அரசியல் கைதிகள்: பெயர்பட்டியலைத் தாருங்கள் ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் நீதி அமைச்சர் !
அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலைத் தாருங்கள் அவர்களை விடுவிப்பது பற்றி ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளை எப்போது விடுதலை செய்வீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் பேசிய சிவஞானம் சிறீதரன், “தமிழ் இளைஞர்கள் பலர் இலங்கையின் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக அரசியற் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்களின் கண்ணீருடனம் கவலையுடனும் அவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றார்கள். தாயை இழந்த நிலையில் தந்தை பல ஆண்டுகளாக சிறையில் இருக்க தாய், தந்தையின் அரவணைப்பு இல்லாமலே பல பிள்ளைகள் தமது பெற்றோரின் விடுதலைக்காக தவமிருக்கின்றார்கள்.
இந்த நாட்டின் இன ஒற்றுமை, மாற்றம் வேண்டிய புதிய சிந்தனை, சுத்தமான இலங்கை உள்ளிட்ட மகுட வாசகங்கள் சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற மகுட வாசக்ததை மனதில் வைத்தாவது பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியற் கைதிளை விடுவிக்குமாறு அவர் தம் உறவுகள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்” என குறிப்பிட்டு, இது தொடர்பில் 4 கேள்விகளை எழுப்பிய பா.உ சிறிதரன், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெயர்களையும் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர், ஒரு வார காலத்திற்குள் இதற்குப் பூரணமான பதிலை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் என உறுதியளித்தார். மேற் குறிப்பிட்ட பெயர்களை இன்றைய தினம் எனக்கு வழங்கினால் நான் விசேட கவனம் செலுத்துவதுடன் இதற்குரிய பதிலையும் வழங்குவேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
அண்மையில் பா உ சிறிதரனின் வலதுகரமான கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாளிதன் புலம்பெயர்ந்த கணவனது அரசியல் தஞ்ச வழக்கிற்கு கடிதம் கேட்கச் சென்ற போது அவரை படுக்கையறைக்கு அழைத்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பாதிக்கப்பட்ட பெண்ணை பா உ சிறிதரனின் அலுவலகத்தில் வைத்தே வேழமாளிதன் சீண்டியும் உள்ளார். இவ்விடயங்கள் தொடர்பில் பா உ சிறிதரனது பெயரையும் பாதிக்கப்பட்ட பெண் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சம்பவங்களால் பா உ சிறிதரன் பாராளுமன்றத்தில் காட்டும் தமிழ் தேசிய முகக்காடு காற்றில் பறக்கின்றது.