இம்ரான்கான்

இம்ரான்கான்

இம்ரான்கானை விடுதலை செய்தது உயர் நீதிமன்றம் !

நீதிமன்றத்தில் வைத்து இம்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதம் என கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

ஊழல் வழக்கில் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ´ரேஞ்சர்ஸ்´ எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை, 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இம்ரான் கான் கைது சட்ட விரோதம், நீதிமன்றத்தில் யாரையும் கைது செய்யக்கூடாது. அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் இம்ரான் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிபதி அவர் மீதான வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டார்.

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது கைது !

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) இன்று கைது செய்யப்பட்டார். பயங்கரவாதம், தேசத்துரோகம், மதநிந்தனை, ஊழல், பண மோசடி, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராணுவம், உளவு அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் மூத்த அதிகாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் சுமத்தியதாக ராணுவம் தெரிவித்த மறுநாள் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்திற்குச் சென்ற இம்ரான் கான், நீதிமன்றத்தில் பயோமெட்ரிக் பதிவு செய்தபோது, ரேஞ்சர்கள் கண்ணாடி ஜன்னலை உடைத்து, வழக்கறிஞர்களையும் பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கி, இம்ரான் கானை கைது செய்து கைது செய்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஷிரீன் மசாரி தெரிவித்துள்ளார். ‘என்ன சட்டங்கள் இவை? நிலத்தை ஆக்கிரமிப்பது போல் ரேஞ்சர்களால் நீதிமன்றம் தாக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இதுதான் இன்றைய பாகிஸ்தான். துணை ராணுவப் படைகளால் உயர் நீதிமன்றம் தாக்கப்பட்ட பாசிச நாடு இது. அரச பயங்கரவாதம், ரேஞ்சர்கள் வழக்கறிஞர்களை தாக்கி, இம்ரான் கான் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவரை கடத்திச் சென்றுவிட்டனர்’ என்றும் மசாரி கூறி உள்ளார். ரேஞ்சர்கள் இம்ரான் கானை சட்டை காலரைப் பிடித்து சிறை வேனில் ஏற்றிச் செல்லும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு – கொலை செய்யவே வந்தேன் என துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தகவல் !

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான்கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007-ல் ஒரு பேரணியின் போது எப்படி படுகொலை செய்யப்பட்டார்? என்பதை இன்றைய தாக்குதல் நினைவுபடுத்தியது.

ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிரான நடந்த பேரணியின் மையப்பகுதியில் டிரக்கின் மீது இம்ரான் கான் நின்றபோது, கீழே இருந்து அந்த நபர் துப்பாக்கியால் சுடும்போது பதிவான வீடியோ வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை , இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அது காவல்துறையால் உறுதி செய்யப்படவில்லை.

பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு – கைதுக்கும் வாய்ப்பு !

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவரது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்தும் கண்டம் தெரிவித்த இம்ரான், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

 

இதையடுதது பொதுக் கூட்டத்தில் நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான்கானின் பொதுக் கூட்டப் பேச்சை உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது இம்ரான்கான் பேச்சை விமர்சித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, இராணுவம் உள்பட பிற அமைப்புகளை குறி வைக்கும் போக்கின் தொடர்ச்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானின் வீட்டிற்கு செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்ய ஷாபாஸ் ஷெரிப் அரசு திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

“பெண்களுக்கு கல்வி மறுப்பு ஆப்கான் கலாசாரத்தின் ஒரு அம்சம்” – பாக்.பிரதமர் இம்ரான்கான்

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன. அவர்களால் கல்வி கற்க மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியே கூட செல்லக் கூடாது என்ற அளவிற்கு கட்டுபாடுகள் உள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், 2021 ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாகும் என கூறியுள்ளனர்.

அங்கு பெண்கள் அலுவலகம் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், சர்வதேச அரங்கில் தலிபான்களின் உண்மை முகம் வெளிப்படும் வகையில், காபூல் நகரில் கடை முகப்புகளில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தும், அதை கடைகளில் இருந்து அகற்றும் படங்களும் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆப்கானிஸ்தான் பெண்கள் தொடர்பாக வெறுப்பு கருத்து தெரிவித்ததற்காக உலகளவில் ட்ரோல் செய்யப்பட்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கத்திய அரசாங்கங்களின் பிரதிநிதிகள், “பெண்களுக்கு கல்வி கற்பிக்காதது ஆப்கான் கலாசாரத்தின் ஒரு அம்சம்” என்ற இம்ரான்கானின் கருத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள்” என்று அல் அரேபியா போஸ்ட் தெரிவித்துள்ளது.

சில மாதங்கள் முன்னதாக, காபூல் நகராட்சியின் செய்தித் தொடர்பாளர் நெமதுல்லா பராக்சாய், காபூலில் உள்ள கடைகள் மற்றும் வணிக மையங்களின் விளம்பர பதாதைகளிலுள்ள பெண்களின் அனைத்து புகைப்படங்களையும் அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

“அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில், இஸ்லாமிய விதிமுறைகளுக்கு எதிரான வகையில் பெண்கள் படங்களை வைத்திருக்க கூடாது. பெண்கள் உள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படும். விதியை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும்” என்று பராக்சாய் கூறினார்.

“மதத்தின் பெயரால் வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது மிதமாக நடந்துக் கொள்ளப் போவதில்லை.” – இம்ரான் கான்

இஸ்லாமின் பெயரைச் சொல்லி வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக மிதமாக நடந்துக் கொள்ளப் போவதில்லை என பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

சியல்கொட்டில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடிப்படைவாதிகளால் கடந்த வெள்ளிக்கிழமை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வொன்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவை காப்பாற்ற முயன்ற  பாகிஸ்தானியருக்கு கிடைத்த கௌரவம் (வீடியோ) - ஐபிசி தமிழ்

பிரியந்த குமாரவை அடிப்படைவாதிகள் சுற்றிவளைத்திருந்த போது அவரை பாதுகாப்பதற்கு தமது உயிரைப் பணயம் வைத்து போராடியிருந்த மாலிக் அத்னன் என்பவரின் செயலை பாராட்டி சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான்,

2014 ஆம் ஆண்டு பெசாவரில் பாடசாலைமீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது முழு நாடும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று பட்டதைப் போல, சியல்கொட் சம்பவத்தை அடுத்து முழு பாகிஸ்தானும் இனி இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெறக்கூடாது என்பதில் ஒன்றுபட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த கொடூரம் இடம்பெற்ற போது தமது உயிரைப் பற்றி கவலைபடாமல், மாலிக் அத்னன் பிரியந்த குமாரவை பாதுகாக்க முயற்சித்தமை சிறந்த முன்னுதாரணமாகும் என்றும் அவர் கூறினார்.

இதற்காக அவருக்கு “தம்ஹா ஐ சுஜாத்“ என்ற அதி உயர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“சர்வதேச சமூகம் தலிபான்களின் அரசை ஆதரிக்க வேண்டும்.” – ஐ.நாவில் பாக்.பிரதமர் இம்ரான்கான் !

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டு அரசுடன் சண்டையிட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள், அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ம் திகதி நாட்டை முழுமையாக கைப்பற்றினர். அதனை தொடர்ந்து,  புதிய இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்தனர்.  தலிபான்களின் இந்த புதிய அரசை உலக நாடுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஐ.நா.வும் தலிபான்களின் அரசை அங்கீகரிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை.
அதேசமயம், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது முதலே அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அதோடு தலிபான்களின் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா, பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,
இப்போது அனைத்து சர்வதேச சமூகமும் முன்னோக்கிச் செல்லும் வழி என்ன என்று சிந்திக்க வேண்டும். நாம் செல்லக்கூடிய 2 பாதைகள் உள்ளன. நாம் இப்போது ஆப்கானிஸ்தானை புறக்கணித்தால் அது அந்நாட்டு மக்களுக்கு பாதகமாக அமையும். ஐ.நா. அறிக்கையின்படி பாதி ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். அடுத்த ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் செல்வார்கள். ஒரு மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி நம் முன்னால் உள்ளது. இது ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சர்வதேச சமூகம் தலிபான்களின் அரசை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்.