அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

ஐ.நாவில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி நீட்டிக்க நடவடிக்கை – சுமந்திரனிடம் அமெரிக்க தூதுவர் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் (02) கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது.
இதன்போது, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளடங்கலாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம், ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து சுமந்திரனிடம் தூதுவர் ஜூலி சங் கேட்டறிந்தார். அதேபோன்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சுமந்திரன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்தல் என்பன உள்ளடங்கலாக சில நேர்மறையான வாக்குறுதிகளை இப் புதிய அரசு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதற்கு அமெரிக்கத் தூதுவர், தம்மிடம் ஊழல், மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு அவசியமான தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும், அதனை அரசுக்கு வழங்கி உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளமுடியுமா? என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான சாதாரண பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தியால் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் !

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (15) விஜயம் செய்தார்.

வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கேட்பதற்காக இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன் என அமெரிக்க தூதர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் விவசாய மாணவர்களுடன் மறுசுழற்சி மற்றும் பாதுகாப்பு, மரங்களை நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.

இதன்போது அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் அமெரிக்கன் கோனர் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ தளம்..? – அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளியிட்டுள்ள தகவல் !

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதில் அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இராணுவத் தளத்தை அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என நான் மீண்டும் மீண்டும் கூறியுள்ளேன்.

சோஃபா (SOFA) ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது மீள மதிப்பீடு செய்யவோ தமது நாட்டுக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் முதன்முதலில் 1995 இல் கையொப்பமிடப்பட்டது. முன்னதாக, இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலர் ஜெடிடியா ரோயல் தலைமையிலான உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்புக் குழு இந்த ஆண்டு பெப்ரவரியில் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இலங்கைக்கு வந்திருந்தது. பிராந்திய பாதுகாப்பு, இலங்கை இராணுவத்தில் சீர்திருத்தங்கள் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு விடயங்கள் தொடர்பாக முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு வருகைத் தந்திருந்தது.

உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த தூதுக்குழு, அமெரிக்க விமானப்படையின் இரண்டு விசேட விமானங்களில் நாட்டை வந்தடைந்தது. இந்த விஜயம் இலங்கையில் ஒரு இராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்ற ஊகத்தை தூண்டியது. இந்தநிலையிலேயே, குறித்த விஜயம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் தமது நாட்டின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

மனிதக்கடத்தலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சி தொடர்பில் இலங்கை – அமெரிக்கா இடையே கலந்துரையாடல்!

இலங்கையும் அமெரிக்காவும் மனித கடத்தலை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.

சமீபத்தில் ஓமனுக்கு கடத்தப்பட்ட பெண்களை மீட்பது உட்பட, மனித கடத்தலை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை ஊக்குவிக்கும் மற்றும் உலகளாவிய அரங்கில் இலங்கையின் ஒட்டுமொத்த போட்டித்தன்மையை மேம்படுத்தும் தற்போதைய தொழிலாளர் சீர்திருத்த முயற்சிகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க அமெரிக்கா உதவி !

அமெரிக்க விவசாய திணைக்களத்தின் ‘முன்னேற்றத்திற்கான உணவு’ முயற்சியில் பங்குபெறும் இலங்கைப் பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டத்தில் இலங்கையின் விவசாயத் திணைக்களம் கைச்சாத்திட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்துகொண்டார்.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 80,000 இலங்கையர்கள் இந்த திட்டத்தின் மூலம் இறுதியில் உதவிகளைப் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று உட்பட எதிர்பாராத தாமதங்களுக்குப் பின்னர் , அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கை விவசாயத் திணைக்களம் இந்த கூட்டு ஒப்பந்தத்தை நேற்று இறுதி செய்துள்ளன.