உலக உணவுத் திட்டம்

உலக உணவுத் திட்டம்

3.4 மில்லியன் இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்துள்ள உலக உணவுத் திட்டம்!

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கவனம் செலுத்தும் நிலையிலேயே  உள்ளது என்று உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத்திட்டம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட வீட்டு உணவுப் பாதுகாப்பு ஆய்வின்படி 33 சதவீத குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, கொழும்பின் நகர்ப்புறங்களில் கடந்த ஜனவரியில் உணவுப் பணவீக்கம் 60.1 சதவீதமாக இருந்தாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் பொது உணவு விநியோகம், பாடசாலை உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு மூலம் 3.4 மில்லியன் மக்களுக்கு உதவ தாம் திட்டமிட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் – உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை !

பலவீனமான விவசாய உற்பத்தி, விலைவாசி உயர்வு மற்றும் தொடரும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத் திட்டமும் எச்சரித்துள்ளன.

6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், போதுமான உயிர்காப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை மோசமடையக்கூடும் என்றும் கூறியுள்ளன.

ஏறக்குறைய 30% மக்கள் ஏற்கனவே உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், எனவே அவசர உதவி தாமதமானால், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என இலங்கை உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி விமலேந்திர சரண் கூறியுள்ளார்.

ஏறக்குறைய இரண்டு பருவகாலமாக பயிர்ச்செய்கை தோல்வியடைந்துள்ளமை காரணமாக இலங்கையில் உணவு உற்பத்தி கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது மற்றும் அன்னிய செலாவணி நெருக்கடி காரணமாக உணவு மற்றும் தானியங்களின் இறக்குமதியும் குறைந்துள்ளது.