வெள்ளைக்கார அடேல் அன்ரிக்கு; அடேல் பிரித்தானியாவுக்கு முதல் நானே விசாரணையை தொடங்கினேன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா !
இராணுவத் தளபதிகளுக்கு தடையுத்தரவு கொண்டு வந்தது போல் வெள்ளைக்கார அடேல் பாலசிங்கத்துக்கும் தடையுத்தரவு வழங்கப்பட வேண்டும் என பெரும்பான்மைச் சமூகப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். பிரித்தானியாவின் தடையுத்தரவு இலங்கையில் தங்களால் மேற்கொள்ளப்படும் இன நல்லிணக்க முயற்சிகளைப் பலவீனப்படுத்தும் என தேசிய மக்கள் சக்தி மட்டத்தில் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பொன்சேகா மேலும் கருத்து வெளியிட்ட போது, ஜகத் ஜயசூரிய, வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள். போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்களில் இருவரைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் விமர்சித்துள்ளேன். அதேபோன்றே போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூறமுடியும் என தெரிவித்தார்.
இதற்கிடையே கிழக்கு தமிழ் கூட்டணி அமைக்கப்பட்டதன் தாக்கத்தினாலேயே பிரித்தானியா தனக்கு எதிராக தடையுத்தரவைப் பிறப்பித்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
தடையுத்தரவை பெற்ற இராணுவத்தளபதிகள் சார்பில் கருத்து வெளியிட்டவர்கள் பிரித்தானியா காஸாவில் பெண்களையும் குழந்தைகளையும் வகைதொகையில்லாமல் கொன்று குவித்துவிட்டு இலங்கையில் நாடகம் போடுகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளனர். இராணுவத் தளபதிகளுக்கு எதிரான பிரித்தானியாவின் தடைகளைப் பயன்படுத்தி சிங்கள – தமிழ் அமைப்புகன் இனவாதத்தைத் தூண்டிவிட்டு ஜேவிபி இன் ஆட்சியைக் கவிழ்க்கலாம் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெறலாம் எனக் கணிக்கின்றன.
