எஸ்.சிறிதரன்

எஸ்.சிறிதரன்

தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தற்துணிவுடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடும் ஜனாதிபதி பேவட்பாளருக்கே ஆதரவு – தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சிறீதரன் !

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வழங்குவது குறித்து ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், சாதகமான தீர்வு எதனையும் முன்வைக்காதவிடத்து தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு இப்போதே அரசியல் கட்சிகள் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எவையும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இதுவரையில் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு உத்தேசித்திருக்கும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமது நிலைப்பாடு என்னவென்பதை தற்றுணிவுடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்தவேண்டுமென சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்தீர்வானது இணைந்த வட, கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடியவாறான சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அமையவேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அத்தீர்வினை வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவதன் ஊடாக அதனை சிங்கள மக்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் தீர்வு பற்றிய நிலைப்பாட்டை வெளியிடும் பட்சத்தில் அதுகுறித்து தமிழர்கள் பரிசீலிக்க முடியும் எனவும், இல்லாவிடின் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

சிறீதரன் எதைச் சாதிக்க போகிறார்..? – தேசம் திரை காணொளி!

இலங்கை தமிழர் அரசியல் பரப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்று புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.சிறீதரன் எதைச் சாதிக்க போகிறார்..? என்பது குறித்தும் தமிழர் அரசியலில் எப்படியான மாற்றங்களை இது ஏற்படுத்தப்போகிறது என்பது தொடர்பிலும் தேசம் திரை YouTubeஇல் வெளியான இந்த காணொளி பேசுகிறது.

இலங்கை தமிழரசு கட்சி தலைவர் தெரிவு– தேசம் திரை பார்வை.

 

 

“கௌதம சித்தார்த்தனின் போதனைகளை பறைசாற்ற வேண்டிய பௌத்த பிக்குகள் இனவாதத்தை பறைசாற்றி ஆவேசமாக செயற்படுகிறார்கள்.” – நாடாளுமன்றில் எஸ்.சிறிதரன் !

“ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்கினால் சர்வதேசத்தில் சாதிக்கும் ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சட்டமா அதிபர் உட்பட உயர் அதிகாரிகளின் அழுத்தங்களினால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி டி.சரவணராஜா தனது குடும்பத்தாரின் பாதுகாப்பு கருதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீதிபதிக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர் உட்பட கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கங்கள் பல இணைந்து கடந்த திங்கட்கிழமை எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதியிடம் வலியுறுத்தல் மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகத்துக்கு மிடுக்காக குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது. உள்ளக விசாரணையில் சரியான மற்றும் நியாயமான நீதி கிடைக்காத காரணத்தால்தான் சர்வதேச விசாரணையை தொடர்ந்து கோருகிறோம் என்பதை அரச தலைவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஜேர்மனிய நாட்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ‘நாங்கள் என்ன இரண்டாம் தரப்பினரா (செகன்ட் கிளாஸ்) என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆத்திரமடைந்து பதிலளிக்கிறார்.

சர்வதேச நாடுகளிடம் கையேந்தும்போது இந்த இரண்டாம் தரப்பினரா என்ற நிலை ஏன் தோன்றவில்லை. அதே போல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவற்கும், தமிழர்களை கொன்று குவிப்பதற்கும் உலக நாடுகளிடம் நிதி மற்றும் ஆயுதம் பெற கையேந்தும்போது இரண்டாம் தரப்பினரா என்ற எண்ணம் தோன்றவில்லையா?

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினை என்ன? பிரச்சினையின் ஆணி வேர் என்ன? என்பதை அரச தலைவர்கள் ஆராயாமல் இருக்கும் வரை இந்த நாடு எவ்வாறு முன்னேற்றமடையும். நாட்டின் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இலவச சுகாதாரத்துறையில் எதிர்காலம் தொடர்பில் அரச மருத்துவ சங்கத்தினர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அரசாங்கம்  எதிர்ப்பு அறிவிப்புக்களை மாத்திரம் வெளியிடுகிறதே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை.

கொழும்பில் உள்ள கனடா, பிரித்தானியா உட்பட சகல தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்கள் முன்பாக இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நாட்டுக்காவது செல்ல வேண்டும் என்பதே இளைஞர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் முஸ்லிம்களும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். குறிப்பாக, படித்த சமூகத்தினர் விரைவாக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம், ஆசியாவின் ஆச்சரியம் என்று குறிப்பிட்டுக் கொண்டுவிட்டோம் என மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை. மாறாக, இந்து ஆலயங்களை அழித்து அங்கு விகாரைகளை கட்டுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான மனநிலையில் எவ்வாறு முன்னேற முடியும்?

நாட்டின் தொழிற்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ஆடை தொழிற்சாலைகள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பொருளாதார மீட்சி என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால், நாட்டின் பொருளாதார நிபுணர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் இனவாத செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. கௌதம சித்தார்த்தனின் போதனைகளை பறைசாற்ற வேண்டிய பௌத்த பிக்குகள் இனவாதத்தை பறைசாற்றி ஆவேசமாக செயற்படுகிறார்கள். இனவாதத்தை முன்னிலைப்படுத்திக்கொண்டு செயற்பட்டால் எவர் ஆதரவு வழங்குவார்?

இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து நீதியான தீர்வை வழங்கினால் சர்வதேசத்தில் சாதிக்கும் தமிழர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றார்.

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழப்பங்களை ஏற்படுத்தி மக்களை திசை திருப்ப முனைகிறார்.” – எஸ்.சிறிதரன்

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழப்பங்களை ஏற்படுத்தி மக்களை திசை திருப்ப முனைகிறார்.” என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் விளக்க கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது. தேர்தல் எப்போதும் நடக்கலாம். நிச்சயம் நடக்கும். தற்போது தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் காலம் குறிப்பிடவில்லை. இது ரணில் அரசின் நிகழ்ச்சியாகும். இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தி மக்களை திசை திருப்ப முனைவதன் ஊடாக தமது அரசியல் நகர்வினை செய்கின்றனர்.

தேர்தலுக்கு காசு இல்லை என்கின்றனர். இவ்வாறான நிலையில் தேர்தல் செலவுக்காக திரும்ப செலுத்தாத தொகையை வழங்கும் நடைமுறை உள்ளது. அதனை திரும்ப செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறான நிலையில் 500 மில்லியனை IMF கொடுக்கும். இது வழமை.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 341 வட்டாரத்துக்கும் 340 விதமான வாக்குச் சீட்டுக்கள் தயாரிக்க வேண்டும். அது ஒன்றுதான் பெரிய வேலையாகும். இதேவேளை, 2 தேர்தலுக்கு அச்சடிக்கக் கூடிய பேப்பர் இருப்பதாகவும் அரச அச்சகம் கூறுகின்றது. அதற்கான கடன் விண்ணப்பத்தை எழுத்து மூலமாக கேட்கிறது.

எனவே இதில் பாரிய அரசியல் நிலவுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின்பு ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடிய நிலை உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க நவம்பருக்கு முதல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முயற்சிக்கிறார்.

இந்த சூழலில் தான் மக்கள் ஆணை பெற்ற ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. இதேவேளை மஹிந்த குடும்பத்துக்கு ரணில் போன்ற ஒருவர் தேவை. அதே போன்று ரணிலுக்கும் அவர்கள் தேவையாக உள்ளது. சகோதரரை ஜனாதிபதி ஆக்குவதை தவிர்த்து இவ்வாறான ஒருவரை ஜனாதியாக வைத்திருந்தால்தான் தனது மகனை ஜனாதிபதி ஆக்கலாம் என மஹிந்த எண்ணுகின்றார்.

இதே நேரம் பசில் அமெரிக்க பிரஜா உரிமையை நீக்கிவிட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, பங்குனிக்கு பின் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். மஹிந்த தரப்பு ரணிலுக்கு பிரச்சினை கொடுத்தால் இவ்வாறான நிலையும் உருவாகும். வரும் பங்குனியுடன் 2 அரை வருடங்கள் முடிகிறது.

தேர்தலை நடத்த அரசால் முடியும். ஆனாலும் ரணிலுக்கு விருப்பமில்லை. அப்படி நடந்தால் ரணில் தோற்பார். அதனாலேயே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகிறது. மின்கட்டண அதிகரிப்பினால் தொழிற்சாலைகளின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகள் ஆட்களை குறைக்க முயற்சிக்கிறது. பல நிறுவனங்கள் ஆட்களை குறைக்கிறது. உணவு மற்றும் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. ஏன் இந்த விலையேற்றத்தை செய்கின்றனர். இதனால் சிங்கள மக்களுக்கும் பாதிக்கப்படுகின்றனர்.

இப்போது தேர்தல் வேண்டாம் என மக்களை திருப்புவதற்காகவே இந்த விலையேற்றங்கள். ஆனால் சுதந்திர தினதுக்கு பல கோடி செலவழிக்கின்றனர். யாழிலும் கொண்டாடுகின்றனர். தேசிய கீதம் இசைப்பதற்கு மாத்திரம் கோடிக்கணக்கில் செலவு செய்தனர்.

தேங்காயெண்ணை, சீனியில் கோட்டா பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டார். அதனை வேறு இடங்களில் முதலீடாக்கியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றோம்.” – எஸ்.சிறிதரன்

“உள்ளூராட்சி தேர்தலுக்காகவே தனித்து நிற்கிறோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றோம்.” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலிற்கான கட்டுப்பணத்தை நாம் இன்று செலுத்தியுள்ளோம். கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணம் இன்று கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக எனக்கு தெரியவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், நாடாளுமன்ற குழுவிற்கும் இரா.சம்பந்தனே தலைமை வகித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான் நாடாளுமன்றத்திலும், சர்வதேச சமூகத்திலும் அடையாளமாகக் கொண்டிருக்கிறது. ஆகவே இது ஒரு உள்ளுர் அதிகார சபை தேர்தல்கள். இந்த தேர்தலின் வடிவம், தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் மக்கள் தெரிவு செய்யவுள்ளனர்.

அதற்கான கள பரீட்சையாக பார்க்கலாம். இதில் சாதக பாதக நிலை ஏற்படலாம். இன்று வெளியான செய்திகளினடிப்படையில், எமது தலைவர் ஓர் இரு நாட்களில் இது தொடர்பில் அறிக்கை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்த உள்ளதாக அறிய முடிகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஏன் தனித்தனியாக போட்டியிட வேண்டிய தேவை ஏற்பட்டது என்பது தொடர்பில் அவர் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

ஆகவே பொறுப்பு வாய்ந்த கட்சியின் உறுப்பினர் என்ற வகையில், அவருடைய அறிக்கை வரும்வரை பொறுமையோடும், நிதானத்தோடும் இந்த விடயங்களை கையாள்வதே பொருத்தம் என நான் கருதுகிறேன்.

இதனால் எந்த பாதகமும் தமிழ் மக்களுக்கு வராது. கடந்த காலங்களில் நாங்கள் ஓர் இலக்கை நோக்கி நகர்ந்திருக்கிறோம். அக்காலகட்டத்தில் இலங்கை அரசோடும், இந்திய இராணுவத்தோடும் சிலர் சென்றிருந்தனர்.

இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இங்கு நாங்கள் பிழை பிடிப்பது நோக்கமல்ல. அல்லது யார்மீதும் குற்றம் சுமத்துவதும் நோக்கமல்ல. தனிநாட்டு கனவோடு பயணித்த நாங்கள் யுத்தம் முடிவுற்ற பின்பும் அதே கனவோடு ஒரே அணியாக பயணித்தோம். ஆனால் ஒற்றுமையாக செல்ல முடியாத மனதை நெருடுகின்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக தம் தன் கட்சிகளை வளர்க்கின்ற செயற்பாடுகள் நெருக்கடிகளை தந்தது. அவற்றை சீர்செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்த தேர்தல் புதிய ஒழுங்கு முறையை உருவாக்கும். இந்த தேர்தலின் பெறுபேறுகள் தமிழ் மக்களிற்கான சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் என்று நம்புகிறேன்.

இப்பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. அது உடைந்துபோய் இருப்பதாக கருதி அதனை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்காக செல்ல முடியும்.

செய்திகளின் பிரகாரம், ஏனைய கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவே அறிய முடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திலும், வெளியிலும் ஒன்றாகவே உள்ளது.

நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே சென்றிருக்கிறார்கள். அவ்வாறான வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆகவே நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றோம்.

இது ஒரு உள்ளுராட்சி மன்ற தேர்தல். அதில் போட்டியிடுவதற்காகவே தனித்து நிற்கின்றார்கள். இந்த பெறுபேறுகள் வந்த பின்னர், எல்லோருக்கும் நல்ல பாடம் கிடைக்கும். அந்த பாடத்தை சரியாக கற்றுக்கொண்டு, அதனடிப்படையில் பயணத்தை தொடரலாம் என்று நான் நினைக்கின்றேன்” என்றார்.

“அண்டங் காகம் பாராளுமன்றத்துக்கு வர கூடாது என்பதற்காகவே 22ஆவது திருத்தம்.” – சபையில் எஸ்.சிறிதரன் !

“காகம் என அழைக்கப்படும் அண்டங் காகம் பாராளுமன்றத்துக்கு வர கூடாது என்பதற்காக 22ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் தடையேற்படுத்தப்பட்டுள்ளது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) வியாழக்கிழமை இடம்பெற்ற 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இனவாதம், பௌத்தவாதம் இருக்கும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற  முடியாது. அரசியலமைப்பு திருத்தம் பெருந்தோட்ட மக்களுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கும் எந்த வகையில் சாதகமாக அமையும்? தமிழர்களுக்கு தீர்வு வழங்க கூடாது என்ற கடும் போக்கான இனவாதம் இந்த நாட்டின் அழிவுக்கு மூல காரணம்.

1978ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு இந்த நாட்டுக்கு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை இதுவரையான அரசியலமைப்பு திருத்தங்கள் ஊடாக விளங்கி கொள்ள முடிகிறது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்தன தந்திரமான முறையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை உருவாக்கி தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டார். இவரின் அதிகார ஆசை இன்று இந்த நாட்டுக்கு பெருந் தீயாக தாக்கம் செலுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்படுகிறது.அரசியலமைப்பு திருத்தம் செய்வதால் இந்த நாட்டில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு எந்தளவில் அது தீர்வு பெற்றுக் கொடுக்கும் அல்லது சாதகமாக அமையும்.

காகம் என அழைக்கப்படும் அண்டங் காகம் பாராளுமன்றத்துக்கு வர கூடாது என்பதற்காக 22ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் தடையேற்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல இலட்சினங்கள் 22ஆவது திருத்தத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

நாட்டு நலனுக்காக ஒன்றும் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படவில்லை. மாறான ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக போலியான விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பை திருத்திக் கொள்கிறார்கள். இறுதியில் அது முழு நாட்டுக்கும் தீயாக மாற்றமடைகிறது.

இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உண்மை பிரச்சினை குறித்து அரசாங்கங்களும்,பௌத்த அர தலைவர்களும் கவனம் செலுத்தவில்லை. மலையக மக்களுக்கு 7 பேச்சஸ் காணியை கூட வழங்க கூடாது என்ற இனவாத போக்கில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 1 ஹேக்கர் காணிகளை வழங்குங்கள் விவசாயத்தையும், உழைப்பையும் மாத்திரம் நம்பி வாழும் அவர்கள் அரசாங்கத்திற்கு சிறந்த வருமானத்தை ஈட்டிக் கொடுப்பார்கள்.

அரச தலைவர்கள் மத்தியில் இனவாதம் மற்றும் பௌத்தவாதம் இருக்கும் வரை இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது.சிங்கள தலைவர்கள் தமது அடையாளங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள்.

ஜே.ஆர் ஜயவர்தன விளைத்த இனவாதம் இன்றும் இந்த நாட்டுக்கு சாபமாக தொடர்கிறது. இரண்டாம் குடியரசு யாப்பினை உருவாக்க முன்னின்று செயற்பட்ட ஏ.ஜே.வில்சன் மனமுடைந்து இரண்டாம் யாப்புக்கு எதிராக நூல் வெளியிட்டார். இதனை எந்த சிங்கள தலைவர்களும் இதுவரை மறுக்கவில்லை.

ஜே.ஆர்.ஜயவர்தன மரண படுக்கையில் இருக்கும் போது பத்திரிகையாசிரியர் ஒருவர் எடுத்த நேர்காணலின் போது இந்த நாட்டு மக்களுக்கு சமஷ்டி முறைமையே சிறந்த தீர்வு என குறிப்பிட்டுள்ளதை தற்போதைய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

30 வருட கால யுத்தம் ஏன் இடம்பெற்றது என்பதற்கான காரணத்தை இந்த நாடு இன்றும் விளங்கிக் கொள்ளவில்லை. 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் மத்தியில் சிறந்த நிலை காணப்பட்டது. அவர் நினைத்திருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கியிருக்கலாம். ஆனால் அவர் இனவாதம் மற்றும் பௌத்த வாதத்துக்கு முன்னுரிமை வழங்கி தன்னிச்சையாக செயற்பட்டார்.

பொருளாதார நெருக்கடி மிக மோசமாக தீவிரமடைந்துள்ள நிலையிலும் அரசாங்கம் இனவாத செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளவில்லை.தற்போதும் குருந்தூர் மலையில் அடாவடித்தனமாக பௌத்த விகாரைகளை நிர்மாணிக்க கடும்போக்கான முறையில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சிங்களவர்கள் வாழாத நாவற்குழி, மயிலிட்டி ஆகிய பகுதிகளில் பௌத்த விகாரைகள் பலவந்தமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.இந்த நாட்டின் உண்மை பிரச்சனையை ஆட்சியாள்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்,இனவாதம்,பௌத்த வாதம் இருக்கும் வரை இந்த நாட்டை முன்னேற்ற முடியாது.

அரசியலமைப்பு திருத்தங்கள் இந்த நாட்டை திருத்தாது. புதிய அரசியமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கும், அரசியல் உரிமைக்கும் தீர்வு காண அவதானம் செலுத்துங்கள்.இனவாதமே இந்த நாட்டின் அழிவுக்கு முக்கிய காரணி என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

“இவ்வளவு இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது.” – சிறிதரன் விசனம் !

இவ்வளவு இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது.”   எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) பூநகரியில் இடம்பெற்றது குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் போகமாட்டோம் என்று மார்தட்டியவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் வீழ்ந்து இருக்கிறார்கள்.

இலங்கையில் மக்கள் இன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்கிறார்கள். எரிவாயுவிற்காக வரிசையில் நிற்கிறார்கள்,அத்தியாவசிய பொருட்களை வரிசையில் நின்று தான் வாங்க வேண்டும் என்கிற நிலை இப்போது உருவாகியிருக்கிறது. பொருளாதார நிலையில் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.

இப்படி இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்களில் கொரோனாக்காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பயணத்தடைகளின் போது முளைத்த இராணுவ சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

வனவளத்திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றன தமிழர்களின் நிலங்களை பறித்து விவசாயம் செய்வதற்கு தடையாக இருக்கிறார்கள். முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ நியமனங்களினால்த்தான் நாடு இன்று இவ்வாறான அழிவைச் சந்தித்துள்ளது” தெரிவித்தார்.

திட்டமிட்ட வகையில் தமிழர்களின் இனப்பரம்பலை அழிக்கும் அரசு !

“வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைகளின் ஊடாக பாரிய யுத்தம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.” என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”தமிழர்களின் பகுதியில் உள்ள பாரிய காடுகள் அழிக்கப்பட்டு தமிழர்களின் இனப் பரம்பலை அழிக்க சிங்கள மக்களிற்கு நிலத்தை வழங்கும் வனவளத் திணைக்களம் தமிழர்கள் பரம்பரையாக வைத்திருந்த நிலத்தையும் பறிப்பதுதான் ஒரு நாடு ஒரு சட்டமா? இவ்வாறான திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு பிக்குமாரும் முனைப்புக் காட்டுகின்றனர்.

இந்த நாட்டில் இன்று வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைகளின் ஊடாக பாரிய யுத்தம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அதன் மூலம் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றது. இதனை அரசு கன கச்சிதமாக திட்டமிடுகின்றது. முல்லைத்தீவின் 27 கிராமங்கள் பறிக்கப்பட்டு சிங்கள மக்களிற்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது. இது தமிழர்களிற்கு எதிரான பகிரங்க யுத்தம் – தற்போதும் இதுபோன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றது.

அன்று குண்டு போட்டு அழித்தார்கள், இன்று நிலங்களை பறித்து தமிழர்களை நிர்க்கதி ஆக்குகிறார்கள் என சிறிதரன் பகிரங்கமாக கூறியுள்ளார்.

“மாகாணசபை தேர்தலில் சிங்கள மக்களின் வாக்களிப்பு இந்த அரசை கட்டாயம் ஆட்டம் காணச்செய்யும்.” – எஸ்.சிறிதரன்

“மாகாணசபை தேர்தலில் சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக கட்டாயம் வாக்களிப்பார்கள். அந்த வாக்களிப்பு என்பது இந்த அரசை கட்டாயம் ஆட்டம் காணச்செய்யும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (12.04.2021) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுவது சம்பந்தமாக எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எந்த முறையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும், எப்போது நடத்தப்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்தால் நாங்கள் அந்த மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

குறிப்பாக மாகாண சபை என்பது வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாகவே கொண்டு வரப்பட்டது. அந்த அடிப்படையில் மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

அது என்ன முறையில் நடத்தப்பட வேண்டும், எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதற்கு அப்பால், விரைவாகவும் வேகமாகவும் அந்த மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். அத்தேர்தலை நடாத்தி உடனடியாக மாகாண சபைகளில் அதிகார பரவலாக்கல், அதன் ஊடான மக்கள் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

19ஆம் திகதி தீர்மானிக்கின்ற திகதியென்பது பலமுறை அவர்களால் சொல்லப்பட்ட செய்திகள். இன்னுமின்னும் அதன் காலம் இழுத்தடிக்கப்படலாம். காலத்தை இழுத்தடிக்கப்படாமல் உடனடியாக முடிவு எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

விரக்தி அடைந்திருக்கின்ற சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக கட்டாயம் வாக்களிப்பார்கள். அந்த வாக்களிப்பு என்பது இந்த அரசை கட்டாயம் ஆட்டம் காணச்செய்யும்.

அடுத்து அவர்களின் அரசியல் பாரம்பரியம் அல்லது பரம்பரை அரசியல் என்பது கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற பயத்தின் காரணமாகவே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடாத்த பின்னடிக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டைக் கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள். ” – நாடாளுமன்றில் சிறீதரன் !

“இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டைக் கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள். ” என  வலியுறுத்தியுள்ளதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை(25.03.2021) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழ் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைகளுக்கான, அவர்கள் மீது புரியப்பட்ட போர் குற்றங்களுக்கு எதிரான, அவர்களுக்கு நீதிக்கு புறம்பாக நடைபெற்ற கொலைகளுக்கு எதிராக, சொத்தழிவுகளுக்கு எதிராக ஒரு நீதி வேண்டுமென்ற அடிப்படையில்தான் கடந்த 12 ஆண்டுகளாக ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலை வகித்திருந்தாலும் இலங்கையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டுமென்ற செய்தியை தெளிவாக எடுத்துரைத்துள்ளதுடன், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அவர் உரையாற்றிய பல இடங்களில் இந்த நாட்டில் ஒரு தமிழினம் இருப்பதாக,அவர்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக கூறியதுமில்லை. ஏற்றுக்கொண்டதுமில்லை. அவரின் கிராம மட்ட சந்திப்புக்கள் கூட இதுவரை வடக்கிலோ கிழக்கிலோ நடந்ததுமில்லை. அமைச்சர்கள் இனவாதத்தை கக்குகின்றார்கள். இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டைக் கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்றார்.