பயங்கர வாதத்தைத் தோற்கடித்து பொதுமக்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத் திட்டம் சர்வதேச சமூகத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் இன்று காலை கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய சேவையைப் பூர்த்தி செய்யும்போது நாட்டின் இறைமை, ஆட்புள ஒருமைப்பாடு மற்றும் மக்களின் சுதந்திரத்தைக் காட்டிக்கொடுக்க அரசாங்கம் தயாரில்லை. சுமார் 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பை சர்வதேச சமூகம் வற்புறுத்தும் அளவுக்கு அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. இந்த விடயத்தில் வெளிவிவகார அமைச்சுக்கு பாரிய பொறுப்புக்கள் காணப்பட்டன.
இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இலங்கைக்காக நேரடியாகக் குரல் கொடுக்கின்றன. இலங்கையின் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை என அந்த நாடுகள் எப்போதும் கூறி வருகின்றன. இலங்கை அதன் நட்புறவு நாடுகளோடு மிகவும் ஒத்துழைப்புடனும் வெளிப்படையாகவும் செயற்பட்டு வருதே இதற்குக் காரணமாகும். இதன் ஓர் அங்கமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் லிபியாவுக்குப் பயணமாகவுள்ளார் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.