அன்டோனியோ குட்டேரெஸ்

அன்டோனியோ குட்டேரெஸ்

இஸ்ரேலை கண்டித்து கையெழுத்திட்ட இலங்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக ஐநாவுக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

ஐநா பொதுச் செயலாளருக்கு ஆதரவளிக்கும் கடிதத்திற்கு அனுசரணை வழங்கிய சிலி தூதரகத்திடம் ஒக்டோபர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தமது பெயரையும் இணைத்துக்கொள்ள நியூயோர்க்கில் உள்ள இலங்கை நிரந்தர தூதரகம் (ஐ.நா.) கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், கையொப்பமிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆளுமை அல்லாதவர் என்று அறிவித்திருந்தது.

 

மேலும் இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதல்களை ஐநா செயலாளர் நாயகம் போதுமான அளவு விமர்சிக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் குற்றம் சுமத்தியிருந்தார்.

 

இந்நிலையில், இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கும் கடிதத்தில் பிரேசில், இந்தோனேசியா, உகண்டா போன்ற உலகளாவிய தெற்கில் உள்ள பெரும்பாலான நாடுகளும், பிரான்ஸ், சுவீடன் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் கையெழுத்திட்டன.

 

இஸ்ரேலுக்கும் ஐ.நா.வுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட விவகாரம் – மன்னிப்பு கோரினார் இஸ்ரேலிய ஜனாதிபதி !

காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளை, இத்தாக்குதல் ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

 

காஸாவில் இஸ்ரேல் திங்கட்கிழமை (01) நடத்திய தாக்குதலால் தனது ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் எனும் தொண்டு நிறுவனம் நேற்று தெரிவித்தது.

 

இதையடுத்து காஸாவில் தனது பணிகளை இடைநிறுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அவுஸ்திரேலியா, போலந்து, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களுடன்; அமெரிக்க கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் மற்றும் பலஸ்தீனியர் ஒருவர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஹேர்ஸி ஹலேவி தெரிவித்துள்ளார்.

 

‘இச்சம்பவம் ஒரு கடுமையான தவறு. அது நடந்திருக்கக் கூடாது’ என அவர் கூறியுள்ளார்.

 

இதேவேளை, இத்தாக்குதல் தொடர்பான தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்கும் மன்னிப்பு கோருவதற்காகவும் வேர்;ல்ட் சென்ட்ரல் கிச்சன் நிறுவனத்தின் தலைவர் ஜோஸ் அன்;ரெஸுடன் தான் உரையாடியதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹேர்ஸோக் தெரிவித்துள்ளார்.

 

இத்தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதல்ல என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளார். எனினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. இது ஒரு துயர சம்பவம் எனக் கூறியுள்ள அவர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளார். பொதுமக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொண்டு நிவாரண ஊழியர்களை பாதுகாப்பதற்கான போதிய நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்ளவில்லை எனவும் பைடன் கூறியுள்ளார்.

 

இச்சம்பவத்தை கண்டித்துள்ள ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ், இந்த யுத்தத்தில் மனிதாபிமானப் பணியாளர்கள் 196 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

 

உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தின் அவசியத்தை இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.