‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம்

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம்

மூன்று லட்சம் மேன்முறையீடுகள் – “அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட ஏழைகளும் உள்வாங்கப்பட்ட செல்வந்தர்களும் !

இலங்கையின் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இலங்கை மக்களிடையேயான ஏழ்மை நிலை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் சாதாரண ஏழை மக்களிடையே காணப்படக்கூடிய ஏழ்மை நிலையை போக்குவதற்காக ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தில் தகுதியானவர்கள் உள்வாங்கப்படவில்லை என இலங்கையின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் அதிருப்தி வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் முதியோர்கள், விதவைகள் , தேவையுடைய ஏழ்மையான குடும்பங்கள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாத நிலையில் இது தொடர்பான அதிருப்தி பல பகுதிகளில் மக்களைப் எதிர்ப்பு போராட்ட களத்திற்கும் தள்ளி உள்ளது.
பெயர்ப்பட்டியல் வெளியானமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு வரும் மக்கள் 26.06.2023 அன்று மலையகம் குறிப்பாக நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதே வேளை 27.06.2023 அன்று வடக்கின் சில பகுதிகளிலும் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வவுனியாவில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றி தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர். வவுனியாவின் ஆசி குளம் பகுதியில் சுமார் 12 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமக்கு நீதி வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டு 27.06.2023 அன்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் பேசிய போது ” அஸ்வெசும பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு எமது கிராமத்தில் பலர் வாழ்கின்றோம். எமது பகுதியில் தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் பெயர் விபரங்கள் சமர்ப்பித்தும் தங்களுடைய விபரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அதிகமாக ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தேவை உள்ள குடும்பங்கள் பல நிராகரிக்கப்பட்டு வசதி வாய்ப்புள்ள குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கும் – தெரிந்தவர்களுக்கும் இந்த அஸ்வெசும நலன்புரி உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கின் பல பகுதிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து உள்ளவர்களின் குடும்பங்களுக்கு இந்த உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை வீட்டுப் பணிகளுக்காக மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு தொழில் தேடி சென்ற வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் பல இந்த உதவி திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுஜன பெரமுனவின்நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார் சுமித்ராராச்சி அவர்கள் இது தொடர்பில் குறிப்பிட்ட போது” அஸ்வெசும நிவாரண செயற் திட்டம் சமூக கட்டடைப்பில் பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் . ஏழ்மையில் நிலையில் உள்ளவர்கள் இந்த செயற்திட்டத்தில் உள்வாங்கப்ப டவில்லை . ஆகவே முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் வரை அஸ்வெசும செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதை இடைநிறுத்த வேண்டும். சமூக கட்டமைப்பில் தீவிரம டைந்துள்ள ஏழ்மை நிலையை இல்லாதொழிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும செயற்திட்டம் சமூகக் கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக் கும் வகையில் உள்ளது . தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரண தொகை வழங்கப்பட வேண் டும் என குறிப்பிடப்பட்டது . அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தில் நிவாரணம் பெறுவதற்குத் தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள் ளார்கள் . தகுதியற்ற செல்வந்தர்கள் நிவார ணத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட் டுள்ளார்கள் . ஆகவே இந்தத் திட்டத்தில் உண்மையான தரப்பினர் அடை யாளப்படுத்தப்படவில்லை.”என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .
இது தொடர்பில் பேசியுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மகரூப் “, நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஏழை மக்கள் சமூர்த்திக் கொடுப்பனவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும், சில அதிகார பின்புலத்திலுள்ளவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே இந்த பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.
நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் அப்பாவி ஏழை மக்களும் வயிற்றுப் பசியை போக்க பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர். அவர்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு ஆறுதலாக இருந்தது.
எனினும், சிலர் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இவர்களின் சமுர்த்திக் கொடுப்பனவை நிறுத்துவதற்கு பின்புலத்திலிருக்கின்றனர். இது பெரும் அநீதி எனவும் மக்களை கஷ்டத்துக்குள் தள்ளிவிடும் இந்த மோசமான செயலை செய்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் கரிசனையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டுள்ள வடக்கு – கிழக்கு பகுதிகளின் தமிழ் அரசியல் தலைவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. புலி அரசியலுக்கும் – போலித் தேசியம் பேசவும் முண்டியடித்துக் கொண்டு வரும் எந்த அரசியல்வாதிகளும் இது தொடர்பில் எதுவித எதிர்ப்பையும் இந்த செய்தி உருவாக்கப்படும்வரை வெளியிடப்படவில்லை என்பது வேதனையான விடயம்.
இதேவேளை அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி “எவரையும் கைவிடாத வகையில் ‘அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு  ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் குறித்த நலன் குறித்த திட்டம் தேவையுடைய ஏழ்மையான குடும்பப் பின்னணி உள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடையும் எனவும் ஏழ்மை நிலையிலிருந்து குறித்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத குடும்பத்தினர்கள் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை தங்களுடைய பிரதேச செயலகங்களுக்கு சென்று மேல்முறையீடு செய்து குறித்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முடியும் என அரசு தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ‘அஸ்வெசும’ எனும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக இதுவரை 383,232 மேன்முறையீடுகளும் 5,045 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். மேலதிக விசாரணைகளுக்கு, பொது மக்கள், வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயற்படும் ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாணத்திலும் இது தொடர்பில் அதிக ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.