இலங்கையில் தினசரி 45 பேர் பலி ! – தீவிரமடையும் மதுபான பாவனை
இலங்கையில் மதுபான பாவனை காரணமாக வருடத்துக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். நாளொன்றுக்கு 40 முதல் 45 பேர் உயிரிழக்கின்றனர் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பிரதிநிதி எம்.நிதர்சனி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2022ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனைக்காக தினமும் 121 கோடி ரூபா செலவிடப்படுகின்றது, 2022 ஆம் ஆண்டில் மதுபான வரி வருமானம் மற்றும் மதுபான பாவனையால் ஏற்படும் பொருளாதார மற்றும் சுகாதார செலவீனம் 237 பில்லியன் ரூபாவாகும். 2023ஆம் ஆண்டில் மதுபான வரியை 20 வீதத்தால் அதிகரித்தமையால் நாட்டின் மதுபான வரி வருமானம் 11.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்ததுடன் மதுபான பாவனைகளும் குறைவடைந்தன.
இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடுதலான மதுபானசாலைகள் உள்ளன. மதுபான நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 60 கோடி ரூபா வருமானம் மீட்கின்றனர். பாடசாலைகளுக்கிடையே நடைபெறுகின்ற பிக் மெச் விளையாட்டிலிருந்து மாணவர்கள் மதுபானம் அருந்தப் பழகுகின்றனர் எனவும் எம்.நிதர்சனி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பை அண்டிய பகுதிகளில் மட்டும் 27 இரகசிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் அண்மையில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மேலும் வன்னி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு பாவனையால் மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை கவனிக்கத்தக்கது. இதேவேளை நேற்றையதினம். யாழ். (Jaffna) நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர்.

