அமைச்சர் சரோஜா சாவித்திரி

அமைச்சர் சரோஜா சாவித்திரி

நவீனமயப்படுத்தப்படும் இலங்கையின் முன்பள்ளிகள் – அமைச்சர் சாவித்திரி

நவீனமயப்படுத்தப்படும் இலங்கையின் முன்பள்ளிகள் – அமைச்சர் சாவித்திரி
அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை அறிமுகப்படுத்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் முன்பள்ளிகளுக்காக தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு இணையாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போது நாட்டில் 13 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளும் பதிவு செய்யப்படாத மூவாயிரம் முன்பள்ளிகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் முன்பள்ளி கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கல்வியமைச்சின் பங்களிப்புடன் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 09 மாகாணங்களிலும் உள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே கொள்கையின் கீழ் இதனை நடைமுறைப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

கேள்விச் செவியன் அர்ச்சுனா, ஊரைக் குழப்பிய தருணங்கள் – கூகிள் அறிவாளியின் அதிக பிரசங்கித்தனம் !

கேள்விச் செவியன் அர்ச்சுனா, ஊரைக் குழப்பிய தருணங்கள் – கூகிள் அறிவாளியின் அதிக பிரசங்கித்தனம் !
கடந்த வாரம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா ஆர்வக்கோளாறினால் முஸ்லீம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் முஸ்லீம் மக்களுக்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மார்ச் 8 இல் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது 1951 ஆண்டு முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அர்ச்சுனாவும் அழையா விருந்தாளியாக தனது கருத்தை திணித்துள்ளார்.
முஸ்லீம் விவாக விகாரத்துச் சட்டத்தை நுனிப்புல் மேய்ந்த எம்பி அர்ச்சுனா முஸ்லீம்களிடையே 12 வயதிலேயே சிறுவயது திருமணம் இடம் பெறுவதாகவும் அதேநேரம் திருமணம் முடிக்கும் போது மணப் பெண்ணின் சுய சம்மதம் மட்டுமே கருத்தில் எடுக்க வேண்டும் எனவும், விவாகரத்தின் போது ஆணும் பெண்ணும் வெவ்வேறாக கையாளப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். அர்ச்சுனாவின் கருத்துக்களை முஸ்லீம் சமூகம் முற்றாகவே நிராகரிக்கின்றது. முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் எந்தவிதமான அடிப்படை அறிவும் இல்லாமல் எம்பி அர்ச்சுனா தமது தனித்துவமான சட்டத்தில் கருத்து வெளியிட்டமையை கண்டிக்கின்றனர்.
அர்ச்சுனா முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு தெரிவித்த கருத்துக்கள் ஏற்கனவே பல கடந்த கால கசப்பான அனுபவங்களால் சிதைந்து போய் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான உறவுவை மேலும் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக இனங்களுக்கான நல்லிணக்கத்திற்காக பாடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லீம் எம்பிக்கள் யாழ்ப்பாண தேச வழமைச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிப்பது எப்படி பொருத்தமற்றதோ அப்படியே எம்பி அர்ச்சுனாவின் கருத்தும் எடுத்துக் கொள்ளப்படும். இதனையே பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சி முஸ்லீம் எம்பிக்களும் அர்ச்சுனாவின் கூற்று தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கு பாராளுமன்றம் இடமளிக்கக்கூடாது என எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பிக்கள் சபையில் வலிறுயுத்தினர். அதேநேரம் ஆளும் கட்சி என்பிபி முஸ்லீம் எம்பியும் பிரதியமைச்சருமான முனீர் முளப்பரும் அர்ச்சுனா உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அர்ச்சுனாவை குறுக்கிட்டு, தெரியாத விடயங்களை கதைக்க வேண்டாம்” எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்த விவகாரத்தில் மகளிர் விவகார அமைச்சர் போல்ராஜ் தெரிவித்த கருத்துக்களும் முஸ்லீம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் ஆராய மல்டி செக்டோரியல் கொமிட்டி ஒன்று உருவாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை நிராகரிக்கும் சட்டத்தரணி நுஸ்ரா ஷாரூக், ஏன் பல துறை பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். நாங்கள் முஸ்லீம்கள். தனித்துவமான இனம். எங்களுடைய முஸ்லீம் பிரதிநிகளை உள்ளடக்கியே இந்த விடயம் கையாளப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார்.
முஸ்லீம் பெண்கள் சார்பில் குரல்கொடுத்த சட்டத்தரணி நுஸ்ரா ஷாரூக் எம்பி அர்ச்சுனா யுஎன்டிபி அறிக்கையை சுட்டிக் காட்டி தெரிவித்த கருத்தை நிராகரிக்கின்றார். நாங்கள் யுஎன்டிபி அறிக்கையை பின்பற்றுபவர்கள் அல்ல. நாங்கள் அல்-குரான்ஜயும் ஹதீஸ்யையும் பின்பற்றுபவர்கள். ஆகவே யாரும் யாருடனும் இருக்கலாம் , விரும்பினால் திருமணம் செய்யலாம், இல்லை பிரியலாம் என்பது எங்களுக்கு பொருந்தாதவைகள் என்கிறார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட எம்.பி மொகமட் தாஹிர், மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எம்பி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்பி சலீம் நளீம் ஆகியோரும் எம்பி அர்ச்சுனா மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.
எம்பி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எமது மார்க்க விடயங்களில் அர்ச்சுனா எம்பி மூக்கை நுழைக்க கூடாது. அவர் சமூக வலைத்தளங்களில் தான் பெயர் ,புகழ் பெற வேண்டும் என்பதற்காக எமது மார்க்கத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்ற நிலையை நாம் காண்கின்றோம். இவர் தனது பைத்தியத்தை போக்க நல்ல வைத்தியத்தை பெற வேண்டும். அவரை சபாநாயகர் புத்தி சொல்லி வழிநடத்த வேண்டும் என்றார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட எம்பி அர்ச்சுனா
இதற்கு பதிலளிக்கையில், பொதுவான மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை மட்டுமே நான் இங்கு பெண்கள் சார்பாக கூறினேன் .இங்கு முஸ்லிம் எம்.பி.க்கள் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றேன்.முஸ்லிம் மதம் என்பது நாங்கள் நினைப்பதுபோன்று சிறிய மதம் அல்ல.ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் மதம். அந்த மதத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்துவதற்கு நாங்கள் யாரும் முயற்சிக்கவில்லை. எமது ரத்தம் அவர்கள். நான் சொன்ன விடயம் சிறுபிள்ளைகளையும் பெண்களையும் மட்டுமே கருதியது. மதத்தை நிந்திப்பதற்காக நான் கூறவில்லை என்று கூறி ஒருவாறு சமாளித்தார். முஸ்லீம் பெண்களுக்கு நீலிக் கண்ணீர் இதே எம்பி அர்ச்சுனா தான் யாழ்ப்பாண என்பிபி எம்பிகள் மூவரையும் பெண் எம்பிக்கள் என கூறியிருந்தார். அவரைப் பொறுத்தவரை பெண்மை என்பது மலினமானது எ‌‌ன்ற ஆணாதிக்க மனோபாவ கருத்தியலாக தான் அக் கூற்று இருந்தது. தன்னை மேதாவியாக காட்டிக் கொள்ளும் வைத்திய கலாநிதிக்கு எல்லா விடயத்திலும் தனக்கிருக்கும் குறையறிவை உணராதவராகவே இருந்து வருகிறார்.
முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் முஸ்லீம் மக்களின் கருத்தும் முஸ்லீம் பெண்களின் கருத்துக்குமே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் ஒரு பிரத்தியேக தனிநபர் சட்டம். அச்சட்டத்தின் வரையறைக்குள் வருபவர்கள் அது தொடர்பில் தமது உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ள முடியும். உலகெங்கும் சமூக வலைத்தளங்களினூடாக பரப்பப்பட்டு வரும் “ இஸ்லாமிய போபியா” தொடர்பில் இலங்கை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிக்கனமாக பயணிக்கும் என்.பி.பியினர் – அமெரிக்க டொலர்களை திருப்பிக்கொடுத்த அமைச்சர் சரோஜினி !

சிக்கனமாக பயணிக்கும் என்.பி.பியினர் – அமெரிக்க டொலர்களை திருப்பிக்கொடுத்த அமைச்சர் சரோஜினி !

ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW) 90 வது அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக மேலதிக செலவுகளுக்காக வழங்கப்பட்ட 240 அமெரிக்க டொலர்களை அரசாங்கத்திற்கு திருப்பி கொடுத்துள்ளார். அவர் அந்த நிதியை ஜெனீவாவில் செலவு செய்யாமல் அப்படியே திருப்பி கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுத்தமைக்கான பற்றுச்சீட்டை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமைச்சர் சரோஜா சாவித்திரி வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் !

சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் புத்தாண்டு (2025) முதல் நாளில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள பெண் கைதிகளை சந்தித்துத்து பேசினார்.

பெண் கைதிகளின் நலன்கள் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களுடன் பரிசுகளையும் வழங்கினார்.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர். ஓல்கா மற்றும் அவரது அமைச்சின் ஏனைய உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் பங்கெடுத்தனர்.