புலிகள் சிறியதொரு பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளதால் அவர்களின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை தற்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புலிகள் தாக்குதல் நடத்தியும், துப்பாக்கிச் சூடுகளை மேற் கொண்டும் பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களைநோக்கி வருவதைத் தடுத்து வருகின்ற போதிலும் அவை தோல்வியில் முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 619 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களில் 478 பொது மக்கள் இராணுவத்தினரிடமும் 139 சிவிலியன்கள் கடற்படையினரிடமும் தஞ்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
478 பொது மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரை நோக்கி வருகை தந்துள்ளனர். இவர்களில் 190 சிறுவர்களும் அடங்குவர்.இதேவேளை, பளமாத்தளன் பிரதேசத்திலிருந்து படகுகள் மூலம் 139 பொதுமக்கள் தப்பி பருத்தித்துறை பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர்.
படகுகளில் வெள்ளைக் கொடிகளை பறக்க விட்டபடி வந்த இந்த பொது மக்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். 47 ஆண்கள், 38 பெண்கள், 27 சிறுவர்கள் மற்றும் 27 சிறுமிகள் இவர்களில் அடங்குவர்.இதேவேளை ஐயம்பெருமாள் பிரதேசத்தை நோக்கி மேலும் இருவர் வருகை தந்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.