வன்னியில் விடுவிக்கப்படாதிருக்கும் பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் விடுதலைப் புலித் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பில் உள்ளமை தெரியவந்திருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களிடம், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் முல்லைத்தீவிலுள்ள பாதுகாப்பு வலயத்தில் இருந்துகொண்டு ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர் எனக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன” என ஜனாதிபதி செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அதிகாரிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொலைபேசியில் நடந்த உரையாடலுக்கு நோர்வே ஏற்பாடு செய்து கொடுத்ததாக வெளியான குற்றச்சாட்டுக்களை நோர்வேக்கான தூதுவர் மறுத்திருந்தார். இந்த நிலையிலேயே விடுதலைப் புலிகளுக்கு இன்னமும் ஐ.நாவுடன் தொடர்பிருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.