இலங்கை யானைகள்

இலங்கை யானைகள்

யானைகளைப் பார்க்க சுற்றுலா வருகின்றனர் ! ஆனால் நாங்கள் யானைகளை அழிக்கின்றோம் ! ?

யானைகளைப் பார்க்க சுற்றுலா வருகின்றனர் ! ஆனால் நாங்கள் யானைகளை அழிக்கின்றோம் ! ?

கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 24 லட்சமாக எகிறியிருந்தது. அவர்கள் இந்த அழகிய தீவையும் இங்குள் யானைகளையும் பார்க்கவே வருகின்றனனர். ஆனால் கடந்த ஆண்டு 386 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது .

பாதுகாப்பு திணைக்களத்தின் தகவல்களின் படி, அதிகப்படியாக 81 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும், 56 யானைகள் மின்சாரம் தாக்கியும் , உயிரிழந்துள்ளன .

இளம் வயதுடைய யானைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் , யானைகளின் தாக்குதல்களினால் 154 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது .

இலங்கையின் யானைகள், IUCN இனால் 1986 ஆம் ஆண்டிலிருந்து அழிந்து போகும் அபாயமுள்ள விலங்குகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டு உள்ளமையும் கவனிக்கத்தக்கது.

2023 ஆம் ஆண்டில் 470 காட்டு யானைகள் உயிரிழப்பு !

2023 ஆம் ஆண்டில் 470 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதோடு, அவற்றில் 200 யானைகள் மனித செயற்பாடுகளினால் உயிரிழந்துள்ளன.

இதனை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் (பாதுகாக்கப்பட்ட பகுதி முகாமைத்துவம்) மஞ்சுள அமரரத்ன தெரிவித்துள்ளார்.

அதில்,  துப்பாக்கிச் சூட்டினால் 83 யானைகளும், யானை வெடிகளால் 47 யானைகளும், மின்சார தாக்கி 66 யானைகளும், உடம்பில் நஞ்சேற்றம் இடம்பெற்றதால் 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.

மேலும், உடல் நலக்குறைவு, இயற்கை காரணங்கள் அல்லது விபத்துக்களால் 70  யானைகளும், ரயிலில் மோதி 23  யானைகளும் உயிரிழந்துள்ளன.

கடந்த வருடம் செம்டம்பர் மாதம் 27 ஆம் திகதி அதிகளவான யானை உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. ரயிலில் மோதி 11 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

மின்சார வேலியில் சிக்குண்டு காட்டுயானையொன்று பலி !

நிகவரெட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் காட்டுயானையொன்று மின்சார வேலியில் சிக்குண்டு  பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த யானையின் சடலமானது நேற்று அதிகாலை நிகவரெட்டிய – திவுல்லேவ திகன்னேவ பகுதியில் வைத்து வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரம் எனவும் 30 வயது மதிக்கத்தக்கது என்றும் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நிகாவெரெட்டிய நீதிமன்றத்தில் நேற்று(26) முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்த காட்டு யானை நிகவரெட்டிய மிருக சிகிச்சைப் பிரிவின் வைத்தியரினால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

யானைகளை காப்பாற்றுங்கள் – கொழும்பு கோட்டையில் போராட்டம் !

இலங்கையில் யானைகளின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரிடம் வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சுற்றாடல் அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் கடந்த நாட்களாக உயிரிழந்த யானைகளின் படங்களை ஏந்தியவாறும் சுலோகங்களை பிடித்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் சுற்றாடல் அமைப்பினர் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை – தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

இலங்கைக்கு சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை மருத்துவமனையை வழங்க முயற்சித்து வருவதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்திருந்தார்.

யானைகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், யானைகளுக்கு மருத்துவமனை நிர்மாணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் போன்றவை குறித்து ஆராய்வதற்காக தாய்லாந்தின் சிறப்புக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

மேலும், முத்துராஜா யானைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் மீண்டும் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இலங்கையில் உரிய சிகிச்சை அளித்திருந்தால் முத்துராஜாவை இலங்கையிலேயே வைத்திருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.