அனுர குமார திஸாநாயக்க

அனுர குமார திஸாநாயக்க

கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தொழில்சார் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் – அனுர குமார திஸாநாயக்க

நாட்டில் உள்ள கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தமது தொழில்சார் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (22) நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

கிராம உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ சேவையை ஸ்தாபிக்காமை, தனித்துவமான சம்பளம் கிடைக்காமை, தேவையற்ற அழுத்தங்கள் போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக உத்தியோகபூர்வ விடுமுறை மற்றும் வேலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கிராம உத்தியோகத்தரின் சேவையானது எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

 

இதேவேளை நீண்டகாலமாகியும் அவர்களது தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் அனுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளுக்கும் – ஜே.வி.பிக்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லை – நாமல் ராஜபக்ஷ

விடுதலைப்புலிகளுக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) க்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லையென பொதுஜன பெரமுனவின் தேசிய அபை்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆகிய இரண்டும் பொதுச் சொத்துக்களை அழித்தல் மற்றும் படுகொலை செய்தல் உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளன.

விடுதலைப் புலிகளைப் போன்று ஜே.வி.பி.யும் மகா சங்கத்தினர், சாதாரண பிரஜைகள் மற்றும் பேருந்துகள், மின்மாற்றிகள் உள்ளிட்ட பொது உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகரான ஜே.வி.பி., அழிவுகரமான நடத்தையின் வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும், நாட்டை அழிவுக்குக் காரணமானவர்களிடம் ஒப்படைப்பதா அல்லது தேசத்தை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சில அரசியல் கட்சிகள் வெறும் தற்பெருமை மூலம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் ராஜபக்ச சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தை கவிழ்க்க முடிந்த அத்தகைய தற்பெருமைக்காரர்களின் ஒரு பிரிவினரை அவர் விமர்சித்தார், அவர்கள் திருட்டு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

“வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.” – அனுர குமார திஸாநாயக்க

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது

 

இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

 

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

 

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

 

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

 

இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

 

இனவாதத்தை பரப்பி அதன் ஊடாக தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் தீர்வுகளுக்கு முன்னர் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். எமது அரசியல் செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நிலை நாட்டுவதாக அமையும் என்றார்.

“நீதவான் சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்.” – ஒரு நாடாக நாம் எங்கே இருக்கிறோம்? என அனுரகுமார கேள்வி !

முல்லைத்தீவு நீதவான் சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில்  உண்மையைக் கண்டறிய வெளிப்படையான விசாரணைகளை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற முப்படைகள் மன்றத்தின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் நீதவான் கூறியது உண்மையென்றால் அது பாரதூரமான நிலைமையாகும்.

நீதிபதியின் கூற்றுகள் உண்மையாக இருந்தால், ஒரு நாடாக நாம் எங்கே இருக்கிறோம்? என்பதனை சிந்திக்க வேண்டும்.

ஒரு நீதிபதி அரசாங்கத்திற்கு பாரபட்சமில்லாத தீர்ப்பை வழங்கியதற்காக மரண அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேர்ந்தால், அது ஒரு தீவிரமான சூழ்நிலை ஆகும். அதேசமயம், நீதிபதியின் கருத்தில் உண்மை இல்லையென்றால், அதன் பின்னணியில் உள்ள சதியை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்றார்.

“சனல் 4, ராஜபக்ஷக்களுடன் பகை எனக்கூறுவது, உண்மையை மறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை.” – நாடாளுமன்றத்தில் அனுரகுமார திஸாநாயக்க!

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிகாரிகள் யாரேனும் கடமைகளை செய்யாவிட்டால் நாடாளுமன்றுக்கு அவர்கள் அறிவித்திருக்க வேண்டும். இதன் பின்னணியில் அரசியல் காரணம் தான் உள்ளது. 2015 இல் இல்லாது போன அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ராஜபக்ஷக்கள் முயற்சித்தார்கள்.

 

மீண்டும் புலிகள் வரப்போவதாகக் கூறினார்கள். ஆனால், 2017 இற்கு பின்னர் அந்தக் கதை அப்படியே மறைந்து விட்டது. இதன் பின்னர், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்தார்கள். சிங்கள மக்களுக்காக கருகலைப்பு கொத்து வழங்கப்பட்டதாகக் கூறினார்கள்.

 

கருக்கலைப்புச் செய்யும் ஆடை உள்ளதாகக் கூறினார்கள். எங்கே இப்போது இவைகள் எல்லாம்.?முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறிவிடுவார்கள் என்றும்கூட பிரசாரம் செய்தார்கள்.

சனல் 4 ஆவணப்படம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?இது தொடர்பாக கேட்டால் ராஜபக்ஷக்களுடன் சனல் 4 விற்கு கோபம் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

 

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையும் தானே செய்தி வெளியிட்டது. அப்படியென்றால் இந்தப் பத்திரிகையும் இவர்களுடன் பகையில் தானா உள்ளது? நிரூபமா ராஜபக்ஷ தொடர்பாக பண்டோரா ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆவணத்தை வெளியிட்ட சர்வதேச நிபுணர்களும் ராஜபக்ஷவினருடன் கோபத்திலா உள்ளார்கள்?

 

எனவே சனல் 4, ராஜபக்ஷக்களுடன் பகை எனக்கூறுவது, உண்மையை மறைக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை நசுக்கும் வகையில் புதிய சட்டமூலம் – அனுரகுமார திஸாநாயக்க எதிர்ப்பு !

ஊடகங்களை நசுக்கும் வகையில் அரசாங்கம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்புவது அந்த நிறுவனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்

அந்த ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த நாட்டில் தேர்தல்களை பிற்போடுவதன் மூலம் ஊடகங்களை அடக்கி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார்” அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

“மக்களுக்கு எதிராக ஒரு தோட்டாவை கூட பயன்படுத்தாதவர் சவேந்திர சில்வா” – அநுரகுமார திஸாநாயக்க

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு தண்டனை வழங்க முற்பட்டால் நாம் சவேந்திர சில்வா பக்கமே நிற்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாவுடன் எமக்கு சில விடயங்களில் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் இருந்ததை மதிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“மக்கள் எழுச்சியின் போது அதனை ஒடுக்குவதற்குத் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் மக்கள் பக்கம் நின்ற முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தேவையான நடவடிக்கையை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேற்கொள்ளவில்லை என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வா நடவடிக்கை எடுக்காததால் தான், அவர் விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. எனவே நீங்களும் அவ்வாறு இருக்க வேண்டாம் என மற்றைய தரப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கவே அவருக்கு எதிராக நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தோட்டாக்கள் பயன்படுத்தாமை தொடர்பில் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, அவருக்குத் தண்டனை வழங்கப்பட முயற்சி எடுக்கப்படுமானால் நாம் சவேந்திர சில்வாவின் பக்கம் நிற்போம்.

ஏனெனில் அன்று அவர் மக்கள் பக்கமே நின்றுள்ளார். இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்துள்ளார்” எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் தேர்தல் வரும்போது மட்டும் 13ம் திருத்தம் பற்றி பேசுகின்றனர் – அனுரகுமார திஸ்ஸ நாயக்க

“தென்னிலங்கை அரசியல்வாதிகள் தேர்தல் வரும்போது மட்டும் 13ம் திருத்தம் பற்றி பேசுகின்றனர்.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றுக்கும் மக்களின் ஆதரவு கிடையாது. மஹிந்தவில் இருந்து ரணிலுக்கும் ரணிலில் இருந்து மஹிந்தவுக்கும் அதிகாரம் மாறுவதாக இருந்தால் மட்டுமே தேர்தலை நடத்துவார்கள்.

ஆனால் இம்முறை தென்னிலங்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. திசைகாட்டிக்கு அதிக வரவேற்பு காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் கூட இளையோர்கள் மத்தியில் திசைகாட்டிக்கு ஆதரவு உள்ளது. இதனால் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் பயப்படுகின்றனர்.

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தேர்தலை நிறுத்த முயற்சித்தார். அது சாத்தியப்படவில்லை. நீதிமன்றம் ஊடாக தேர்தலை தடுக்க முயற்சித்தார். அதுவும் முடியவில்லை. அரச அச்சகருக்கு பணம் பெறாமல் வாக்குச்சீட்டை அச்சடிக்க வேண்டாம் என ரணில் கூறினார். திறைசேரி செயலாளருக்கு தேர்தலுக்கு பணம் வழங்க வேண்டாம் என ரணில் கூறினார். ரணில் விக்ரமசிங்க தேர்தலை குழப்பவே முயற்சிக்கின்றார்.

கடந்த காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசியல் ஜனநாயகத்தை குழப்பினார். இன்று அவரது மருமகன் ரணில் ஜனநாயகத்தை குழப்புகிறார்.

மார்ச் 20 உள்ளூராட்சிமன்ற காலம் முடிவடைகின்றன. அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி செய்வது யார்?

அரசியல் யாப்பை மீறும் ஜனநாயகத்தை குழப்பும் ஆட்சியர்களின் உத்தரவுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் அரச அதிகாரிகளும் கட்டுப்பட வேண்டுமா? அவர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்நாட்டை மாற்றியமைக்க வேண்டும் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதனை தேசிய மக்கள் சக்தியாலேயே செய்ய முடியும்.

தினேஷ் சொல்கிறார் ரணில் கள்வர் என்று – ரணில் சொல்கிறார் மஹிந்ந கள்வர் என்று – யார் யாருக்கு தண்டனை வழங்குவது. அவர்களை அவர்களே பாதுகாக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்தால் திருடர்களை வெளியேறவிடாது விமான நிலையத்தை மூடுவேன் என மைத்திரிபால கூறினார். அதன் பின்னர் மகிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கினார். மைத்திரிபால. மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கும் தரப்பாக திசைகாட்டி இருக்கும்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகும் வரை மலட்டு கொத்து இருந்தது அதன் பின்னர் மலட்டு கொத்து எங்கு போனது. நாங்கள் யுத்தம் செய்தோம் எங்கள் பிள்ளைகள் யுத்தம் செய்யவேண்டுமா?

தென்னிலங்கையில் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப வடமாகாண மக்கள் மீது திருப்ப முனைகிறார். அதற்கமைய 13ம் திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்.தேர்தல் வரும்போது மட்டும் 13ம் திருத்தம் பற்றி பேசுகின்றனர் என்றார்.

“தமிழ் மக்களின் காணிகளை  உடனடியாக விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.” – அனுரகுமார

“தமிழ் மக்களின் காணிகளை  உடனடியாக விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

9ஆவது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பித்து வைத்ததையடுத்து இன்று இரண்டாவது நாளாக இடம்பெறும் விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“வடக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு எந்த விவாதங்களும் அவசியமில்லை. அத்துடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை கூட்டுகின்றார்.

எதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை கூட்ட வேண்டும், அதில் எந்த பயனும் இல்லை என்பதாலேயே அதில் நாம் கலந்து கொள்ளவில்லை.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகிந்தவும் இணைந்து தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு ஆவணத்தை தயார் செய்யுங்கள் அதன் பின்னர் அதனை விவாதத்திற்கு உட்படுத்துங்கள், அப்போது ஒரு தீர்க்கமான முடிவினை எட்டமுடியும். மாறாக சர்வகட்சி அரசாங்கத்தை கூட்டி கலந்துரையாடுவதால் எந்த பயனும் இல்லை.

தமிழ் மக்களின் காணிகளை அரச நிறுவனங்களோ அல்லது இராணுவத்தினரோ கையகப்படுத்தியிருந்த அதனை உடனடியாக விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் இதனை எதற்காக விவாத பொருளாக மாற்றி ரணில் விக்கிரமசிங்க அதனை தனது கொள்கை பிரகடன உரையில் குறிப்பிடுகின்றார்.

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து ரணில் ஒரு விடயத்தை தெரிவிக்கின்றார் ஆனால் பிரதமர் வேறு ஒன்றை சொல்லி மக்களை குழப்புகின்றனர்” எனவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பேஸ்புக்கில் என்றோ ஜனாதிபதியாகிவிட்டார் அனுரகுமார – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அநுரகுமார ஏற்கனவே ஜனாதிபதி ஆடையை அணிந்து முகநூலில் ஜனாதிபதியாகி விட்டார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

“அவர் ஜனாதிபதியாக கனவு கண்டாலும் மக்களின் இதயங்களில் ஒரு போதும் ஜனாதிபதியாக முடியாது. அதனால் தான் அந்த கனவை தொடருமாறு அனுரகுமாரவிடம் கூறுகின்றோம். நாம் களப்பணியாற்றி இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட பொதுஜன பெரமுனவின் வழிநடத்தல் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.