ஐ.தே.கவின் ஒப்பந்த காலத்தில் 50க்கும் மேற்பட்ட உளவுப்படை தலைவர்கள் புலிகளால் கொலை

anura-piriyadarshana-yappa.jpgஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் தான் உளவுப்படைத் தலைவர்கள் உட்பட ஐம்பது அதிகாரிகளும் சுமார் ஆயிரம் உளவு முகவர்களும் புலிகள் இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். இதனை அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுரபிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார்.

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் இயக்கத்தினர் ஆயுத சேகரிப்பிலும், உளவுப் படைத் தலைவர்களையும், அதிகாரிகளையும், உளவு முகவர்களையும் படுகொலை செய்வதிலும் ஆள ஊடுருவும் படையைப் பலவீனப் படுத்துவதிலும் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் தினைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர், “புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஒருபோதும் வெளியார் குடியமர்த்தப்படமாட்டார்கள். அதற்கான எண்ணமும் அரசாங்கத்திடம் கிடையாது. இப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் அப்புறப்படுத்தப்பட்டதும் அப்பகுதிகளில் வசித்த மக்களே மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னரே மிலேனியம் சிட்டி காட்டிக்கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தான் புலிகள் எமது உளவுப் படைத் தலைவர்களையும், அதிகாரிகளையும், உளவு முகவர்களையும் படுகொலை செய்யத் தொடங்கினார்கள்.

இக்காலப்பகுதியில்தான் புலிகள் தங்களது படைகளுக்கு சிறுவர்களை பெருமளவில் சேர்த்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் சமர்ப்பித்த அறிக்கையொன்றில் புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் 4700 சிறுவர்களைப் புலிகள் இயக்கத்தினர் தங்களது படையில் சேர்த்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையொன்றில் 2003ம் ஆண்டு 709 சிறுவர்கள் புலிகளால் கடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிந்தது. தமிழர் புனர்வாழ்வு கழக அலுவலகம் வவுனியாவில் திறக்கப்பட்ட பின்பே சிறுவர்கள் அதிகளவில் கடத்தப்பட்டனர். ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை புலிகள் இயக்கத்தினர் பலமடைவதற்கே உதவியது. இக்காலப் பகுதியை ஆயுத சேகரிப்புக்கும் ஆள்திரட்டலுக்கும் அவர்கள் பெரிதும் பயன்படுத்திக் கொண்டனர் என்றார்.

Show More
Leave a Reply to Kusumpan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Kusumpan
    Kusumpan

    அநுரபிரியதர்ஷன யாப்பா! என்ன பாப்பா கதை கதைக்கிறீர். உளவுபார்ப்பவர்களை புலிகளை சுடுவார்கள்தான் என்ன கூட்டிச் சென்று விருந்தா வைக்கச் சொல்கிறீர். இப்ப என்ன குறைவோ பலவாயிரக்கணக்கிலை சிங்கள இராணுவமும் இராணுவத்தளபதிகளும் விழுவது எந்தக்கணக்கில் சேர்க்கப்போகிறீர்……

    Reply