இலங்கை தமிழ் அகதிகள்

இலங்கை தமிழ் அகதிகள்

எங்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புங்கள் – தமிழகத்தில் இலங்கையர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

எங்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புங்கள் – தமிழகத்தில் இலங்கையர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

 

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைய தொடங்கினர்.

இது வரை 309 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொருளாதார நெருக்கடி காரணமாக தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களை அகதிகளாக இந்திய அரசு இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால் இவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் எந்த விதமான நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வருவாய் இன்றி தவித்த இலங்கை தமிழர்கள் ஐந்து குடும்பத்தினர் மீண்டும் சட்டவிரோதமாக கடல் வழியாக அண்மையில் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அகதிகளாக பதிவு செய்யாமல் உள்ள இலங்கை தமிழர்கள் 13 குடும்பத்தினரை படகு மூலம் அல்லது விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு இன்று (06) மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் மனு கையளித்துள்ளனர்.

தமிழக அகதிகள் பற்றி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மௌனம்! ஆளுநர் அவர்களைக் அழைத்துவர தீவிர முயற்சி!

தமிழக அகதிகள் பற்றி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மௌனம்! ஆளுநர் அவர்களைக் அழைத்துவர தீவிர முயற்சி!
வடக்கு கிழக்கிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதற்கு கடிதம் கொடுக்கும், காரணம் கண்டுபிடிக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தமிழக முகாம்களில் அடிப்படை வசதிகள் உரிமைகள் இல்லாமல் வாழ்ந்துவரும் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரும் விடயம் தொடர்பில் மௌனமாகவே உள்ளனர். மாறாக இந்தியாவில் தொடர்ந்து தங்கியுள்ளவர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி வடமாகாண ஆளுநர் வேதநாயகன் யுஎன்எச்சிஆர் ருNர்ஊசு ரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேவதநாயகன் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் தலைவரான சஞ்சித்த சத்தியமூர்த்தியோடு டிசம்பர் 22 இல் கலந்துரையாடினார்.
தமிழகத்தின் பல்வேறு முகாம்களிலும் முகாம்களிற்கு வெளியேயும் 3 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்கிறார்கள். 1992 ஆம் ஆண்டளவிலேயே பெருந்தொகையானவர்கள் யுத்தத்திலிருந்து தம்மை காப்பாற்றும் பொருட்டு தமிழகத்திற்கு அகதியாக சென்றனர். இவர்களில் ஒரு தொகுதியினரே நாடு திரும்பியுள்ளனர். தமிழக அகதி முகாம்களில் இரண்டு தலைமுறையாக வாழும் இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் இலங்கை திரும்ப விரும்பவில்லை. இவர்களின் பிள்ளைகள் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, தொழில் புரிவதோடு அங்கேயே திருமணம் முடித்து அங்கேயே அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டார்கள்.
அவ்வாறே மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக சென்றுள்ளனர். மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்களின் இரண்டாவது தலைமுறையினரும் தங்களுடைய வாழ்க்கையை தங்கள் பெற்றோர் அகதியாக வந்த நாடுகளிலேயே அமைத்துக் கொண்டுவிட்டார்கள். அத்துடன் அவர்கள் வாழும் நாடுகளின் குடியுரிமையும் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது. அவர்களும் பெரும்பாலும் இலங்கைக்கு திரும்பி வர விரும்பவில்லை.
மாறாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை. தமிழக முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் நீண்டகாலமாக தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும்படி கோருகின்றனர். அவர்களும் கூட இந்தியப் பொருளாதாரத்திற்கு தங்களுடைய பங்களிப்பை செய்து வருகின்றனர்.
எவ்வாறெனினும் சுயவிருப்பின் பேரில் இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அவர்களை அழைத்து வருவதற்கான திட்டங்களை ஆலோசிப்பதும் அவசியமானதேயாகும். மேலும் தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு இலங்கையில் நிரந்தர வாழ்விடமோ, தொழிலோ இல்லாமையால் அவர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்ப விரும்பவில்லை.
ஒரு வேளை தமிழகத்திலிருந்து அவர்கள் அழைத்து வரப்படும் பட்சத்தில் இலங்கையில் அவர்களுக்கான மறுவாழ்த்திட்டம் ஒன்றை உருவாக்கி அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதத்தை வழங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்தலுக்கான அமைப்பானது உலகெங்கிலும் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்கள் தமது சுயவிருப்புடன் சொந்த நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை இலவசமாக செய்து கொடுக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்தலுக்கான
அமைப்பானது 100 மேற்பட்ட நாடுகளில் தனது அலுவலகத்தை கொண்டுள்ளது. சொந்த நாட்டிற்கு சுய விருப்புடன் மீள் திரும்பல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு திட்டத்தின் அகதிகள் நாடு திருப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும். இத்திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்ட்ட பலர் தங்கள் சொந்த விருப்பில் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ் அரச சார்பற்ற முறையில் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு, சட்டப்பூர்வமாக நாடு திரும்புவதற்கான ஆவணங்களையும் ஏற்பாடு செய்வதோடு விமானப் பயண ஒழுங்குகள் மற்றும் பயணப் பொதி தொடக்கம் ஒழுங்குகளையும் செய்து கொடுக்கும். மேலும் நாடு திரும்பியவர்களுக்கு தமது சொந்த இடங்களில் குடியமரவும் மற்றும் அவர்கள் தமது வாழ்வை தொடங்குவதற்கு உதவியாக ஆரம்ப கொடுப்பனவாக அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்குகின்றது. இதனை ஸ்ராற் கெல்ப் என அழைக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்பவர்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்கங்கள் ஊக்கத்தொகை வழங்குகின்றனர். ஜேர்மனியைப் பொறுத்தவரை 18 வயதிற்கு மேற்பட்டபவர்களுக்கு ஆயிரம் யூரோவும் குடும்பங்களுக்கு 4,000 யூரோக்களுக்கும் குறையாமலும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு 500 யூரோவும் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கு தலைக்கு ஒரு இலட்சம் ரூபாயும் விமானச் சீட்டும் வழங்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சனத்தொகை அடர்த்தி குறைந்த 5 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் வடமாகாணத்திலேயே உள்ளது. யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களே சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டங்கள். இம்மாவட்டங்களில் சகல வசதிகளோடுமான புதிய குடியிருப்புக்களை உருவாக்கி, நாடு திரும்பும் அகதிகளைக் குடியேற்ற முடியும். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஆலயங்கள், பழைய மாணவர்சங்கங்கள் தாங்கள் சேகரிக்கும் பெரும்தொகைப் பணத்தை வினைத்திறனில்லாமல் செலவழிக்கின்றனர். வடமாகாண அளுநர் இதற்கான நிதியம் ஒன்றை உருவாக்கி இந்நிதியை இந்த மக்களின் மீள் குடியிருப்புக்கு பயன்படுத்தப்பட முடியும்.

தமிழகத்தில் உள்ள இலங்கையர்களை மீட்டெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – வடக்கு மாகாண ஆளுநர்

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்

யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய நிலையில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வடக்கு மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்பாக இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டதில் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் பங்கு அளப்பரியது என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குதல், வீடமைப்புத் திட்டம், வாழ்வாதார உதவி மற்றும் வேலை வாய்ப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தி தமிழகத்தில் தற்போதும் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய ஆளுநர், அதற்குரிய திட்டங்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.