இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 – 30 நாட்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை விட அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு  நேற்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (25) வரை 1,052 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகளில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 4 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறிய 1006 குற்றச்சாட்டுகளும், 42 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று முன்தினத்தில் மாத்திரம் 127 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டத்தினை மீறியமை குறித்து 105 முறைப்பாடுகளும், 19 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான எவ்வித பிரச்சாரத்தையும் ஆரம்பிக்காத 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஒரு கூட்டத்தைக்கூட நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவருக்கு வாக்குச் சீட்டு அச்சடித்தல் உள்ளிட்ட தேவைகளுக்கான தேர்தல்கள் ஆணைக்குழு சுமார் ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமை சிக்கலான நிலை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் 10 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் சுவரொட்டிகள் மற்றும் பாரிய கட்அவுட்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளமை மிகவும் நல்ல விடயம் எனவும் மேலும், தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்

நமது ஆட்சியில் தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் – அனுர குமார திசாநாயக்க

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழ் அதிகாரியின், தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் நமது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

வளமான நாடு சுகமான வாழ்வு என்றும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை வெளியிடப்பட்டது.

 

கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று இந்த கொள்கைப்பிரகடனம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் விடுதியில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதலாவது பிரதிகள், மத தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த அநுரகுமார திஸாநாயக்க,

 

”நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை எமது அரசாங்கத்தில் நீக்கப்படும். அதற்கு மாற்றீடாக புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவரவுள்ளோம்.

 

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் அமுல்படுத்துவோம்.

 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015-2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.

 

குறிப்பாக புதிய சந்தனையில் அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை நாம் உருவாக்குவோம்.

 

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம்.

 

அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமைகளில் மாற்றம் ஏற்படவேண்டும். தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை நாம் நாட்டில் கட்டம் கட்டடமாக செயற்படுத்துவோம்.

 

பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

 

பாடசாலை கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும் மின்சார கட்டணத்தையும் குறைப்போம்.

 

இதற்கு மக்களின் அங்கீகாரம் எங்களுக்கு மிகவும் அவசியமானது” என அநுரகுமார திஸாநாயக்க மேலும் தொிவித்தாா்.

வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி !

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர தெரிவித்துள்ளார்.தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும் மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இதேவேளை, 13,389 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 228 தபால் வாக்களர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வன்னி தேர்தல் தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சரத்சந்திர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.