இலங்கை மாகாண சபை

இலங்கை மாகாண சபை

“மாகாண சபை முறை நீக்கப்படாது – உறுதியளித்த அனுர தரப்பு ” – மாகாண சபைகளே போதும் என கூறும் தமிழ்தேசியம்!

“மாகாண சபை முறை நீக்கப்படாது – உறுதியளித்த அனுர தரப்பு ” – “வேறு அதிகாரங்கள் வேண்டாம். மாகாண சபைகளே போதும் என கூறும் தமிழ்தேசியம்!

மாகாண சபை முறை நீக்கப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ள கருத்து பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..? என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க , ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம். மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டில் மாகாண சபை தேர்தல்- அநுர குமார திஸாநாயக்க

இலங்கை மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – கஹவத்தையில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவர் மேலும் தெரிவிக்கையில் “.. உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும். அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறேன்.

அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பலமான நாடாளுமன்ற அதிகாரமும் அவசியமாகும். கடந்த காலங்களில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் இருந்தனர்.

குறித்த உறுப்பினர்களின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அவ்வாறான கோபம் இருந்தது. எனவே, இருந்ததை விட மோசமான நாடாளுமன்றத்தையா அல்லது சிறந்த நாடாளுமன்றத்தையா உருவாக்க வேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் 25 பேருக்குக் குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும்.

எனவே, ஊழலற்றவர்களைக் கொண்டு பலமிக்கதொரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்றார்.

மாகாண சபைகள் வெள்ளை யானை அல்ல. அவற்றுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – முன்னாள் தேர்தல் ஆணையாளரஷ் மகிந்த தேசப்பிரிய

இலங்கையில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீப்பிள்ஸ் பவுண்டேசன் (Peoples Foundation) ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து ”எமது உரிமைகள், எமது வளங்களை பாதுகாக்க எமது மாகாணத்தின் மாகாண சபையை வலுப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் கண்டியில் இடம்பெற்ற செயலமர்வில் அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் அதிபர் மற்றும் அமைச்சரவை தேவையும் இல்லை.

தற்போது மாகாண சபை மக்கள் கூட்டிணைப்பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் மாகாண சபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும் போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடியாக பொறுப்பேற்காமல் இருக்கின்றனர்.

 

மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும். தற்போது மாகாண சபை செயற்திட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை. எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவுசெய்தலை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அநேகமானோர் மாகாண சபையை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாண சபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீண்டிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் 1வீதமளவே செலவாகுகின்றது” எனவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜயலத் பண்டார, முன்னாள் ராஜா உஸ்வெட கெய்யாவ, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் தலைவர் கே.அர்ஜூன, பீபிள்ஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹேரத் உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் சிவிலமைப்புக்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.