“இலங்கைக் கடல் எல்லையை அத்துமீற வேண்டாம் !” இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அமைச்சர்கள் பதில் !
“இலங்கைக் கடல் எல்லையை அத்துமீற வேண்டாம் !” இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அமைச்சர்கள் பதில் !
இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் காயப்பட்டதற்கு, இந்திய வெளிவவாகார அமைச்சு, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதுவரை அழைத்து எச்சரித்திருந்தது. அதன் பின் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா, இலங்கை கடற்பரப்புக்குள் வரும் எந்தவொரு படகுக்கும் இடமளிக்க முடியாது. இந்திய படகாக இருந்தாலும் சரி வேறு நாட்டின் படகாக இருந்தாலும் சரி அவை கட்டாயம் கண்காணிக்கப்படும். அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவதே அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக வடமராட்சிக் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதுடன் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழித்து வருகின்றனர். இந்திய மீனவர்களை கைது செய்ய முனைந்த இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் கடந்த ஆண்டு இந்திய மீனவர்களால் கொல்லப்பட்ட சம்பவம் தெரிந்ததே. தென்பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் யாழில் சில ஆயிரம் மீனவர்கள் கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
காயப்பட்ட மீனவர்களை பார்வையிடச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இறைமையுள்ள நாடு, அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர். இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம். இன்று நேற்று உருவான விடயம் அல்ல. பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வைக் காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது. அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள். எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று நாங்கள் பலமுறை இந்திய கடற்றொழிலாளர்களை தயவாகக் கேட்டுள்ளோம் என்றார்.