வாள்வெட்டு உள்ளிட்ட சமூக சீரழிவுகளுக்கு எதிராக கிழக்கில் மக்கள் போர்க்கொடி !
மட்டக்களப்பின் ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய வேண்டியும், கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கான நிதியினை வழங்கக்கோரியும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று பெப்ரவரி 02 ஆம் திகதி மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்றது.
ஆரையம்பதி விளையாட்டு கழக உறுப்பினர்கள் மீது வாள் வெட்டு சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு கடுமையான தண்டனையை பிரதேச செயலாளர் பெற்றுத் தர வேண்டும் எனவும் போலீசார் சரியான முறையில் நீதி பெற்றுத்தரவில்லை எனவும், இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை மண்முனைப்பற்றில் உள்ள பொதுமக்கள், விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தன. அப்போது வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமாரவுக்கு என மகஜர் ஒன்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
அண்மையில் கிழக்கின் பல பகுதிகளிலும் பெருகி வரும் மதுபான கடைகளை எதிர்த்தும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது
