விடு தலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போதும் வன்னியில் யுத்தம் நடைபெறும் பகுதியில் இருப்பதாகவும் அவர் நாட்டைவிட்டு வெளியேறவில்லையெனத் தாங்கள் கருதுவதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மிகவும் சுருங்கிவிட்ட நிலையில், புலிகளின் தலைவர் இருக்கும் இடம்குறித்தும் அரசும் படைத்தரப்பும் பல்வேறு ஊகங்களையும் தெரிவித்துவந்தன.
தற்போது கூட அவர் தென்னாபிரிக்காவில் அல்லது மலேசியாவில் இருப்பதாகக் கூட ஊகங்கள் தெரிவிக்கும் நிலையிலேயே அவர் வன்னியில் யுத்த முனைப் பகுதியில் இருப்பதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரன் தற்போதும் அங்கிருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகக் கூறும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிரபாகரன் அங்கிருப்பதாலேயே புலிகள் அங்கு கடும் எதிர்ப்பைக் காட்டி வருவதாகத் தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பைச் சுற்றிக் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. எனினும் படையினர் எப்போது புதுக்குடியிருப்பு நகரைக் கைப்பற்றுவார்களெனக் கூற முடியாதுள்ளதாகவும் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார். எனினும், படையினர் தொடர்ந்தும் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.