உக்ரைன் – ரஷ்ய போர்

உக்ரைன் – ரஷ்ய போர்

ரஸ்யாவின் பகுதி மீது உக்ரைன் தாக்குதல் ..? – 27 பேர் பலி !

ரஸ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மிகவும் மும்முரமான சந்தையில் பயங்கரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பிராந்தியத்தின் ரஸ்ய சார்பு தலைவர் டெனிஸ் புஸ்சிலின் தெரிவித்துள்ளார். அவர் உக்ரைனே இந்த தாக்குதலை மேற்கொண்டது என குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் அந்த பகுதியில் செயற்படும் உக்ரைன் இராணுவத்தினர் இதனை நிராகரித்துள்ளனர்.

அழிக்கப்பட்ட கடைகளையும் அவற்றின் முன்னால் சடலங்களையும் காண்பிக்கும் படங்களை ரொய்ட்டர் வெளியிட்டுள்ளது.

எறிகணைவருவதை சத்தத்தின் மூலம் அறிந்துகொண்ட நான் கடைக்குள் பதுங்கிக்கொண்டேன் என உயிர்பிழைத்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

புகைமண்டலத்தையும் மக்கள் அலறுவதையும் பெண் ஒருவர் அழுவதையும் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு மேலதிக உதவிகளை வழங்குங்கள் – அமெரிக்காவில் செலன்ஷ்கி !

உக்ரைனுக்கு மேலதிக உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் தலைநகர் வொஷிங்டன் DC-இல் தலைவர்கள் பலரைச் சந்தித்துள்ளார்.

 

61 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதி முயற்சிகளை அவர் இந்த சந்திப்புகளின் போது மேற்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

 

இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய தவறான செயற்பாடுகளை காரணங்காட்டி அமெரிக்க காங்கிரஸை சமரசப்படுத்தினாலேயே இந்த உதவித் தொகையைப் பெற முடியுமென ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.

மீண்டும் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் திகதி போர் தொடுத்தது.

இந்தப் போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம். அதிபர் ஜோ பைடன் இதற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் போர்த்தளபாட உதவிகளே உக்ரைன் மீதான போருக்கான காரணம் என ரஷ்யா குற்றச்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது – ரஷ்ய ஜனாதிபதி புடின்

ரஷ்யா – உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருக்கிறார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து புடின் கூறும்போது,

“சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. உக்ரைனுடனான எங்கள் மோதலில் சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது ஆனால் போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை. ரஷ்யாவின் முக்கிய வர்த்தக நாடாக சீனா உள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் மரியுபோல் பகுதிக்கு புடின் திடீரென பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தில் மரியபோலில் மறுசீரமைப்பு செய்வது குறித்து ஆலோசனையை அவர் நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

 

“உக்ரைன் – ரஷ்ய போரை என்னால் ஒருநாளில் முடிவுக்கு கொண்டு வர முடியும்.”- ட்ரம்ப்

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022 பெப்ரவரி மாத இறுதியில் ரஷிய ஜனாதிபதி புடின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை  மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது.

பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ரஷ்யா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உக்ரைன் நாட்டிற்கு புதிதாக 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ஆயுத உதவியாக 31 போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இந்த போர் முடிவுக்கு வராமல் தொடர்வது இரு நாடுகளை மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் தாக்கங்கள் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரஷியா – உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். போரை தற்போதைய அமெரிக்க அரசு ஒழுங்காக கையாளவில்லை எனக் கூறிய டொனால்டு டிரம்ப்,

“நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுபோன்ற போர் ஏற்பட்டிருக்காது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் புதின் போரை தொடங்கியிருக்க மாட்டார். லட்சம் ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற போரை நடத்த விட்டிருக்கமாட்டேன். போர் சூழல் ஏற்பட்டது தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். இப்போது அமெரிக்கா டாங்கிகளை கொடுக்கிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை தரப்போகிறதா? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் என்ன சொன்னாலும் கேட்பார். போரை நிறுத்த எனக்கு 1 நாளுக்கு மேல் ஆகாது. 3ம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உண்டு. இந்த போரை நிறுத்தி காட்ட என்னால் மட்டுமே முடியும்” என்றார்.

“ரஷ்யாவும், உக்ரைனும் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.” – சீனா

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும், உக்ரைனும் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், அனைத்து நாடுகளும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக சீனா 12 அம்ச செயல் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: ”அனைத்து நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். (NATO) கூட்டு ராணுவத்தை வலுப்படுத்துவதன் மூலமோ விரிவுபடுத்துவதன் மூலமோ ஒரு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.

மோதலோ போரோ ஒருவருக்கும் நன்மையை அளிக்காது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ரஷ்யாவும் உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரே திசையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும். இதன்மூலம் படிப்படியாக பதற்றம் குறைந்து போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்.

பேச்சுவார்த்தையும் விட்டுக் கொடுத்தலுமே உக்ரைன் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு சீனாவின் உறுதியான ஆதரவு தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சீனாவின் இந்த செயல்திட்டத்தை அமெரிக்கா விமர்சித்துள்ளது. ”உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவியதற்கு மேற்கத்திய நாடுகளும் நேட்டோ அமைப்புமே மறைமுக காரணம்; அவைதான் போரை தூண்டின என மேற்கத்திய நாடுகளுக்கும் நேட்டோவுக்கும் எதிராக கருத்துக்களைக் கூறி வந்த நாடு சீனா. இதன்மூலம், சீனா ஒரு சார்பான நிலைப்பாட்டை ஏற்கெனவே எடுத்துவிட்டது” என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

 

பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வரும் நிலையில், அந்த நிலைப்பாட்டுக்கு ஒத்த நிலைப்பாட்டை சீனா வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ஒரு வருடத்தை தொட்டது ரஷ்ய – உக்ரைன் போர்” – இரண்டரை லட்சத்துக்கு மேற்பட்ட மனித உயிர்கள் பலி !

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது தாக்குதலை தொடங்கியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து சின்னாபின்னமாகிவிட்டன.

இந்த சண்டையில் சுமார் 2 லட்சம் வீரர்களும், 42 ஆயிரம் பொதுமக்களும் உயிர் இழந்துவிட்டனர். 57 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். பலம் வாய்ந்த ரஷியாவிடம் உக்ரைன் சில நாட்களில் வீழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் அதி நவீன ஆயுத உதவிகள் செய்ததால் ரஷியாவை எதிர்த்து உக்ரைன் ஆக்ரோஷத்துடன் போரிட்டு வருகிறது.

இதனால் இந்த போர் மாதக்கணக்காக நீடித்து இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. போர் தொடங்கி இன்று 366-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் அமைதி நிலைக்க ரஷியா போரை நிறுத்துவது தொடர்பாக 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.சபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் உக்ரைன் மீதான போரை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உக்ரைனை விட்டு ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

ரஷியாவுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்து 141 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன. ஆனால் இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகள் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. 141 நாடுகள் ஆதரவு கொடுத்ததால் ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நடந்த விவாதத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷியாவை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ரஷிய பாதுகாப்பு துறை மந்திரி கெர்கய் குற்றம் சாட்டினார்.

 

உக்ரைன் – ரஷ்ய போரால் 19,000 பொதுமக்கள் பாதிப்பு !

உக்ரைனில் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போரில் இருந்து கிட்டத்தட்ட 19,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதில் 7,199 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11,756 பேர் காயமடைந்தனர்.

கனரக பீரங்கிகளின் ஷெல் தாக்குதல்கள், பல ஏவுகணை ரொக்கெட் அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் உட்பட வெடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இதே நேரம இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போர் சர்வதேச அரசியலாக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பக்கம் சீனா சாயும் என்றால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் சீனா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த நாடு, ரஷ்யாவுக்கு ஆபத்தான ஆயுதங்கள் எதையும் வழங்கும் திட்டமில்லை என மறுத்துள்ளது.