அனுராதபுரத்து பெண்ணுக்கு குரல் கொடுக்கும் யாழ் பல்கலை தங்கள் கலைப்பீடத்துக்குள் நடப்பதற்கு குரல் கொடுக்க மறுக்கின்றது !
சர்வதேச ரீதியாகவும் நாடு தழுவிய ரீதியிலும் மகளிர் தினம் தொடர்பான செயற்பாடுகள் நடைபெற்றுவரும் நாட்களில் ஒரு பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்ட செய்தி வெளிவந்திருந்தது. இது இலங்கை தேசத்துக்கு அவமானத்தை தருகிறது என அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காலம் காலமாக இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை நிலவி வருகிறது. அரசுக்கு எதிரான நியாமான புரட்சிகளின் போதும் இன விடுதலைப் போராட்டத்தின் போதும் நூற்றுக்கணக்கான பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். பாலியல் துஷ்பிரயோகம் என்பது இனமுறுகலில் ஆதிக்கத்தனத்தை வெளிக்காட்டும் அங்கீகரிக்கப்பட்ட கருவியாக பயன்பட்டது. அதனால் ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள். அவற்றுள் வெளிவந்த கதைகளை விட சமூக கலாசார இரும்புக் கதவுகளைத் தாண்டி வெளிவராத செய்திகள் ஏராளம். இன்றும் அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இச்செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பது ஒரு பக்கமாக இருக்க, யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தமது விரிவுரையாளர்களின் மாணவிகள் மீதான பாலியல் சேட்டைகள் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தொடர்ந்து மௌனம் காத்து வருவது அண்மை காலமாக பலரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது.
கலைப்பீடாதிபதி உட்பட அரசறிவியல் துறைத்தலைவர் என பலர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் கூட யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் இந்த தகவல்கள் தெரிந்துள்ள போதிலும் அவர்கள் மௌனமாக இந்த சமூக சீர்கேடுகளுக்கு துணைபோகும் தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
