இலங்கை பொலிஸ்

இலங்கை பொலிஸ்

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை !

திருமணம் ஆகாத (35) வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்க வேண்டும். என நுவரெலியா மேல் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பினை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய நேற்று (13) செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

வழக்கு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கந்தப்பளை ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றிய லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் கடமை நேரத்தில் 35 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக கடந்த 2019 ஆண்டு நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கின் சாட்சியங்கள் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்தரான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு அவருக்கான தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதபதி விராஜ் வீரசூரிய நேற்று செவ்வாய்க்கிழமை (13) வழங்கினார்.

இதன்போது, மன்றில் ஆஜராகியிருந்த குற்றவாளியான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்ற பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருட சிறை தண்டனையும்,தண்டப்பணம் 20 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இலங்கையில் சடுதியாக அதிகரித்த போதை மாத்திரைகளைா் பயன்படுத்துவோர் எண்ணிக்கை  – இலங்கை பொலிஸ் !

போதைப் பொருட்களுக்கு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளைா் பயன்படுத்துவோர் எண்ணிக்கை  அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இது தொடர்பான தகவல்கள் தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் கடந்த நாட்களில் 3,63,438 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யுக்திய நடவடிக்கை காரணமாக பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இனவாதத்தை தூண்டிவிட்டு தமிழர்களின் உரிமையினை மறுக்கும் செயற்பாட்டை பொலிஸார் செய்கின்றனர் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

இனவாதத்தை தூண்டிவிட்டு தமிழர்களின் உரிமையினை மறுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதை நேற்றைய சம்பவம் நிரூபித்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மயிலத்தமடுவிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட பலர் சென்ற நிலையில் பொலிஸாரினால் உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

இதன்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரரிர் தலைமையிலான குழுவினர் வருகைதந்து விளைவித்த குழப்பத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

 

இந்த நிலையில் ஜனாதிபதி செயலாளரின் அறிவுறுத்தலையும் மீறிய வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்பட்டதாகவும் இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

“வட, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.” – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

வட, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

வரவு – செலவுத் திட்டக் குழு விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த 30 வருட யுத்த கால சூழ்நிலையின் போது, வடக்கில் எந்தவொர இளைஞர் யுவதிகளுக்கும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அதனால் அப்பிரதேசத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தி எவரையும் இச்சேவையில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் நாம் 2016 ஆம் ஆண்டு புதியதொரு நடைமுறையைக் கொண்டு வந்திருந்தோம்.

 

பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை புகட்டும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். ஆனால் அவ்வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் செயற்படவில்லை. எனவே அவ்வேலைத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் தாக்கியதாலேயே இளைஞர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் – வெளியானது சட்ட மருத்துவ அறிக்கை!

களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.

 

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே நேற்றைய தினம் உயிரிழந்தார்.

 

சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்பவரே உயிரிழந்தார்.

 

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த 8ஆம் திகதி திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

 

தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அதனால் சந்தேக நபர்கள் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

 

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

 

இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறைக்கவாலரின் காவலுடன் உயிரிந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

 

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டிருந்தது. உடற்கூறு பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றி முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் !

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பராமரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தகவல் அளிப்பவரின் அடையாளத்தை அறிவிக்காமல் அந்த எண்ணின் மூலம் உரிய தகவல்களை வழங்கவும் முடியும்.

 

அந்த இலக்கத்தின் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் நச்சு போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனூடாக அளிக்கும் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து மன அழுத்தம் – 260 பொலிஸார் எவ்வித அறிவித்தலுமின்றி சேவையிலிருந்து விலகல் !

இந்த வருடம் 260 பொலிஸார் எவ்வித அறிவித்தலுமின்றி சேவையிலிருந்து விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சர்ஜன்ட்களாவர்.

இவர்களில் பலர் மன அழுத்தம், பொருளாதார பிரச்சினைகள், அதீத கடமைகள், கடமை அழுத்தங்கள், ஓய்வின்மை போன்ற காரணங்களால் பொலிஸ் சேவையை விட்டு விலகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டு 900 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் சேவையை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.