இரணைமடு நீர் பிரச்சினை

இரணைமடு நீர் பிரச்சினை

நான் துரோகி எனில் எனக்கு வாக்களிக்க வேண்டாம் – யாழில் சிறீதரன்

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் தோல்வியை எதிர்கொள்ள நான் தயாரென  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (02.08.2020) யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியாதென நான் கூறியதாக ஊடங்களில் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.   இரணைமடு தொடர்பில் இப்போது யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டியங்கும் தொலைக்காட்சி என் பெயரைக் குறிப்பிடாமல் எனக்கு எதிராக இரணைமடு நீரை தர மறுத்தவர் யார்? மறக்க மாட்டார்கள் யாழ்ப்பாண மக்கள் என்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒன்றை பிரசுரித்து வருகிறார்கள். இதன் விளக்கம் இல்லாமல் குறுகிய வட்டத்துக்குள் அவர்கள் நிற்கிறார்கள்.

கிளிநொச்சியில் தண்ணீர் இல்லை குடிக்க, விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் இங்கே ஒரு விரோதத்தை கட்டி வளர்க்கலாம் இதனை அரசாங்கம் திட்டமிட்டு செய்தது .இதனையே சிலர்  அரசியலாக காவிச் செல்கின்றார்கள்.நான் யாருக்கும் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை. நியாயத்தை சொன்னேன்.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நாங்கள் முக்கியமான முயற்சிகளை செய்தோம். பாலியாறு எப்போதும் கடலுக்கு தண்ணீர் போகின்ற ஆறு, மண்டைக்கல்லாறு,குடமுறுட்டி போன்ற ஆறுகளாலும் கடலுக்கு தண்ணீர் போகிறது எத்தனையோ வளங்கள் உள்ளது.

நிலத்தடி நீரையும் நன்னீராக்கி 24 மணிநேரமும் குடிதண்ணீர் வழங்கக் கூடிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. எனினும் இவை குண்டுவெடிப்பு, ஜனாதிபதி தேர்தல், கொரோனா போன்றவற்றால் இத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தான் இதன் உண்மை.

இதன் பிறகும் இரணைமடு தண்ணீரை தரவில்லை என்று நீங்கள் எண்ணினால் நான் துரோகி என நினைத்தால், என் மீது நம்பிக்கை இல்லை என்றால் தயவு செய்து எனக்கு வாக்களிக்க வேண்டாம். தோல்வியை நான் ஏற்கத்தயாராக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.