மூன்று தசாப்தங்களின் பின் இராணுவ கெடுபிடி யில் இருந்து விடுவிக்கப்பட்ட கிழக்கின் உவர்மலை பாதை !
30 ஆண்டுகளாக தொடர்ந்த யுத்த காலம் முதல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகரித்த இராணுவ கெடுபிடிகள் நீடித்திருந்தது. இந் நிலையில் யுத்தத்தின் பின்பாகவும் கூட இராணுவ கெடுபிடிகள் நீடித்து வந்தன. கடந்த கால ராஜபக்ஷ அரசாங்கங்களோ அல்லது தமிழ்தேசியதரப்பு ஆதரவளித்த நல்லாட்சி அரசாங்க காலத்திலோ கூட இராணுவ கெடுபிடிகள் குறைக்கப்படவுமில்லை – இராணுவ முகாம்கள் – சோதனை சாவடிகள் பெரிதாக அகற்றப்பட்டதும் கிடையாது. இந்த நிலையில் தமிழ்தேசிய அரசியல் தரப்பின் ஆதரவின்றி தமிழ்மக்களின் ஆதரவுடனும் பாராளுமன்றத்தில் ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி அரசு இராணுவ கெடுபிடிகளை அடுத்தடுத்து நீக்கி வருகிறது. வடக்கில் மிக நீண்டகாலமாக காணப்பட்ட ஆணையிறவு சோதனைச்சாவடி நீக்கப்பட்டமை, 34 ஆண்டுகளின் பின் வசாவிளான் – அச்சுவேலி பாதை பாதை திறப்பு , யாழ் கற்கோவளம் தனியார் காணி இராணுவ முகாமை அகற்ற உத்தரவிடப்பட்டமை என தமிழ்மக்களின் உள்ளக்கிடக்கையை அறிந்து அரசு செயற்படுவதாக சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம் தேசம் நெட் நேர்காணலில் தெரிவித்தார். இலங்கை அரசியலில் இருந்து தமிழர்களை தூரப்படுத்திய அத்தனை விடயங்களையும் , தமிழ்தேசியவாதம் பேசி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளின் எதுவித கோரிக்கைகளுமின்றி அரசு செய்து வருகிறது. இந்த இராணுவ கெடுபிடிகளை அகற்றும் செயற்பாட்டின் இன்னும் ஒரு கட்டமாக திருகோணமலையில் 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டிருந்த வீதியொன்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
உவர்மலை 22ம் படைப்பிரிவின் இராணுவப் படைத்தளத்தினை அண்மித்த வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலக வீதி வழியாக 22ம் படைப்பிரிவின் இராணுவ நூதனசாலையின் வாயிலில் இருந்து உவர்மலை மத்திய வீதியினை அடையக்கூடியதான வீதியானது கடந்த மூன்று தசாப்த காலமாக பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் வீதித்தடைகள் போடப்பட்டிருந்தது. இவையே தற்போது அகற்றப்பட்டுள்ளன.
