தமிழர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி என்.பி.பி அரசு செயற்படுகிறது – அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் !
அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் தமிழர்களின் மிக நீண்டகால அரசியல் கோரிக்கை. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம். இதற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தார்.
அதன் ஈரம் காயும் முன்னரே அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவரும் இல்லை குறிப்பிட்டுள்ளமை அவர்களின் அரசியல் அநாகரிகத்தை அம்பலப்படுத்தி உள்ளது. என்.பி.பி வாக்களித்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழர்களின் அரசியலை அவமானப்படுத்தி உள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம் – என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார் என வீரகேசரி செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மிகுந்த கரிசனை வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஹர்ஷண நாணயக்காரவின் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைத்துள்ளது.
அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லை என்ற விடயத்தைத் தெளிவுபடுத்தியிருந்தாரே அல்லாமல் தமிழ் கைதிகள் இல்லை என்று குறிப்பிடவில்லை என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம். தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார் வி சிவலிங்கம். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுகளில் மட்டும் செயற்பட்டவர்கள் அல்ல அப்படி ஒரு கட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இருக்கவில்லை என்கிறார் சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம். முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆகியோருடைய கொலைகளிலும் வேறு படுகொலைகளிலும் சம்பந்தப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய பத்துக்கும் குறைவானவர்களே தற்போது சிறையில் இருப்பதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இவர்கள் நாட்டின் சுதந்திர தினம் போன்ற காலங்களில் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வமைப்பின் ஆதரவாளரான சுடர்மணி கேதீஸ்வரன் தெரிவிக்கின்றார். பத்துக்கும் உட்பட்ட இக்கைதிகளை வைத்து அரசியல் செய்ய முற்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பை இல்லாமால் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தெரிவித்தார்.