உழைக்க வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
உழைக்க வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. இவ்வாண்டு மூன்று லட்சத்து பதினோராயிரம் பேர் வெளிநாட்டில் வேலைவாயப்புப் பெற்று சென்றுள்ளனர். இவர்கள் ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அந்நியச் செலாவணியாகக் கொண்டு வருகின்றனர். சுற்றுலாத்துறைக்கு அடுத்ததாக அதற்குச் சமமாக இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருபவர்களாக இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு இலட்சத்து எண்பத்தியையாயிரம் பேர் ஆண்களாகவும் ஒரு இலட்சத்து பதினையாயயிரம் பேர் பெண்களாகவும் உள்ளனர்.
இத்தொழிலாளர்களில் 75,000 பேர் குவைத்துக்கும் 50,000 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் பயணிக்கின்றனர். அதையும் விட தென்கொரியா, இஸ்ரேல், ரொமேனியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் 10,000க்கும் உட்பட்டவர்கள் செல்கின்றனர்.
இந்த அந்நியச் செலாவணியை இலங்கைக்கு கொண்டு வருவதில் மேற்கில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அவர் பணத்தை உண்டியல் மூலமாக அனுப்புகின்ற போது அந்நியச் செலாவணி இலங்கையை அடைவதில்லை. அந்தப் பணம் அந்த நாடுகளிலேயே தங்கிவிடுகிறது. அதற்குச் சமமான இலங்கை ரூபாய் இலங்கையில் உள்ளவருக்கு வழங்கப்படும். அது டொலராகவோ அல்லது ஏனைய அந்நியச் செலாவணியாகவோ இலங்கைக்கு கிடைப்பதில்லை.
