அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்திலிருந்து வெளியேறியது ! அனுரவின் கிளீன் சிறிலங்காவின் எதிரொலியா?
இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் குறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களைக் காரணம் காட்டி, இன்றுவரை இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இது ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும், இலங்கையில் எதிர்கால திட்டங்களுக்கு தங்கள் நிறுவனம் திறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு புதிய குழு நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதானி குழுமம் மற்றும் இலங்கை அதிகாரிகளின் அதிகாரபூர்வ அறிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி முழுமத்தின் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் சமூக மட்டங்களில் எழுந்திருந்தன. கடந்த 2022ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது மன்னாரில் தொடங்கப்பட இருந்த காற்றாலை திட்டம், எந்த விதமான போட்டியாளரும் இன்றி அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ரணில் விக்ரமசிங்கே அரசும் அந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுத்தது.
இதனிடையே, இலங்கையின் எரிசக்தி துறைக்குள் அதானி நிறுவனம் பின்வாசல் வழியாக நுழைந்து விட்டது என்று அன்றைய எதிர்த்கட்சிகள் குற்றஞ்சாடின. அதேபோல் மன்னார் பகுதிவாசிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், முக்கியமான பறவைகள் சரணாலயம் உயிர்பல்வகைமைக்கான பாதிப்பு மற்றும் பிற சுற்றுச்சூழல் இடர்பாடுகளை சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன.
2024 அக்டோபரில், புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் காற்றாலை மின் திட்டத்திற்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு வழங்கப்பட்ட ஒப்புதல்களை மறுபரிசீலனை செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த முடிவு அக்டோபர் 7, 2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது. நவம்பர் 14 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டி, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இறுதி செய்ய கூடுதல் அவகாசம் கோரியது.
கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதானி குழுமம் மீது முன்வைக்கப்ப்பட்ட ஊழல் குற்றச்சாட்டையடுத்து அனுர அரசு ஜனவரியில் மன்னார் மற்றும் பூநகரியில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்சார திட்டத்திற்கான விலைக் குறித்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீளாய்வு செய்ய குழுவொன்றை அமைத்தது. இந்தப் பின்னணியிலேயே அதானி குழுமம் குறித்த திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது