையான சித்திரவதைகள் செய்யப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். மண்டையன் குழுவிடம் சிக்கியவர்களை அவர்கள் கொலை செய்யும் பாணி மிகக் கொடூரமானது எனக் கூறப்படுகிறது. உடம்பில் இருந்து தலையை துண்டித்து, தலைவேறாக முண்டம் வேறாக வீதிகளில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அக்காலத்தில் யாழ் நகரத்திற்கு தனியார் வகுப்புகளுக்கு செல்லும் போது தலை அறுக்கப்பட்ட முண்டங்களையும் தலைகளையும் வீதிகளில் கண்டு தாம் வேதனையும் கோபமும் கொண்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.
இவ்வாறு தலையை துண்டித்து கொலை செய்யும் பாணியை கடைப்பிடித்ததாலேயே இவர்கள் மண்டையன் குழு என அழைக்கப்பட்டார்கள். மற்றும் மண்டையன் குழுவினர் பேனாக்குச்சிகளை காதுகளில் அடைத்தும், சோடாப்போத்தல்களை மலவாசல் ஊடாக செலுத்தியும் சித்திரவதைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது .
இவ்வாறான ஒரு சித்திரவதையில் உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் வயிற்றுப் பகுதியிலிருந்து சோடாப்போத்தல் ஒன்று அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை 1988 களில் பெரும் பேசு பொருளாக இருந்தது. இந்த சம்பவத்தை முரசொலி பத்திரிகையில் அதன் ஆசிரியர் திருச்செல்வம் எழுதியிருந்தார். அதனால் ஆத்திரமடைந்த மண்டையன் குழுவினர் நல்லூரில் இருந்த பத்திரிகையாசிரியர் திருச்செல்வத்தின் மகனான கடத்திச் சென்றனர். சென் ஜோன்ஸ் மாணவனான அகிலன் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இன்று வரை இந்த வழக்கால் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு கனடா செல்வதற்கான பயணத்தடையை கனேடிய அரசாங்கம் விதித்துள்ளது. ஏனெனில் கொலை செய்யப்பட்ட அகிலனின் குடும்பம் அதாவது தந்தையான திருச்செல்வம் கனடாவில் தான் வாழ்கிறார். அகிலனின் தந்தை தனது மகனின் கொலைக்கு நீதி கேட்டு தற்போது வரை போராடி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் மண்டையன் குழு ஊடகங்கள் மீதான தனது ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டிருந்தது. குறிப்பாக உதயன் பத்திரிகை நிறுவனம் தாக்கி எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதை விடவும் மண்டையன் குழு கட்டாய ஆட்ச்சேர்ப்பிலும் ஈடுபட்டனர். மேலும் 1989 ஆண்டு காலப்பகுதியில் யாழில் வர்த்தகர்களிடம் இவர்கள் மிரட்டி கப்பம் கேட்டு பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது தந்தையை கொலை செய்ய முயன்றதாகவும், தந்தை தலைமறைவாக, தனது மூத்த இரு சகோதர்களை கடத்தி அசோக்கா ஹோட்டலில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக எம்பி இராமநாதன் அர்ச்சனா குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு நேற்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் பேட்டியளித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் இது வெறுமனே தனிநபர் தாக்குதல் என்றார். என்பிபி அரசாங்கம் தன்னை நோக்கி கேள்வி கேட்கும் தமிழர்களின் பிரதிநிதிகள் மீது சேறு பூசவென சில ஊடகங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கியுள்ளது. அவர்கள் ஊடாக தமிழ் மக்களிற்காக குரல் கொடுக்கும் அரசியல் வாதிகள் மீது சேறு பூசல்கள் நடப்பதாக கூறி மறைமுகமாக இது ஒரு அரசியல் என்று கடந்து சென்றார்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் மீதான குற்றச்சாட்டுக்கள் போன்றே ஈபிஆர்எல்எப் இலிருந்து பிரிந்த ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவாநந்தா மீதும் கடத்தல், கப்பம், காணமல் ஆக்கப்படல், சட்டவிரோத கட்டட அபகரிப்பு, ஊழல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவரும் விரைவில் கைதாகலாம் என என்பிபி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறியுள்ளார்.
மண்டையன் குழுவாக இந்திய இராணுவத்தின் துணை இராணுவக்குழுவாக இயங்கியது சுரேஸ் பிரேமச்சந்திரன் அல்ல ராசிக் குழுவென்றும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் பழி சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது வீழ்ந்துவிட்டது. ராசிக் குழுவினர் பின்னர் இலங்கை இராணுவத்தின் அங்கமாக மாறி, படுகொலை செய்யப்பட்ட போது இலங்கை இராணுவத்தின் மேஜராக மரணித்தார். இதே வரலாறு புளொட் மோகன் என்பவருக்கும் உண்டு.
அதேபோன்று டக்ளஸ் தேவாநந்தாவின் ஈபிடிபி, புளொட், பிள்ளையான் மற்றும் கருணா குழுவில் இருந்தவர்களில் சிலர் இலங்கை இராணுவத்தின் துணைப்படையாக இயங்கினர். இலங்கை இராணுவத்தின் துணை இராணுவக் குழுவாக வெவ்வேறு காலகட்டங்களில் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. பிரபாகரன் உயிருடனிருந்திருந்தால் அவர் இலங்கையில் அல்லது இந்தியாவில் சிறையில் தான் இருந்திருக்க நேரிட்டிருக்கும் என்பதே யதார்த்தம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களும் கடத்தில், கப்பம், படுகொலை, சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டவர்களே. இவர்கள் அனைவரது கரங்களிலும் இரத்தக் கறைகள் உள்ளது. பிரபாகரனும் விதிவிலக்கல்ல. ஒரு தரப்பின் போராளிகள் மற்றைய தரப்பின் துரோகிகள். பயங்கரவாதிகள். இந்த முரணுக்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை.
1986 மே ரெலோ தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டதோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் மொத்த குத்தகைக்கு எடுக்கப்பட்டது. ஏனைய போராளிக் குழுக்கள் தேடி அழிக்கப்பட்ட போது அவர்கள் எதிரியான சிறிலங்கா இராணுவத்தினரிடமே சரணடைந்தனர். பழிவாங்கல்களில் ஈடுபட்டனர். 2009 இல் ஏனைய இயக்கங்கள் போல் புலிகளின் தலைமையும் அவர்களோடு அப்பாவி மக்களும் பேரழிவைச் சந்தித்தனர். முதல் கோணல் முற்றிலும் கோணலாகியது.
கடந்த காலத்து அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அது வெற்று அரசியல் கோஷமாக இல்லாமல் பழிக்குப் பழிவாங்கும் மனோநிலையைக் கடந்து நிரந்தர சமாதானத்துக்கான வாயில்களைத் திறக்க வேண்டும். கடந்த காலத் தலைவர்கள் காலாவதியாகி நீண்டகாலமாகி விட்டது. அவர்கள் உண்மைகளை வெளிப்படுத்தி அரசியலில் இருந்து ஒதுங்குவதே மேல். இது ஆயுதமேந்திய தமிழ் தமிழ் தலைமைகளுக்கு மட்டுமல்ல ஆயுதமே ஏந்தாத மக்கள் மீது எவ்வித கரசரனயுமமற்ற இந்த ஆயுதமேந்தியவர்களின் மீது சவாரி செய்யும் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் மிகப் பொருந்தும். உங்களுடைய பருப்புகள் இனி வேகாது. இனி புதிய விதி செய்ய வேண்டும். தமிழ் மக்கள் மத்தியிலிருந்து புதிய அரசியல் தலைமுறை உருவாக வேண்டும்.


