“வட, கிழக்கில் 45 ஆயிரம் யுத்த விதவைகள்’ வடக்கு, கிழக்கில் 85 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இவர்களில் 45 ஆயிரம் பேர் யுத்தத்தால் விதவைகளானவர்களென தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கடந்த ஜனவரியிலிருந்து இன்றுவரை கிழக்கு மாகாணத்தில் 46 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓய்வூதிய சட்டமூல திருத்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
“யுத்தத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் தினமும் அதிகரித்து வருகின்றது. வடக்கு, கிழக்கில் மட்டும் 85 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இதில் கிழக்கில் 49 ஆயிரம் பேரும் வடக்கில் 36 ஆயிரம் பேரும் உள்ளனர். இந்த 85 ஆயிரம் விதவைகளில் 45 ஆயிரம் பேர் யுத்தத்தால் விதவைகளானவர்கள். இவர்களில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் 24 ஆயிரம் பேர் உள்ளனர். இலங்கையில் அதிகமான விதவைகளைக் கொண்ட மாகாணமாக கிழக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதைவிட கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் 173 பேர் காணாமல்போயுள்ளனர். 2009 ஜனவரிக்கு பின்னர் மட்டும் இன்றுவரை 46 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வகட்சிக்குழு இதுவரை 107 தடவைகள் கூடியுள்ளது. இதில் ஒவ்வொரு தடவையும் பங்குபற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் பங்கேற்கவில்லையென ஜனாதிபதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆனந்தசங்கரியைத் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று நினைத்துவிட்டார் போலுள்ளது. சர்வகட்சிக் குழுக் கூட்டத்திற்கு இன்றுவரை எமக்கு எந்த வித அழைப்பும் உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவில்லை.
மதத்தலங்களில் வைத்து புலிகளால் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசு கூறுகின்றது. மதத்தலங்களில் வைத்து படையினரால் 1246 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசு என்ன கூறுகின்றது.
1990 ஜூன் வீரமுனை பத்ர காளியம்மன் ஆலயத்தில் வைத்து நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோன்று 1993 நவம்பர் யாழ். குருநகர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1994 ஆகஸ்ட் நவாலி தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, 1997 ஜூன் வவுனியா வவுனிக்குளத்தில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 2005 மார்ச் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 2005 டிசம்பர் மட்டக்களப்பில் தேவாலயத்திற்குள் வைத்து எமது பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு இன்னும் எத்தனை தாக்குதல்களை அரசு நடத்தியுள்ளது. எனவே யுத்தம் நிறுத்தப்படுவதன் மூலமே விதவைகள் உருவாவதையும் அநியாய உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.
palli
ஜயா பெருமக்களே இந்த கணக்கு வழக்கு வேண்டாம் அவைகளை நாம் விஜயகான் சார் படத்தில் பார்த்து விட்டோம். உடனடி தேவை அவர்களுக்குரிய வாழ்வுக்குரிய வேலை திட்டம்(வருமானம்) இது தேவைமட்டுமல்ல அத்தியவசியமும் கூட தயவு செய்து செயல்படுங்கள் அவர்கழுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுங்கள். இப்படியான விடயங்களுக்கு சர்வதேசம் எப்போதும் கை கொடுக்கும்.